யெஸ் மேன்
ஜிம் கேரியின் காமெடிப் படம்தான். வசூலில் சாதனை புரிந்தாலும் இந்தப் படத்தை விமர்சகர்கள் பெரிதாக மதிக்கவில்லை. இருந்தும் எனக்கு இது எழுத வேண்டிய படம் என்று தோன்றுகிறது. காரணம் கதைக் கரு.
தோல்வி மனப்பான்மையுடன், சமூக உறவுகளிலிருந்து விலகி, புதிதாக வருபவை அனைத்தையும் மறுப்பவன் எப்படித் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறான் என்பதுதான் கதை, நம் கலாச்சாரச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான கதையாக இதை நான் பார்க்கிறேன்.
மனைவி பிரிந்தவுடன் சற்று வெறுப்புடனும் கசப்புடனும் வாழ்க்கையை நோக்குகிறான் கார்ல். நண்பர்கள் குழாமைவிட்டு விலகுகிறான். வங்கி வேலையிலும் திருப்தி இல்லை. தனிமையும் சுய பச்சாதாபமும் ஆட்கொள்ள அனைவரையும் விட்டு விலகி பொய் சிரிப்போடு போலி வாழ்க்கை வாழ்ந்துவருகிறான்.
அப்போது நண்பனின் வற்புறுத்தலால் ‘யெஸ்’ பட்டறைக்குச் செல்கிறான். அங்கு சுய உதவி ஆசான் டெரன்ஸ் பண்ட்லியின் ஆரவாரப் பேச்சும், நாடகத் தன்மையான செயல்களும் கார்லைக் கவரவில்லை. ஆனால் யதேச்சையாக கார்லைத் தேர்ந்தெடுத்த டெரன்ஸ் அவனை நேருக்கு நேர் கேள்விக் கணைகள் தொடுத்துக் கடைசியில், “இனி வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் “யெஸ் சொல்ல வேண்டும். நோ சொல்லக் கூடாது” என்று சபதம் பெறுகிறார். கார்ல் அந்தக் கூட்டத்தில் கதாநாயகன் அந்தஸ்தைப் பெறுகிறான். அவன் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நடக்கத் தொடங்குகிறது.
வழியில் உதவி கேட்டவனுக்கு மறுக்காமல் “யெஸ்” சொல்லி, உதவப் பணமின்றி பெட்ரோல் பங்குக்குச் செல்கிறான். அங்கு ஆலிசன் என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவளது நட்பு கிடைக்கிறது. இரு சக்கர வாகனத்தில் பின்னமர்த்திச் சென்று பிரிகையில் முத்தமிட்டுச் செல்கிறாள். ஒரு பிச்சைக்காரனுக்கு மறுக்காமல் உதவியது முதலில் சிரமத்தில் மாட்டி விட்டாலும் நடந்தவை அனைத்தும் நல்லதாக அமைய ‘யெஸ்’ கொள்கையில் நம்பிக்கை வைக்கிறான்!
எல்லாவற்றுக்கும் ஆமாம் போட முதலாளியுடன் நல்லுறவு பெறுகிறான். வங்கிக் கடன்கள் அதிகம் கையெழுத்திட வாடிக்கையாளர்கள் மகிழ்கிறார்கள். பதவி உயர்வு வருகிறது. புதிய நண்பர்கள் சேர்கிறார்கள். கொரிய மொழி படிக்க நேர்கிறது. விமானம் ஓட்டப் பழகுகிறான். மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயலும் ஒருவனை, கிடார் வாசித்து அவன் மனதைக் கலைத்து, தடுக்கிறான்.
அலிசனை மீண்டும் சந்திக்க, இருவரும் காதல் கொள்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கையில் கார்ல் தயாராக இல்லாவிட்டாலும் “யெஸ்” சபதத்தால் சரி என்று சொல்லிவிடுகிறான்.
