Tuesday, March 15, 2016

விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிசல்ட்! ஜூ வி ரிப்போர்ட்

விகடன் டீம்
விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற யுத்தத்தைவிட விஜயகாந்த்தின் ஆதரவு காந்தத்துக்குத்தான் மவுசு அதிகம். அறிவாலயமும் கமலாலயமும் தாயகமும் பாலன் இல்லமும் பி.ராமமூர்த்தி நினைவகமும் தே.மு.தி.க-வின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ‘பழம் நழுவிக்கொண்டிருக்கிறது... பாலில் விழும்’ என கருணாநிதி சொல்ல... ‘தனித்துப் போட்டி’ என தனி ரூட்டில் பயணிக்கிறார் விஜயகாந்த். எந்தக் கூட்டணியிலும் சேராமல் தே.மு.தி.க தலைமையில் கூட்டணி என புதுப் பொங்கல் வைத்திருக்கிறார் விஜயகாந்த். தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் புதுத் திருப்பம். இந்த அதிரடி அறிவிப்பின் பல்ஸ் எப்படி என அறியாமல் இருக்க முடியுமா? உடனே களமிறங்கியது விகடன் டீம். தேர்தலில் முக்கிய ரோல் வகிக்கும் விஜயகாந்த்தின் செல்வாக்கு எப்படி? என அறியக் கருத்துக்கணிப்பை நடத்தினோம்.
விகடன் செய்தியாளர்கள், போட்டோ கிராபர்கள், மாணவ பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி மக்களின் மனசை அறிந்தார்கள். ‘தனித்துப் போட்டி’ என எடுத்த முடிவு, அதனால் ஏற்பட்ட செல்வாக்கு, எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் பெர்பாமென்ஸ், விஜயகாந்த்தின் முடிவு யாரைப் பாதிக்கும் என எழுப்பப்படும் விவாதங்களை எல்லாம் கேள்விக ளாக்கினோம். 8,603 பேரை நேரில் சந்தித்தது விகடன் டீம். இதில் 3,270 பேர் பெண்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என டிஜிட்டல் யுகத்தில் இருந்துகொண்டு  அதையும் பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி? விகடன் டாட்காம் மூலம் ஆன்லைன் சர்வேயும் மேற்கொண்டோம். 


இதற்காக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் அறிவிப்பும் செய்திருந்தோம். தமிழகத்தில் இருந்து மட்டும் வாக்களிக்கும் வகையிலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வேயில் பங்கெடுக்கக் கூடாது என்ற வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்படி கட்டுப்பாடுகளோடு ஆன்லைனில் எடுக்கப்பட்ட சர்வேயில் 15,923 பேர் பங்கேற்றனர். நேரடி சர்வே, ஆன்லைன் சர்வே முடிவுகள் கிட்டத்தட்ட ஒத்துப் போயின. இரண்டு முடிவுகளையும் வெளியிட்டிருக்கிறோம். நேரடியாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை வைத்தே சதவிகிதம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



‘தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் எடுத்த முடிவு’க்கு அமோக வரவேற்பு இருந்தது. அவரது முடிவுக்கு 36 சதவிகிதம் பேர் வரவேற்பைத் தெரிவித்திருந்தனர்.

‘கூட்டணி அமைப்பதுதான் பெஸ்ட்’ என 23 சதவிகிதம் பேர் கருத்தைப் பதிவு செய்திருந்தனர் தவறான முடிவு, காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என மற்ற இரண்டு ஆப்ஷன்களையும் புறந்தள்ளி விட முடியாது. வரவேற்பைக் காட்டிலும் இதன் கூட்டுத் தொகை அதிகம் என்பதையும் உணர முடிகிறது.


‘தனித்துப் போட்டி என்ற அறிவிப்பால் விஜயகாந்த்தின் செல்வாக்குக் கூடியிருக்கிறதா?’ என்பதையும் கேள்வியாகக் கேட்டிருந்தோம். ‘அப்படியேதான் இருக்கிறது’  என மிக அதிகம் பேர் அதாவது 35 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். ‘தனித்துப் போட்டி’ என்பதை வரவேற்றாலும்கூட அதனால் விஜயகாந்த்தின் செல்வாக்குக் கூடவில்லை என்பதைதான் மக்கள் சொன்னார்கள்.

