Friday, December 11, 2015

கண்ணீரில் மிதக்கும் கடலூர்!

கண்ணீரில் மிதக்கும் கடலூர்!
பா.ஜெயவேல், க.பூபாலன், ஜெ.முருகன்படங்கள்: எஸ்.தேவராஜன், அ.குரூஸ்தனம்
டலூர்... வெள்ளத்தின் காயங்களை இன்னும் அதிகமாகச் சுமந்து நிற்கும் நிலம்!
வெள்ளத்தின் வேதனை சென்னையை விடவும், பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் இன்னும் அதிகம் என்கிறார்கள். ‘‘சென்னை அளவுக்கு கட்டடங்களை வெள்ளம் சூழவில்லை; ஹெலிகாப்டரை நோக்கிக் கையேந்தும் மொட்டை  மாடித் தலைகள் இல்லை; ஆனால் நுழைந்து பார்த்தால், எங்கள் பாதிப்புகளும் இழப்புகளும் மிக அதிகம்’’ என்கிறார் முருகேசன்.
உண்மைதான். இந்த மழை, வெள்ளத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது அந்த மண்தான். வயல், தோட்டங்கள், வீடுகள்... என அந்த மக்களின் அத்தனை வாழ்வாதாரங்களையும் மூழ்கடித்து முடக்கிப்போட்டிருக்கிறது மழை வெள்ளம். கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் போதே, கடலூரில் வெள்ளம் சூழ்ந்தது. குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. கால்நடைகள் காணாமல் போயின. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர் மக்கள். பண்ருட்டி அருகே பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில், வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தையே துயரத்தில் தள்ளியது.
அத்தனைக் குரல்களும்் அரசை நோக்கி அலற, சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து நிவாரணப் பணிகளை முடுக்கியது அரசு. ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவையும் அனுப்பியது.   ‘‘லேட்டாவாச்சும் உதவிக்கு வந்தாங்களே...’’ என மக்கள் கொஞ்சம் ஆசுவாசமாகும்போதே, மீள முடியாத இழப்புகளை அளித்தது அடித்துக்கொட்டிய அடுத்த மழை. பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி என நான்கு நகராட்சி உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டு 70 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார் இருவர் மட்டுமே அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டு ‘நிவாரணப் பணி’ என வலம் வருகிறார்கள். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப் படுகிறது. தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. `கடலூர் நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ சார்பில் ஐந்து டன் அரிசி, 12 ஆயிரம் போர்வை, பாய், பால் பவுடர் கொடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் பூனம் என்பவர் மட்டுமே இதுவரை வெள்ளம் சூழ்ந்துள்ள கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து காப்புக் காடுகளில் விட்டுள்ளார். இப்படி தன்னார்வலர்களும் அரசு கடைநிலை ஊழியர்களுமே ஆங்காங்கே அர்ப்பணிப்புடன் மக்கள் பணியில் உள்ளனர்!
உண்ணாமலைசெட்டி சாவடியைச் சேர்ந்த குணசுந்தரி, ‘‘பத்து நாளா உசுரைக் கையில புடிச்சிட்டு, இந்தத் தண்ணிலதான் கெடக்கோம். வீடு முழுக்கத் தண்ணி. உள்ள போகவே பயமா இருக்கு. மாத்தி கட்டிக்கக்கூட துணி எடுக்க முடியலை. பக்கத்து வீட்லதான் ஒண்டிக் கெடக்குறோம். இதுவரைக்கும் யாரும் இந்தப் பக்கம் வந்து எட்டிக்கூடப் பார்க்கலை. யார் யாரோ வர்றாங்க, போறாங்க. ஆனா ரோட்டு மேலயே நின்னு பார்த்துட்டுப் போயிடு்றாங்க. கஞ்சி காய்ச்சிக் குடிக்கக்கூட இடம் இல்லைங்க...’’ எனச் சொல்லும்போதே நமக்குப் பதறுகிறது.
சென்னையில் கூட்டம் கூட்டமாக உதவும் அளவுக்கு, தன்னார்வலர்களை கடலூர் பக்கம் காணவில்லை. ‘‘ஆமாம். பெரும்பாலான உதவிகள் சென்னையை நோக்கியே செல்கின்றன. ஏழை விவசாயக்கூலிகள் இங்கேதான் அதிகம். சொந்தக் கிராமத்திலேயே குழந்தைகள், வயதானவர்கள், பெண்களெல்லாம் அகதிகள்போல் முடங்கியிருப் பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. அரசின் சொற்ப நிவாரணங்கள் ஆறுதல் தருமே தவிர, நிரந்தரத் தீர்வாகாது. இந்த மக்கள் மேலும் உங்கள் பார்வையைத் திருப்புங்கள்’’ என்கிறார் சமூக ஆர்வலரான ராஜகோபால்.
