Saturday, December 12, 2015

வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரி ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா-அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்

ரு வார மழைக்கே சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள். முன்தினம் வரை சௌகரியங்களுடன் வாழ்ந்து பழகியவர்கள், உணவுக்காகவும், குடிநீருக்காவும், குழந்தைகளுக்கான பாலுக்காகவும் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது கொடுமை. 

இரவில் தன்னுள் கலக்கும் நீரை, கடலானது வெளியே தள்ளும் என்கிற எதார்த்த அறிவுகூட இல்லாமல், இரவு நேரத்தில் ஏரிகளின் நீரை எந்த அறிவிப்பும் இல்லாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட்டது அடுத்த கொடுமை.

இவையெல்லாம் ஒருபுறமென்றால்... வெள்ளம் வடியாமல் வாரக்கணக்கில் நிற்பது, கொடுமையின் உச்சம். இதற்கான  அடிப்படை காரணமே... அங்கிங்கெனாதபடி   நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் ஆக்கிரமிப்புகள்தான். வனங்களில் மனிதர்களின் வசதிக்காக யானைகள் வழித்தடங்களை அழித்தோம். வழிதவறிய யானைகள், ஊருக்குள் வந்து பயிர்களை அழித்தன... ஊர்களை உருக் குலைத்தன. அதுபோலவே, நீர்வழித்தடங்களையும் அழித்துவிட்டோம். தன் பாதை கிடைக்காததால் கிடைத்த இடத்தில் நுழைந்தது நீர்.
தவறு யாருடையது?

ஏரிகளில் இருந்து ஆற்றுக்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்களையும், ஆறு, ஏரி, குளங்கள் என அனைத்துமே ஆக்கிரமிக்கப்பட்டதற்கான விளைவைத்தான் மக்கள் சந்திக்க நேர்ந்தது. யாரோ ஒருசிலர் செய்யும் தவறுகளால் பெரும்பான்மை மக்கள் தண்டனை பெற்றார்கள். தனிநபர் தவறுகள் ஒரு துளி என்றால், அரசின் அலட்சியம் பெருங்கடல்.
 
அரசியல் ஆதாயங்களுக்காக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கி தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்திய ஆண்ட, ஆளும் ஓட்டுவங்கி அரசியல்கட்சிகள்... மாநகரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளவில்லை. ஜெயா டிவி அலுவலகத்திலும், கோபாலபுரத்திலும் நீர் புகுந்த பிறகுதான் தங்கள் தவறு அவர்களுக்கு உறைத்திருக்கிறது போலும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதை உணர்ந்த அரசு, காலம் கடந்து (இப்போதாவது செய்ததே) நீர்வழியில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகளை இறக்கிவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமையில் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு பெரும்பாலான மக்களை மீட்டது. அதில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக இடம்பெற்றிருந்த  ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்க ராணுவத்துடன் களமிறங்கினார். 

வெள்ளம் குறையத் தொடங்கியதும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் புதுநகரில் 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் அடையாறுக்கு செல்லும் நீர் வழி ஆக்கிரமிப்புகள், மணிமங்கலம் பகுதியிலும் உபரி நீர் வழிந்தோடும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை அரசியல்வாதிகளின் எதிப்புகளையும் மீறி துணிச்சலுடன் அகற்றி வருகிறார்.

மணிமங்கலம் பகுதிகளில் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமுதாவை சந்தித்தோம்.

‘‘வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். மூன்று முக்கிய பணிகளுக்காக அரசு என்னை நியமித்திருக்கிறது. முதலில் மீட்பு பணியை மேற்கொண்டோம். அதன் பின்னர் நிவாரணப் பணியை செய்தோம். அடுத்த கட்டமாக மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழிகளை சீரமைத்து வருகிறோம். இந்த பணிகளை செய்யும்போது வேலை செய்யும் ஆட்களை தடுப்பதில் சில நபர்கள் ஆர்வம் காட்டினார்கள். அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் எங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். அதிகமான வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் மூலமாகவே தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தன.

மக்கள் ஒன்றை நன்றாகத்  தெரிந்துகொள்ள வேண்டும். எதற்கெல்லாமோ போராடுகிற மக்கள் தங்களுடைய நீர் நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பை அகற்ற ஆரம்ப கட்டத்திலேயே போராட வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பயம் வரும். அதிகாரம் செய்யும் அரசியல் கட்சியினரை பார்த்து பயப்படக் கூடாது. ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் கால்வாய்களை எல்லாம் அடைத்து விட்டால் தண்ணீர் குடியிருப்புக்குள்தான் வரும். தயவுசெய்து இனியாவது மக்களும் தங்களுடைய நீர் நிலையை பாதுகாக்க முன் வரவேண்டும்’’ என்ற வேண்டுகோள் வைத்துவிட்டு, தனது பணியில் மும்முரமானார் அமுதா.

மணிமங்கலம் அருகே செல்லும் ஒரு கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோயிலையே கட்டியிருக்கிறார்கள். இதைச் செய்த புத்திசாலிகள், கால்வாய்க்குள் தூண்களை எழுப்பி கோயிலை எழுப்பியுள்ளனர். ஆனால், கோயிலுக்குக் கீழ் இருக்கும் பாதை மிகச்சிறியது என்பதாலும், தேங்கிய குப்பைகள் தடுத்ததாலும் நீர் அதன் மூலமாக வெளியேறாமல், ஊருக்குள் புகுந்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் தளத்துக்கும் மேலாக தண்ணீர் பாய்ந்திருக்கிறது. இத்தனை கொடுமை நடந்த நிலையிலும் 'கோயிலை மட்டும் இடிக்காதீங்க' என்று அமுதாவிடம் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது? அந்த சமயத்தில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதால், கோயிலை இடிக்காமல், அதன் கீழே இருக்கும் குப்பைகளை அகற்றியதோடு... படிக்கட்டு மற்றும் பக்கவாட்டு சாலையை உடைத்து தண்ணீர் போக வழி செய்தார் அமுதா.

கோயிலுக்கு எதிரே அந்தக் கால்வாயை ஆக்கிரமித்து, தன்னுடைய இரண்டு மாடிக்கட்டடத்துக்கான படிக்கட்டை அமைத்திருந்தார் ஒருவர். மொத்தம் 9 அடி நீளம் கொண்ட கால்வாய், அந்த இடத்தில் மூன்று அடி அகலம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக அந்த மாடிக் கட்டடத்தின் படிக்கட்டுகளை இடித்து நொறுக்கிய அமுதா, அடுத்தக் கட்டமாக, "உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்டார்.
மூன்றாவது நாள் இடிக்க வந்தபோது, 'நீங்கள்தான் படிக்கட்டை இடித்துவிட்டீர்களே... எப்படி பொருட்களை எடுப்பது?' என்று எதிர்கேள்வி கேட்டார் கட்டடத்தின் உரிமையாளர்.

உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.

ஒரு வாரமாக தேங்கி இருந்த வெள்ளநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றிய அடுத்த சில மணி நேரங்களில் வடிந்ததை பார்த்த பொதுமக்கள், அமுதாவின் பணியினை வெகுவாக பாராட்டுகிறார்கள். பாரபட்சமில்லாத இவரது செயல்பாடு, நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்போர் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல, தமிழகம் முழுக்கவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்கட்டமாக போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நின்றுவிடாமல்,  மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுப்பதும் முக்கியம்.

இது, அரசின் கடமை மட்டுமல்ல... பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது.

-துரை.நாகராஜன்

வீடியோ, படங்கள்: கா.முரளி

விகடன்