‘எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாட்டுக்கு மார்க்  என்ன? என்பதையும் சர்வேயில் கேட்டிருந்தோம். ஃபெயில் என்பதைத்தான் அதிகம் பேர் சொல்லியிருந்தார்கள். ஜஸ்ட் பாஸ் என 26 சதவிகிதம் பேர் சொன்னார்கள். இந்தக் கேள்வியை இதற்கு முன்பு ஜூ.வி. எடுத்த சர்வேக்களிலும் கேட்டிருந்தோம். அதே பதில்தான் இப்போதைய சர்வேயிலும் எதிரொலித்தது. 


‘விஜயகாந்த்தின் முடிவு யாருக்குப் பாதிப்பு?’ என்ற கேள்விக்கு ‘தி.மு.க-வுக்குத்தான்’ என 42 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். ஆறு கேள்விகள் உள்ளடக்கிய இந்த சர்வேயில் மிக அதிகபட்சமாக 42 சதவிகிதம் பேர் கருத்தைப் பதிவுசெய்தது இந்த ஆப்ஷனுக்குத்தான். தி.மு.க-வுக்கு அடுத்து தே.மு.தி.க-வுக்கும் அதற்கு அடுத்து அ.தி.மு.க-வுக்கும் பாதிப்பு எனச் சொல்லியிருந்தனர் சர்வேயில் பங்கேற்றவர்கள்.

‘தனித்துப் போட்டி’ என்ற தே.மு.தி.க-வின் முடிவை வைத்து ‘விஜயகாந்த் முதல்வர் ஆவதை விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டோம். முடிவு எதிர்மறையாக இருந்தது. 41 சதவிகிதம் பேர் ‘விரும்பவில்லை’ என சர்வேயில் டிக் அடித்திருந்தனர். ‘தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பேன்’ என 29 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். 


‘தனித்துப் போட்டியிடும் தே.மு.தி.க-வுக்கு ஓட்டு போடுவீர்களா?’ என்ற முக்கியமான கேள்விக்கு ‘தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பேன்’ என அதிகபட்சமாக  39 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள்.  



‘போடமாட்டேன்’ என 34 சதவிகிதம் பேர் சொன்னார்கள். தனித்துப் போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருக்கிறாரா? என்பதை வைத்தே தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் மக்கள் இருப்பதை உணர முடிகிறது. 



‘‘விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தனியாகப் போட்டியிட்டபோது அவர் மீது அதீத நம்பிக்கை இருந்தது. எப்போது அவரும் மற்ற கட்சிகளைப்போலவே கூட்டணி சேர்ந்தாரோ அப்போதே நம்பிக்கை இழந்துவிட்டோம்.  அ.தி.மு.க-வுடனும், பி.ஜே.பி-யுடனும் அணி சேராமல் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் விஜயகாந்த் மீதான நம்பிக்கை வேறாக இருந்திருக்கும். அதை இழந்துவிட்டார் விஜயகாந்த்’’ என சர்வேயின்போது பலரும் நம்மிடம் சொன்னார்கள். ‘‘இரண்டு மாதங்கள் இழுத்தடித்து இப்போது திடீரென தனித்துப் போட்டி என விஜயகாந்த் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதை முன்னரே அறிவித்திருந்தால் விஜயகாந்த் மீதான நம்பிக்கை கூடியிருக்கும். பேரம் பேசுவதாக எழுந்த புகாரை மிக எளிதாகக் கடந்திருக்கலாம். அதனால், விஜயகாந்த் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்’’ என்றும் கொதித்தார்கள்.


மக்களிடம் எடுத்த சர்வே முடிவுகளை மக்கள் பார்வைக்கே வைக்கிறோம்.



அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்

நன்றி - ஜூவி