‘‘ `எதிர்பாராத அளவுக்கு அதிக மழை’ என அரசாங்கம் சொல்கிறது. சென்னை மாதிரியான இடங்களுக்கு வேணும்னா, இது உண்மையா இருக்கலாம். ஆனால், கடலூரைப் பொறுத்தவரை இது வழக்கமாக எதிர்பார்க்கும் மழைதான். ஒருபக்கம் காவிரியின் வடிகால் கொள்ளிடம், அடுத்து சேலம், தருமபுரி, கள்வராயன் மலைனு பெய்யும் மழை எல்லாமும் வெள்ளாறு வழியாக இங்கேதான் வந்து சேருது. இன்னொரு பக்கம் பெண்ணையாறு. இப்படி தமிழகத்தின் நாலைந்து முக்கியமான வடிகால்கள் இங்கேதான் இருக்கு. அதனால் சுனாமி, நிஷா புயல், நீலம் புயல், தானே புயல்னு வருஷத்துக்கு ஒன்றாக இங்கே வந்து இந்த மக்களை அடித்துக்கொண்டே இருக்கின்றன. இதுதான் கடலூரின் கடந்த 50 ஆண்டுகாலத் துயர வரலாறு. ஆனால், ஒவ்வொரு வருஷமும் அந்த நேரத்தில் `துணி கொடுக்கிறோம், சாப்பாடு போடுகிறோம்...’ என வருகிறார்களே தவிர, இந்த மாதிரிப் பேரிடர்களுக்கான நிரந்தர முன்னேற்பாடு எதையும் செய்யவில்லை என்பதுதான் அரசின் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டு். அரசின் கையாலாகாத்தனத்தால்தான் கடலூர் மாவட்டத்துக்கு இந்தப் பேரிழப்பு. இவர்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். ஏற்கெனவே உருவாக்கிவைத்திருக்கிற நீராதாரங்களையும் பாசன, வடிகால் வாய்க்கால்களையும் ஒழுங்குபடுத்தி பராமரிச்சிருந்தாலே, இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. மழைநீர் நேரடியாகக் கடலில் கலந்திருக்கும். அரசின் திட்டமிடலில் இருக்கும் குறைகளால்தான் கடலூர் தொடர்ந்து பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாகவே இருக்கிறது. இங்கே பெரியகாட்டுப்பாளையத்தில் அடிச்சுட்டுப் போய் 10 பேர் இறந்தாங்களே... இதேபோலத்தான் 2010-ம் ஆண்டில் வெள்ளம் வந்தபோதும் பெரும் இழப்பு ஏற்பட்டது. அப்போதே அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து, நல்ல முறையில் வீடுகள் கட்டித் தந்திருந்தால் இன்றைக்கு அந்த 10 பேரும் செத்திருக்க மாட்டார்கள். 
சார்... இந்த மக்கள் மற்றவர்களுக்கு சோறுபோடும் விவசாயிகள். இன்னிக்கு என்ன ஆச்சு... மனிதாபிமானத்தோட பல மாவட்டங்களில்  இருந்து பொருட்களைக் கொண்டுவரும் தன்னார் வலர்களிடம், வழியில் நின்று மறித்துக் கையேந்துகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்காங்க சார். அந்தளவுக்கு வறுமை... இழப்புகள்.  உதவியோடு வருகிறவர்களை அரசே ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட கோட்டாட்சியர் வசம் பொருட்களை ஒப்படைத்து, ‘பெற்றுக்கொண்டோம்’ என சான்றிதழ் வழங்கலாம். அதை எந்த மக்களுக்கு எது தேவை என முறையாக நெறிப்படுத்தி வழங்கலாம். அந்த ஒருங்கிணைப்பே இங்கு இல்லையே... எல்லாவற்றையும்விடக் கொடுமை, மக்கள் கொண்டுவரும் பொருட்களை பறிச்சுட்டுப் போய், ஆளுங்கட்சி தங்களோட கட்சிக் கொடியைக் கட்டிட்டுக் கொண்டுபோய் கொடுக்குறதா சொல்றாங்க.
ஆளுங்கட்சி நினைத்தால், ஒரு மாவட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பொருட்களை சேகரித்து உதவி செய்ய முடியாதா? இதுவரை ஒரே ஒரு ரூபாய்க்காவது ஆளும் கட்சி எங்கேயாவது பொருட்களை சேர்த்துக் கொடுத்திருக்கிறார்களா? சிஐடியூ, ஆசிரியர் சங்கம், பேங்க்-எல்ஐசி  ஊழியர் சங்கம், மூட்டை தூக்குபவர்கள்னு மனிதநேயத்தோடு தன்னார்வத் தொண்டு அமைப்புகள்தானே கொண்டுவந்து தர்றாங்க?
