பிகேபி எழுதியது -
எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர், பாடலாசிரியர் தாமரை "வேட்டையாடு விளையாடு" படத்தில் எழுதிய "பார்த்த முதல் நாளே" பாடல் நினைவிருக்கிறதா?
அந்தப் பாடலின் பல்லவிக்கு மட்டும் அதே மெட்டுக்கு புதிய பல்லவி எழுதுங்கள். மீண்டும் சொல்கிறேன்.. மொத்த பாடலும் அல்ல. பல்லவிக்கு மட்டும். அதே காட்சி சூழலுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். யூ டியூப் இணைப்பில் அந்தப் பாடல் இருக்கிறது. பார்க்கலாம்.கேட்கலாம்.
சிறந்த பல்லவிகள் பத்தை தாமரை அவர்களே தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்கு ஊரடங்கு சரியானதும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல்கள் அடங்கிய ஒரு ஆடியோ சிடி அனுப்பி வைக்கப்படும்.
இது தொடர்பாக தாமரையிடம் பேசியபோது மெட்டுக்கு பாட்டெழுதுவது குறித்து ஒரு சிறு குறிப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இதோ.. ஓவர் டு தாமரை:
-------------------------------------------------------------------------------
வணக்கம்.
மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பது ஒரு கலை.... பின்னே, செருப்புக்கு ஏற்றவாறு காலை வெட்டுவதும் வெட்டிய காயம் தெரியாமல் அழகாக நடப்பதும் கலையில்லையா ? 😀
மெட்டுக்கு எழுதுவது ஒரு கலை என்றால், ஏற்கெனவே எழுதப்பட்ட மெட்டுக்கு எழுதுவது மிகப்பெரிய கலை ! 😀
ஆம், ஏற்கெனவே எழுதியதிலிருந்து விலகி எழுத வேண்டும், அதே சாயல் வந்து விடக் கூடாது, புதிதாக இருக்க வேண்டும், முன்னதைத் தாண்டியும் இருக்க வேண்டும்...
மெட்டுக்கு எழுதும்போது குத்துமதிப்பாக எழுதக் கூடாது, அளவெடுத்தாற்போல் கச்சிதமாக இருக்க வேண்டும். இதை இங்கே திரைத்துறையில், 'மீட்டர்' என்று சொல்வார்கள்.
இசையமைப்பாளர்கள் சில சமயம் பொய் வார்த்தைகளைப் போட்டு மெட்டுக் கட்டுவார்கள், அதையே பாடலாசிரியர்களுக்கும் கொடுத்து விடுவார்கள். 'Dummy words' என்று சொல்வார்கள். அளவு வார்த்தைகளாக மெட்டு இருந்தால் அளவு இருக்கும் ஆனால் கற்பனையைக் கெடுக்கும். எனவே நான், எனக்கு மெட்டு தரும்போது குறிப்பாக 'அளவு வார்த்தைகள் கூடாது, தத்தகாரம்தான் வேண்டும்' என்று நிபந்தனை போட்டு விடுவேன். தத்தகாரம் என்பது, மெட்டை 'தனனனா தானா' பாணியில் பாடித் தருவது.
உங்களுக்குத் தரப் பட்டுள்ள பாடல் 'பார்த்த முதல் நாளே' !. இதற்கான தத்தகாரம், 'தான னன னானா'...
பாடல் எழுத, கதை மற்றும் பாடல் சூழல் தேவை.
இருவர் பாடும் காதல் பாடல். ஒரு பெண்ணைப் பார்த்த உடனேயே பிடித்துப் போய், இரண்டு மணி நேரங்களில் 'உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்' என்று நாயகன் சொல்லி விடுகிறான். அங்கு ஆரம்பமாகும் பாடல், இருவரின் அளவு கடந்த காதல், திருமண நிகழ்வுகள், ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்வது, அவர்களுக்கிடையேயான பொழுதுகள் என ஒரு பயணம், சிலபல மாதங்கள் என வைத்துக் கொள்ளலாம். வீடு, உட்புறம், வெளிப்புறம் எனக் காட்சிகள் நகரும்... நாயகன் மிடுக்கான காவல்துறை அதிகாரி என்பதை நினைவில் வைக்க வேண்டும்... பாடல் பெண்குரலில் தொடங்குகிறது.