இருவரும் திடீர் விமானப் பயணத்துக்குத் தயாராகையில் எஃப்.பி.ஐ. கார்லைக் கைதுசெய்கிறது. தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகப்படுகிறது. கொரியன் மொழி படித்தல், உர நிறுவனம் ஒன்றுக்குக் கடன் அளித்தல், விமான வகுப்பு, இராணியன் ஒருவனைச் சந்தித்தது, கடைசி நேர விமானப் பயணம் எனச் சம்பந்தமில்லாமல் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப் போட்டு அவனைக் கேள்விகளால் துளைக்கிறது விசாரணைக் குழு. அவர்களிடம் தனது “யெஸ்” சபதம் பற்றியும் அதன் காரணமாகவே அனைத்தும் நிகழ்ந்தன என்றும் உண்மையைக் கூறுகிறான். அவர்களும் தீர விசாரித்துப் பின்னர் கார்லை விடுவிக்கிறார்கள்.
ஆக, கல்யாணத்துக்கும் விருப்பமில்லாமல்தான் கார்ல் “யெஸ்” சொன்னான் என்று அறிந்ததும் அலிசன் மனமுடைந்து பிரிகிறாள். இதனிடையே பிரிந்த மனைவி அவள் நண்பனுடன் உறவை முறித்துவிட்டு கார்லிடம் வருகிறாள். இரவு தங்க அழைக்கிறாள். கார்ல் “நோ” சொல்கிறான்.
“யெஸ்” பயிற்சி நடத்தும் டெரன்ஸிடம் கார்ல் பேச, “கண்மூடித்தனமாக எல்லாவற்றிற்கும் “யெஸ்” சொல்ல வேண்டியதில்லை. மனமுவந்து புது அனுபவங்களை ஏற்கத் தாயாராக வேண்டும் என்பதுதான் சாரம்!” என்று விளக்கத் தெளிவு பெறுகிறான்.
பின்னர் ஒரு விபத்தில் சிக்கும் அவன் மருத்துவமனை உடையில் பைக்கில் விரைந்து வந்து காதலியிடம் வந்து மன்னிப்பு கோர, இருவரும் முத்தமிட...சுபம்.
பக்கா தமிழ் படம் பார்த்த உணர்வு வருகிறதா? ஜிம் கேரியின் கோமாளித்தனமும், நகைச்சுவை வசனங்களும், மென்மையான காதல் காட்சிகளும், அருமையான இசையும் படத்தை ஒரு நல்ல ஜனரஞ்சகப் படமாக மாற்றுகின்றன. ஆனால் படத்தைக் கூர்ந்து நோக்கினால் மெலிதான இழையில் வாழ்க்கையைப் பற்றிய அலசலும் புரிதலும் இருக்கும்.
கடந்த காலத்தின் கசப்பில் நிகழ்காலத்தை ரசிக்காமல் வாழ்வோர் இங்கு எத்தனை எத்தனை பேர்? ஒருமுறை தவறிவிட்டதால் வரும் வாய்ப்புகளையெல்லாம் மறுப்பவர்கள் அதிகம். மேற்குலகின் கலாச்சாரம்போலப் பரந்த மனம் கொண்ட திறந்த கலாச்சாரம் அல்ல நம்முடையது. காதல், கல்யாணம், வேலை, லட்சியம் என அனைத்திலும் முதல் அனுபவங்களால் மீள முடியாதவர்கள் பலர். பயம், நம்பிக்கையின்மை, சுய பச்சாதாபம், நிச்சயமின்மை என ஆயிரம் உள் மனத் தடைகள் உள்ளன.
வாய்ப்புகள் பல நேரங்களில் பிரச்சினைகள்போல வேடமணிந்து வரும். எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கலாம் எனத் திறந்த மனதுடன் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என்பதை இந்தப் படம் சொல்கிறது. ஆனால் எதையும் சடங்காகச் செய்யாமல், மனமுவந்து செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது.
பாதுகாப்பு பற்றிய பயத்தில் எதையும் செய்யாமல் இருப்பது பேராபத்து. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கையில் பயத்துடன் நிறைய வாய்ப்புகளை மறுப்பதைவிட இரு கை நீட்டி அவற்றை அழைத்துக்கொண்டால் வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.
இயக்குநர்களே, நடிகர் ஆர்யா கால்ஷீட்டைப் பிடிங்க. இதை நல்ல Rom com (ரொமான்டிக் காமெடி) படமாகப் பண்ணலாம். அருமையான செய்தியுடனும்கூட!
தொடர்புக்கு: [email protected]
நன்றி - த இந்து