சென்னையில் பெரிய இழப்பு; கற்பனை செய்ய முடியாத இழப்பு; உண்மைதான். ஆனால் அதைவிடப் பலமடங்கு வெளியில் தெரியாத இழப்பு கடலூர் மாவட்டத்துக்கு. 150 பேர்  இறந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம், `வெறும் 70 பேர்’ எனச் சொல்கிறது. பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துபோய்விட்டன. வெள்ளத்தில் கால்நடைகள் இறந்துபோனால் `செத்துப்போன மாடு எங்கே...  ஆடு எங்கே... அதோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இருந்தால்தான் நிவாரணம் தருவோம்’னு சொல்றாங்க... இது எப்படி இருக்கு பாருங்க. வெள்ளத்துல அடிச்சுட்டுப் போன ஆடு மாடுகளுக்கு எப்பிடிய்யா போஸ்ட்மார்ட்டம் பண்ண முடியும்?
நாலு  லட்சம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் போயிடுச்சு. ஒரு மாதமா எல்லா வயல்களும் தண்ணீரில் மிதக்குது. பெரும்பகுதி நெல், வாழை சுத்தமா அழிந்துவிட்டது. கரும்பு அழுகுது. காய்கறிச் செடிகள் செத்துவிட்டன. அரும்பு சாகுபடி 10 ஆயிரம் ஏக்கர் அழிந்துவிட்டன.  மரவல்லி சாகுபடி போயிடுச்சு. கடலூரில் போர்வெல் பம்பை நம்பிதான் பெரும்பகுதி சாகுபடி. இப்ப அந்த போர்வெல்களெல்லம் தண்ணியிலேயே இருப்பதால், அதில் காயில், மோட்டார் நாசமாகியிருக்கும். மழை வடிந்த பிறகு அது வேலை செய்யுமானு தெரியவில்லை. இப்படிப் பல நெருக்கடிகள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடித் தேவை நிவாரணம். அதற்கு முதலில் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிலதிபர்கள்னு எல்லோரையும் ஒருங்கிணையுங்கள்; உதவிகளைத் திரட்டுங்கள்; எந்ததெந்தப் பகுதிக்கு என்னென்ன உதவிகள் தேவைனு பிரியுங்கள்; அதற்குத் தகுந்தமாதிரி கொண்டுபோய் மக்களிடம் உதவிகளைச் சேருங்கள். இவ்வளவு பெரிய மழையில்கூட எல்லோரையும் ஒருங்கிணைப்பதில் அக்கறை இல்லை என்றால், நீங்க என்னங்க மக்கள் நல அரசு..?’’ என கடலூரின் நிலை பற்றி விரிவாகச் சொல்கிறார் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.
 புதுச்சேரியும் தப்பவில்லை. கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கிய மழை இன்று வரை கொட்டிக்கொண்டு இருக்கிறது. புதுச்சேரி முழுவதுமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. நகரின் அனைத்து வீதிகளிலும், சாலைகளிலும் இடுப்பளவுக்குத் தண்ணீர். வாகனங்களை ஓட்ட முடியாமல், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் கடும் அவதியில் உள்ளனர் மக்கள். ஏழாயிரம் ஹெக்டேருக்கும் மேலான விவசாய நிலங்கள் நீரில் சூழ்ந்துள்ளன. ஆயிரமாயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரோடு சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் அபாயத்திலும் கொசுக்கடியிலும் மக்கள் தவிக்கிறார்கள். 
‘‘ஒரு வாரமா எங்க வீட்ல தண்ணி தேங்கி நிக்குது. சமைக்க முடியலை. சாக்கடைத் தண்ணி வீட்டுக்குள்ள வந்துட்டதால உள்ள போகவே முடியலை. கொசுக்கடி வேற. தண்ணியை ஜெனரேட்டர் வெச்சு வெளியேத்தச் சொன்னா, ‘மழை இன்னும் மூணு நாள் இருக்கு. மொத்த மழையும் பெய்யட்டும். அப்புறம் பார்ப்போம்’னு அதிகாரிகள் அலட்சியமா பேசுறாங்க. அதிகாரத்துல உள்ளவங்களுக்கு மட்டும் தேவைப்பட்டதை உடனே செய்றவங்க, ஏழைகளைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குறாங்க’’ என நியாயமாகத்தான் கேட்கிறார் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தனலட்சுமி.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்வதால், திணறிக்கிடக்கிறார்கள் மின்சாரம் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்கள். புதுச்சேரியின் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்ட நிலையில், எந்த ஏரி எப்போது உடைந்து வெள்ளமாக மாறுமோ என அச்சத்தில் கிடக்கிறது புதுச்சேரி! 
