Tuesday, January 31, 2023

பிகினிங் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


ஒரு  பிரபலமான  நாளிதழ்  சண்டேன்னா  ரெண்டு  என  விளம்பரப்படுத்தி அதைப்புகழ்  பெற்ற  வாசகம்  ஆக்கியது . இப்போது  செல்ஃபோன்  உபயோகிப்பவர்கள்  பெரும்பாலும்  டூயல்  சிம்  ஃபோன்களைத்தான்  உபயோகிக்கிறார்கள் . தமிழ்  சினிமா  ஹீரோக்கள்  தங்கள்  வாழ்நாளில்  குறைந்த  பட்சம் ஒரே  ஒரு  டபுள்  ஹீரோ  சப்ஜெக்ட்  படத்திலாவது  நடித்து  விட  வேண்டும் என  கங்கணம்  கட்டிக்கொண்டு  இருக்கிறார்கள் . தமிழ்  சினிமாவில்  இரா  பார்த்திபன் , கமல் ஹாசன்  இருவர்  மட்டும் தான்  புதுமை  விரும்பிகளாக  இருக்க  வேண்டுமா?  இதோ நானும்  களத்தில்  இறங்குகிறேன்  என  ஒரு  புதிய  முயற்சியில்  பலரது  புருவங்களை  உயர  வைத்திருப்பவர்தான் இயக்குநர்  கம்  தயாரிப்பாளர்  ஜெகன்  விஜயா

ஆசியா  கண்டத்திலேயே  முதல்  முறையாக  வெளியாகும்  ஸ்பிளிட்  ஸ்க்ரீன் சினிமா  என்ற  அறிமுக  லேபிளுடன்  வரும்  படம்  இது. அது  என்ன  ஸ்பிளிட்  சினிமா? திரை  அரங்கில்  இருக்கும்  வெண்  திரை  இரண்டாகப்பிரிக்கப்பட்டு  இடது  புறம்  ஒரு  கதைக்கான  காட்சி  ஓடும் , வலது  புறம்  வேறு  ஒரு  கதைக்களம்  காட்சி  ஓடும் , பின்  ஒரு  சமயம்  இரண்டும்  இணைந்து  ஒரே  காட்சியாக  உருவாகும் . இதுதான்   ஸ்பிளிட்  ஸ்க்ரீன்  சினிமா . ஒரே  நேரத்தில்  இரு  காட்சிகள்  ஓடினால்  குழப்பமாக  இருக்காதா? வசனம்  கசமுசா என  ஓடுமே? என  கேள்வி  வரும், சாமார்த்தியமாக  அதை    டீல்  செய்திருக்கிறார்கள் . இடது   புறம்  ஓடும்  கதையில்  வசனம்  இருக்கும், வலது  புறம்  ஓடும்  கதையில்  காட்சிகள்  மட்டும்  நகரும், பேலன்சாக  படம்  போகும் 


சரி , படத்தின்  கதை  என்ன?  நாயகன்  மனவளர்ச்சி  குன்றியவர். திக்குவாய்  குறைபாடு  உள்ளவர். இவருக்குத்தேவையான  உணவை  தயார்  செய்து  விட்டு  இவரது  அம்மா  இவரை  வீட்டில்  ஒரு  அறையில்  வைத்து  பூட்டி  விட்டு  வேலைக்கு  சென்று  விடுவார். அம்மா  வேலைக்கு  சென்ற  பின்  இவர்  பாத்திரங்களை  எல்லாம்  கழுவி  விட்டு  டி வி  பார்ப்பார் . இதுதான்  இவரது  தினசரி  பழக்கம். இந்த  காட்சிகள்  இடது  புற  திரையில்  ஒரு  பக்கம்  ஓடுகிறது 


 நாயகி யை  சிலர்  ஒரு  சூட்கேஸ்க்குள்  வைத்து  கடத்தி  ஒரு  வீட்டின்  அறையில்  அடைத்து  விடுகின்றனர், பின்  நாயகியின்  காதலனையும்  கடத்துகின்றனர். நாயகி  அடைத்து  வைக்கபப்ட்ட  அறையில்  ஒரு    பழைய  அலைபேசி  கிடைக்கிறது , அதில்  சில  பட்டன்கள்  இல்லை , எனவே  போலீசுக்கு  ஃபோன்  போட  முடியவில்லை , அதனால்  கைக்கு  வந்த  ஏதோ  ஒரு  எண்ணுக்கு  கால்  பண்ணும்போது   அந்த  மனநலக்குறைபாடு  உள்ள  நாயகன்  செல் ஃபோனுக்கு  கால்  போகிறது 


