Friday, April 28, 2023

அயோத்தி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி) @ ஜீ 5,

   


நூறாவது  நாள்  என்ற  க்ரைம் த்ரில்லர்  படத்தைப்பார்த்த  ஆட்டோ  சங்கர்  தான்  செய்த  பல  குற்றங்களுக்கு  வழிகாட்டியாக  அந்தப்படம்  அமைந்தது  என  பேட்டி  அளித்தான்.  ஸ்பைடர் மேன்  படத்தைப்பார்த்து  மொட்டை  மாடியிலிருந்து  குதித்து  சாகசம்  செய்ய  முயற்சித்து  காயம்  அடைந்தவர்  பலர் . கமல்  நடித்த   விக்ரம்  பாகம் 1  படம்  பார்த்து  1989ல்  சிக்கய்ய  நாயகர்  காலேஜ் , ஈரோடு  மாணவன்  பாபு  உயரமான  இடத்தில்  இருந்து  குதித்து  தன்  இடது  காலை  முறித்துக்கொண்டார். பொதுவாக  சினிமா  என்பது  நமக்கு  ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும்  ஊடகமாகவே  பார்க்கப்படுகிறது. படத்தின்  நாயகன்  போல்  சாகசம்  செய்ய  பலருக்கும்  ஆசை


நமக்கு  அறிமுகமான, பழக்கமான  நண்பர்கள்  அல்லது  உறவினர்களுக்கு  உதவி  செய்வது  எல்லோரும்  செய்வது , ஆனால்  நமக்கு  அறிமுகம்  இல்லாத  புதியவர்களுக்கு  எந்த  விதமான  பிரதிபலனும்  எதிர்பாராமல்  உதவுவதுதான்  மனைத  நேயத்தின்  மகத்தான  சிறப்பு  என்னும்  பிரமாதமான  கருத்தை  உள்ளடக்கி  நிகழந்த  ஒரு  உண்மை  சம்பவத்தின்  அடிப்படையில்  எழுதப்பட்ட  ஒரு  திரைக்கதை  இது . இந்த  ஆண்டின் சிறந்த  திரைக்கதை , சிறந்த  படம், சிறந்த  வசனம்  என  பல  விருதுகளைக்குவிக்க  தகுதி  உள்ள  அற்புதமான  படம் இது 


இந்தப்படத்தைப்பார்த்த  மக்களில்  10 %  பேராவது  தங்கள்  வாழ்க்கையில்  யாருக்காவது  ஏதாவது  உதவி  செய்ய  வேண்டும்  என  முடிவு  எடுத்தால்  அதுவே  இயகுநருக்குக்கிடைக்கும்  வெற்றி


ஸ்பாய்லர்  அலெர்ட்


தீபாவளி  அன்று  கதை  துவங்குகிறது . அயோத்தியைச்சேர்ந்த  ஒரு  குடும்பம்  அப்பா , அம்மா,  மகள் , மகன்  என  நால்வர்  புனித  யாத்திரையாக  தமிழகம்  ராமேஸ்வரம்  வருகிறார்கள் 


 மதுரை  டூ  ராமேஸ்வரம்  டாக்சியில்   பயணிக்கும்போது  முன்  கோபியான  அப்பா  டிரைவருடன்  தேவையற்ற  வாக்குவாதத்தில்  ஈடுபட  கார்  விபத்துக்கு  உள்ளாகிறது .மற்றவர்களுக்கு  லேசான  காயம். அம்மாவுக்கு  மட்டும்  படுகாயம்.  ஆஸ்பத்திரிக்கு  அழைத்துச்செல்லும்  வழியில்   இறந்து  விடுகிறார்.


 இறந்த  அம்மாவின்  உடலை  விமானத்தில்  கொண்டு  செல்ல  பல  சிக்கல்கள்  இருக்கின்றன .  டாக்சி  டிரைவரின்  நண்பனான  நாயகன்  இந்த  குடும்பத்திற்கு  உதவி  செய்து  எப்படி  அவர்க்ளை  ஊருக்கு  அனுப்பி  வைக்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை 


அப்பாவாக  ஹிந்தி  நடிகர்  யஷ்பால்  சர்மா  கிட்டத்தட்ட வில்லன்  ரோல் .  பெண்களை  மதிக்காத ஆனால்  மத  நம்பிக்கைகள்  கொண்ட  மூர்க்கத்தனம்  நிரம்பிய  மூடன்  கேரக்டர்  டிசைன்  அருமையாக  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரிடமும்  சண்டை  போடும்  கேரக்டரை  அசால்ட்டாக  செய்து  ஆடியன்சின்  வெறுப்பை  சம்பாதிக்கறார்