கன மழை வெள்ளத்தில் காஞ்சிபுரத்திலும் பெரும் சேதம். பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில சமூக விரோதிகள் நந்திவரம் பெரிய ஏரியையும் ஊரப்பாக்கம் ஏரியையும் உடைத்ததாகச் சொல்கிறார்கள். இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நவம்பரில் பெய்த மழைக்கான நிவாரணப் பணிகள் முடிவதற்குள், டிசம்பர் முதல் தேதியிலிருந்து பெய்த கனமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. செங்கல்பட்டில் பெரும்பாலான பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது.
செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி சாலை முழுக்க வெள்ளமானதில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது சென்னையையும் தென் தமிழ்நாட்டையும் இணைக்கும் ஒரே சாலை. செங்கல்பட்டிலேயே நிறுத்தப்பட்ட பேருந்துகளைப் பார்க்கையில், சாலைகளே தெரியாத அளவுக்கு அவ்வளவு வாகனங்கள். ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் பேருந்து நிலையங்களிலும், ரயில்நிலையங்களிலும் தஞ்சம் புகுந்தனர். பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து வந்த வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து வந்தன. தாம்பரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வண்டலூர் வருவதற்கே பல மணி நேரம் ஆனது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு பைபாஸ் நெடுகிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மதுராந்தகம் ஏரியில் 40,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் கே.கே.புதூர், இருசாம நல்லூர் உள்ளிட்ட ஊர்களில் தண்ணீர் புகுந்தது. வண்டலூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பெனிகளில் வேலை செய்தவர்கள் வீட்டுக்கு வர முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய நிலை. செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் செல்ல 500 ரூபாய் வரை கறாராக சில வேன் டிரைவர்கள் வசூல் செய்ய, பணம் இல்லாதவர்கள் அரசுப் பேருந்துகள் வருமா எனக் காத்திருந்தார்கள். லாரிகளையும் சரக்கு வேன்களையும் நிறுத்தி, பொதுமக்களை காவல் துறையினர் அனுப்பிக்கொண்டிருந்தனர்.
‘‘காஞ்சிபுரம் நகரத்தில் பெரிய சேதம் இல்லை. செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில்தான் பெரிய அளவில் சேதம்...’’ என்கிறார்கள் அதிகாரிகள்.
“விவசாய நிலப் பாதிப்புகளை இனிதான் கணக்கிட முடியும். மழைக்கு இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். 240 முகாம்களில் 65 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏரிகள் அடிக்கடி உடைவதால் எவ்வளவு ஏரி உடைந்துள்ளது என்ற விவரங்கள் இல்லை. மீட்புப் பணியில் மட்டுமே முழுகவனம் செலுத்தி வருகிறோம்..’’ என்கிறது மாவட்ட நிர்வாகம்.
திருவள்ளூர் மாவட்டமும் கடுமையான சேதத்தில் திணறிக்கிடக்கிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை. கூடுதலாக ஆந்திராவில் உள்ள அணைக்கட்டுகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூண்டியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்,  கொசஸ்தலை ஆறு வழியாகத்தான் பாய்கிறது. இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த பசுவன்பாளையம் கிராமம் அருகே, கொசஸ்தலை ஆற்றின் கரை உடைந்தது. இதனால் ஞாயிறு, வழுதிகைமேடு, சீமாபுரம், வெள்ளிவாயல், மணலிபுதுநகர், ஆண்டார்குப்பம், நாப்பாளையம், ஈச்சங்குழி போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். ஊர்களில் இருந்து வெளியேறி முகாமில் தஞ்சம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றிலும் வெள்ளம். அளவுக்கு அதிகமான வெள்ளம் வெளியேறியதால் மனோபுரம் கிராமத்தில், ஆற்றின் கரை உடைந்தது. மனோபுரம், காணியம்பாக்கம், வேளூர், சோமஞ்சேரி, அத்தமனஞ்சேரி, ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உள்பட 20 கிராமங்கள் வெள்ளக் காடாயின. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான தரைப்பாலங்கள் சேதம் அடைந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அடிப்படை வசதிகளுக்கே அலைபாயும் அகதிகளாக பலர் முகாம்களில் தஞ்சமாகிக் கிடக்கிறார்கள்! 


-விகடன்