எங்கே... இப்போது மெட்டு, சூழல் இரண்டும் கிடைத்து விட்டது...உங்களுக்குள் இருக்கும் கவிஞரை வெளியே கொண்டு வாருங்கள் பார்க்கலாம்... நான் எழுதியதை மறந்து விட்டு, புதிதாகக் கேட்பது போல் எழுதுங்கள் பார்க்கலாம் 😀.
நான் தேர்வு செய்யும்போது, அளவில் இல்லாமல் குத்துமதிப்பாக எழுதப் பட்டவற்றை நிராகரித்து விடுவேன் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.
பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இது சற்று சிக்கலான மெட்டுதான். முயன்று பாருங்கள். எழுத எழுதப் பிடிபடும்.
அன்புடன்,
தாமரை
=======================
போட்டிக்கு நான் எழுதிய 3 பல்லவிகள்
மதகில்
பாயும் நதி போலே
மீனின் நிலை போலே குதித்தேன்
மீனின் நிலை போலே
ஆலங்கட்டி மழையாய் மாறி எனை நனைத்தாய்
சூரிய சுடராய் ஆகி விதை விதைத்தாய்
என் கனாவைத்தாங்கிய
உன் விழி உன் விழி
என்றும் மூடாதே!
ஆண் = வாட்டி எடுக்கிறதே
நினைவு வாட்டி எடுக்கிறதே
கானம் பொழிகிறதே
இதழில் பாடல் வளர்கிறதே!
உன் கண்ணில் நெளியும் மின்னல்களை
கோர்த்தேன், சேர்த்தேன் தினம் தினமே
உன் அழகிய முகம் தனைக்கண்ட பின்
நானும் கவி ஆனேன்
===================
2
பெண் =
ஆடும் மயில் போலே
மழையில்
ஆடும் மயில் போலே
பாடும் குயில் போலே மகிழ்ந்தேன்
பாடும் குயில் போலே
வைரசாய் வந்து எனைப் பிடித்தாய்
தரிசாய்க்கிடந்த எனை நனைத்தாய்
உதகைக்குளிர் கொண்ட
உன் நிலை உன் நிலை
என்றும் கரையாதே
ஆண்=
போட்டி வைக்கிற்தே
பெண்ணே
போட்டி வைக்கிற்தே
ஊட்டிக்குளிரும்
உந்தன் அண்மையும்
முந்தப்பார்க்கிறதே
நத்தையின் மென்மை கொண்ட கன்னங்களை
தொட்டேன் பட்டேன் கதுப்புகளை
உன் அனாயச அழகினில்
விழுந்த விழுந்த பின் நானும்
சிலை ஆனேன்
==================
3 பெண் =
தீர்த்தக்கரை தனிலே என்னை
ஈர்த்த முதல் ஆணே!
வேர்த்த உடல் போலே உணர்ந்தேன்
வேர்த்த உடல் போலே !
சுனாமியாய் வந்தெனை சுருட்டி விட்டாய்!
பினாமியாய் மாறி வளைத்து விட்டாய்!
என் மன அரசாங்க கெஜட்டினில்
உன் பேர் உன் பேர் என்றும் மாறாதே!
ஆண் =
பேட்டி கொடுக்கிறதே!
உன் இதழ் பேட்டி கொடுக்கிறதே!
நாணம் தடுக்கிறதே!
கன்னம் தானே சிவக்கிறதே!
உன் கண்ணில் வழியும் கண்ணீர்களை
உணர்ந்தேன், தெளிந்தேன் தினம் தினமே!
உன் ஆனந்த அழுகையில்
கரைந்த பின் கரைந்த பின்
நானும் மெழுகானேன்!
==========================