அம்மாவாக  அஞ்சு  அஸ்ராணி  அந்தக்கால  அம்மாவாக  கணவனுக்கு  கட்டுப்பட்டவராக  பாந்தமாக  வந்து  போகிறார்.  பல  காட்சிகளில்  பார்வையாலேயே  நடித்திருக்கிறார்


மகளாக , நாயகியாக  ப்ரீத்தி அஸ்ராணி புது  வரவு . அப்பாவிடம்  வெடித்து எழும்போது  அப்ளாஸ்  அள்ளுகிறார். நாயகனிடம்  மொழி  தெரியாமல் கும்பிடு  போட்டே  பரிதாபத்தை  சம்பாதிக்கிறார். மகானக்  அத்வைத்  பரிதாபம்  ஏற்படுத்தும்  பால்  வடியும்  முகம் 



கதையின்  நாயகனாக  சசிகுமார் . நாடோடிகள் , சுப்ரமணியபுரம்  படங்களில்  வருவது  போல  இதிலும்  உதவும்  கதாபாத்திரம்  தான், ஆனால்  மிகை  இல்லாமல்  சினிமாத்தனம்  இல்லாமல்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்

விமான நிலைய  அதிகாரியாக  சேத்தன் , சவப்பெட்டி  தயாரிப்பவராக  போஸ்  வெங்கட்  என  சின்ன  சின்ன  கதாபாத்திரங்கள்  கூட  விக்ரமன்  படங்களில்  வருவது  போல  பாசிட்டிவ்  வைப்ரேஷனில்  வருவது  சிறப்பு 

முதல்  20  நிமிட்ங்கள்  ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை  பிறகு  ஒரு  த்ரில்லர்  கதைக்கே  உரிய  வேகத்துடன்  பயணிக்கிறது ஒளிப்பதிவு  மாதேஷ்  மாணிக்கம் . அயொத்தி , ராமேஸ்வரக்காட்சிகள்  சிறப்பு . இசை  என்  ஆர்  ரகுநந்தன். மெலோடி  பாடலக்ள்  இவருக்கு  கை  வந்த  கலை  போல . பின்னணி  இசை  இன்னும்  பிரமாதப்படுத்தி  இருக்கலாம் 

எடிட்டிங்  சான்  லோகேஷ் . 2  மணி  நேரத்துக்கு  2  நிமிடம்  குறைவு ., கச்சிதமான  ட்ரிம்மிங்  

 


சபாஷ்  டைரக்டர்  (  மந்திர மூர்த்தி ) 


1  நண்பன்  கேட்டான்  என்பதற்காக  தன்  பைக்கை  வைத்து  பணம்  ஏற்பாடு  செய்து  தரும்  கேரக்டர்  நெகிழ  வைக்கிறது 


2  நாயகன் - நாயகி  இருவருக்கும்  காதல்  என்று  ஜல்லி  அடிக்காமல்  மனிதாபிமானம்  என்ற  ஒரே  நேர்கோட்டில்  பயணிக்கும்  திரைக்கதை 


3  சர்ட்டிஃபிகேட்  வாங்குவதற்காக  ஆஃபீசர்  வீட்டு  வாசலில்  ஆம்புலன்ஸ்  சைரனை  ஒலிக்க  விட்டு  நாயகன்  செய்யும்  அடாவடித்தனம்  அருமை 


4  போஸ்ட்மார்ட்டம்  செய்த  ஊழியர்களுக்கான  கூலி  தர  சிறுவன்  தன்  உண்டியலை  உடைத்து  காசு  தரும்  காட்சி 


5 படத்தின்  பெரும்பாலான  சம்பவங்கள்  ஒரே  நாளில்  நடப்பது  போல  காட்டியது , காஸ்ட்யூம்  செலவை  மிச்சம்  செய்தது 

6  ஃபீல்  குட்  மூவியில்  கூட  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வைக்க  முடியும்  என்று  உணர்த்திய  இடம்  அருமை 


  ரசித்த  வசனங்கள்  ( எஸ்  ராமகிருஷ்ணன்) 


1 உசுரோட  இருக்கறவங்க  வேணா  செஞ்ச  உதவியை  மறக்கலாம், ஆனா  ஆத்மா  மறக்காது 

2  உனக்குப்பிடிச்சவங்களோட  மரணம்  ஏற்படும்போது   மொழி  அறியாத  ஊரில் தனியா  மாட்டிகிட்டா   என்ன  செய்ய  முடியும்??


3  நம்ம  ஊர்ல  ரேஷன்  கார்ட்ல  இனிஷியல்  மாத்தவே  30  நாட்கள்  ஆகும். இதுளா  7  சர்ட்டிஃபிகேட்  வாங்கனுமா?


