Friday, June 02, 2023

ஏபிசி ஜூஸ் என்றால் என்ன? எந்த விகிதத்தில் அதை தயாரிக்க வேண்டும் ? @ கல்கி மின் இதழ் 29/5/2023


ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் எப்போதும்  பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள் என அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சமீபகாலமாக ஏபிசி ஜூஸ் குடித்தேன் என சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடுவது ஃபேஷன் ஆகிவிட்டது. இது என்ன? கேள்விப்படாத ஜூஸ்? என புருவத்தை உயர்த்த வேண்டாம்.

ABC ஜூஸ் என்பது, A ஃபார் ஆப்பிள் + B ஃபார் பீட்ரூட் + C ஃபார் கேரட் மூன்றும் சேர்த்து செய்யப்படும் ஒரு ஜூஸ்.

இவை மூன்றிலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும ஏராளமான மினரல்கள் நிறைந்திருக்கின்றன. ABC ஜூஸில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இது, உடலில் உள்ள கழிவுகளை அகற்றி சருமம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து பண்புகளால் எடை குறைப்புக்கு உதுவுகிறது.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன.

இரத்தசோகை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.

இதை எந்த விகிதத்தில் தயாரிப்பது? ஆப்பிள் ஒரு முழு பழம் , பீட்ரூட் சிறியது ஒன்று , நான்கு முழு கேரட் இவைகளை  சிறு துண்டுகள் ஆக்கி மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் ஏபிசி ஜூஸ் ரெடி.

இதில் கவனிக்க வேண்டியது பீட்ரூட் அளவு தான். பெரிய பீட்ரூட் போட்டால் குடிக்க ஏதுவாக இருக்காது. எனவே சின்ன சைஸ் பீட் ரூட் போதும் . அஸ்கா சர்க்கரை அலல்து வெள்ளை சர்க்கரை சேர்க்க வேண்டாம். அதே போல் ஐஸ் துண்டும் வேண்டாம். தேவைப்பட்டால் பசும்பால் ஒரு டம்ளர் சேர்த்துக்கொள்ளலாம். பாக்கெட் பால் வேண்டாம். 

இதை எப்போது சாப்பிடுவது? காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பழச்சாறுகள் எப்போதும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது சிறந்தது.