 நாயகி  மிக  சிரமப்பட்டு  தன்  நிலையை  நாயகனுக்கு  விளக்குகிறார்.  அடைபட்ட  அறையில்  கிடக்கும்  நாயகியை  இன்னொரு  இடத்தில் அடைபட்டுக்கிடக்கும்  நாயகன்  எப்படி  காப்பாற்றினார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகனாக  வினோத்  கிஷன் அற்புதமாக  நடித்திருக்கிறார். நந்தா  படத்தில்  சின்ன  வயது  சூர்யாவாக  வந்தவர்  இவர். அப்போதே  பர பரப்பாக  பேசப்பட்டார். கார்த்தி  நடித்த நான்   மகான்  அல்ல  படத்திலும்  நடித்திருக்கிறார். இவரது  முக  பாவனைகள்  , உடல்  மொழி  எல்லாம்  பிரமாதம்  , பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாயகியாக கவுரி ஜி  கிஷன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். விஜய்  சேதுபதி  நடித்த  96  காதல்  காவியத்தில்  த்ரிஷாவின்  இளவயது  கதாபாத்திரமாக  ஸ்கூல்  மாணவியாக  வந்து  நம்  உள்ளங்களைக்கொள்ளை  கொண்டவர் தான்  இவர் . இவரது  பதட்டமான  முகமே  பாதி  நடிப்பை  பூர்த்தி  செய்து  விடுகிறது , தமிழ்  சினிமா  உலகில்  பய  முகம்  காட்டுவதில்  விற்பன்னர்கள்  யார்? , நூறாவது நாள்  புகழ்  நளினி யும்,  ஹலோ  யார்  பேசறது  புகழ்  ஜீவிதாவும் , அவர்களுக்கு  இணையான  பய  முகம்  இவருக்கு 


நாயகனின்  அம்மாவாக  ரோகினி  பொருத்தமான  தேர்வு 


நாயகியைக்கடத்தும்  வில்லனாக சச்சின்  எனும்  லகுபரன். இவர்  சைக்கோ  சிரிப்பு சிரிக்கும்போது  நமக்குக்கோபம்  வருவது  இவரது  கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த  வெற்றி 


படம்  முழுக்க  இரண்டே  இரண்டு  அறைகளில்  நடப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான் , வீரக்குமார்  கச்சிதமாக  அந்த  சவாலை  எதிர்கொள்கிறார். 111  நிமிடங்கள்  ஓடும்  அளவுக்கு  கச்சிதமாக  எடிட்டிங்கில்  படத்தை  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர்  பிரேம்  குமார் .  இது  போன்ற  த்ரில்லர்  மூவிக்கு  எந்த  மாதிரி  பிஜிஎம்  பொருத்தமாக  இருக்கும்  என  சுந்தரமூர்த்திக்கு  நன்றாகவே  தெரிந்திருக்கிறது   


பாடல்கள்  இல்லாதது  படத்துக்கு  ஒரு  பிளஸ்


திரைக்கதை , இயக்கம்  ஆகிய  பொறுப்புகளோடு  தயாரிப்பிலும்  பங்கெடுத்திருக்கும்  ஜெகன்  விஜயா  தயாரிப்பு  நிறுவன  பெயர்  திருப்பதி  என  இருப்பதாலோ  என்னவோ  மூன்று  நாமம்  குறிக்கும்  111  என்பதையே  பட  டியூரேஷனாக  வைத்திருப்பது  சிறப்பு. மாறுபட்ட  ஒரு  அழகிய  முயற்சி   



Beginning
Directed byJagan Vijaya
Produced byVijaya Muthusamy
Jagan Vijaya
Starring
CinematographyVeerakumar
Edited byC. S. Premkumar
Music byK. S. Sundaramurthy
Production
company
Lefty Manual Creations
Distributed byThirrupathi Brothers
Release date
  • 26 January 2023
Running time
111 mins
CountryIndia
LanguageTamil