4  நீ  வெள்ளை  சட்டை  மேல  கையை  வெச்சே , அவன்  காக்கி  சட்டை  கிட்டே  கால்  பண்ணிட்டான் 


5   இப்படி  எல்லாம்  செஞ்சா  யார்  உதவி  செய்வாங்க ? ஒதுங்கிதான்  போவாங்க 

6  இருக்கறவங்க  கிட்டே  தான்  பிராப்ளம்  பண்றீங்க, இறந்தவங்க  கிட்டெயுமா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கல்லூரி  மாணவியான  நாயகிக்கு  ஆங்கிலம்  தெரிந்திருந்தும்  எல்லா  காட்சிகளிலும்  ஹிந்தியில்  பேசுவது  ஏன் ?


2  பிரமாதமான  கதைக்கரு , திரைக்கதை   என  பலமான  அஸ்திரம்  இருந்தும்  ஓப்பனிங்  ஹீரோ  ஃபைட்  சீன்,  போலீஸ்  ஸ்டேஷன்  கானா  பாட்டு  என  கமர்ஷியல் குப்பைகள்  எதற்கு? ஒரு  தரமான  படத்தில்   தரம்  இல்லாத  காட்சிகள் 


3  க்ளைமாக்சில்  ஃபிளைட்டில்  பயணம்  செய்ய  இருக்கும்  இருவர்   விட்டுக்கொடுக்க  முன்  வரும்  காட்சிகள்  பார்க்க  நன்றாக  இருந்தாலும்  நடைமுறைக்கு  ஒவ்வாதவை , ரயில் , விமானம்  ஆகியவற்றில்  பயணம் செய்யும் போது  யார்  பெயரில்  டிக்கெட்  இருக்கிறதோ  அவர்கள்  தான்  பயணம்  செய்ய  முடியும் 


4  மதுரை  டூ  ராமேஸ்வரம்  போக பஸ் , ரயில்  என  பொது  போக்குவரத்து  இருக்க  எதற்கும்  முயலாமல்  கஞ்சனான  வில்லன்  டாக்சியில்  பயணிக்க  முடிவெடுத்தது  ஏன் ? 


5  காரில்  பயணிக்கும்போது  விபத்து  ஏற்பட்டால்  முன்  சீட்டில்  இருப்பவர்களுக்குத்தான்  அதிக  காயங்கள்  ஏற்படும், ஆனால்  வில்லன் காயங்கள்  ஏதும்  இல்லாமல்  தப்பிப்பதும்  , அவன்  மனைவி படு  காயம்  அடைவதும்  எப்படி ? மனைவி  பின்  சீட்டில்  தானே  வந்தார்? மனைவியுடன்  பயணித்த  மகன் , மகள்  இருவருக்கும்  பெரிய  காயங்கள்  இல்லை 


6   மரணத்தில்  சந்தேகம்  இருக்கு , எல்லாரையும்  தனித்தனியா  விசாரிங்க  என  போலீஸ்  ஆஃபீசர்  சொல்கிறார், ஆனால்  நாயகன், அவர்  நண்பன்  இருவரையும்  ஒன்றாகத்தான்  விசாரிக்கிறார்கள் . முன்னுக்குப்பின்  முரணான  தகவல்  வருகிறதா  என  செக்  பண்ணத்தானே  தனித்தனி  விசார்ணை ?  அதை  ஏன்  செய்யவில்லை ?





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மசாலாக்குப்பைகளையே  பார்த்து  சலித்த  நம்  கண்களுக்கு  அருமையான  கருத்தை  நாடகத்தனம்  இல்லாமல்  சொன்ன  ஒரு  நல்ல  படம்  அவசியம்  அனைவரும்  காண  வேண்டிய  படம் , ஆனந்த  விகடன்  மார்க்  50   அட்ரா  சக்க  ரேட்டிங்  4 / 5 


அயோத்தி
அயோத்தி போஸ்டர்.jpeg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஆர்.மந்திர மூர்த்தி
எழுதியவர்ஆர்.மந்திர மூர்த்தி
உற்பத்திஆர்.ரவீந்திரன்
நடித்துள்ளார்M. சசிகுமார்
ப்ரீத்தி அஸ்ராணி
யாஷ்பால் சர்மா
புகழ்
ஒளிப்பதிவுமாதேஷ் மாணிக்கம்
திருத்தியவர்சான் லோகேஷ்
இசைஎன்.ஆர்.ரகுநந்தன்
தயாரிப்பு
நிறுவனம்
வெளிவரும் தேதி
  • 3 மார்ச் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்