Monday, December 07, 2015

tamasha-தமஷா (இந்தி) - திரை விமர்சனம்

சமூகமும், குடும்பமும் தனிமனிதனின் தேடல்களையும், கனவுகளையும் பின்தொடர முடியாமல் எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி. ஆனால், இம்தியாஸ் அலிக்கு இந்தக் கதைக் கரு ஒன்றும் புதிதல்ல. அவரது, ‘ஐப் வி மெட்’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹைவே’ போன்ற படங்கள் தனிமனிதத் தேடல்களையும், லட்சியங்களையும் அழகியலுடன் பேசியிருக்கின்றன. இந்தப் படங்களின் நவீன வடிவமாக ‘தமாஷா’வைச் சொல்லலாம்.


சிறு வயதில் இருந்தே கதைகளிலும், கதைசொல்லல் மீதும் ஆர்வத்துடன் வளர்கிறான் வேத் (ரன்பீர்). கதை உலகின் மீதிருக்கும் காதலால் கோர்ஸிகாவுக்கு வருகிறான் வேத். அதே மாதிரி, ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ கதைகளைப் படித்து, அங்கே வந்திருக்கும் தாராவை (தீபிகா) சந்திக்கிறான். இருவரும் தங்களைப் பற்றி எந்த உண்மைகளையும் பகிர்ந்துகொள்ளாமல், ‘டான்’, ‘மோனா டார்லிங்’ என்ற கற்பனைப் பெயர்களில் கோர்ஸிகாவை ஜாலி யாகச் சுற்றிவருகிறார்கள். பிறகு, எப்போதும் சந்திக்க வேண்டாம் என்று முடிவுசெய்து அவரவர் வழியில் சென்றுவிடுகிறார்கள்.


ஆனால் தாராவால் அவ்வளவு எளிதில் கோர்ஸிகா பயணத்தையும், டானையும் மறக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து, இரு வரும் மறுபடியும் சந்தித்துக் கொள்கிறார்கள். தங்களைப் பற்றிய உண்மைகளையும், காதலையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், கோர்ஸிகாவில் தான் பழகிய டானுக்கும், நான்கு ஆண்டுகள் கழித்து தான் சந்திக்கும் ‘புராடக்ட் மேனேஜர்’ ‘வேத்’துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள் தாரா.


தான் காதலித்தது ஒரு சாதாரண புரா டக்ட் மேனேஜரை இல்லை, ஒரு சுதந்திரமான, அசாதாரணமான கதை சொல்லியான ‘டானை’ என்று சொல்லிப் பிரிந்துவிடுகிறாள் தாரா. கதைசொல்லி ‘டானை’ ‘வேத்’தால் மீட்டெடுக்க முடிந்ததா என்பதுதான் ‘தமாஷா’.


இயந்திரத்தனமான வாழ்க்கையைத் தான் இப்போது பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள் என்பதை ‘வேத்’ கதாபாத்திரமும், படத்தில் வரும் ‘தமாஷா’ நாடகமும், அதன் ‘ரோபாட்’ கதாபாத்திரமும் அழுத்தமாக விளக்குகின்றன. குடும்பமும், சமூகமும் எப்படித் தனிமனித தேடல்களைக் கபளீகரம் செய்து குழிதோண்டிப் புதைக்கின்றன என்பதையும் இந்தப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதேமாதிரி, தனிமனிதத் தேடல் எந்தளவுக்கு முக்கியம், கனவுகளை ஒவ்வொருவரும் ஏன் பின்தொடர வேண்டும் என்பதற்கான விடை களையும் அளிக்க ‘தமாஷா’ முயற்சிக்கிறது.



ஆனால், அயர்ச்சியான திரைக்கதை படத்துடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது. வலிமையான கதைக் கரு, வலுவில்லாத திரைக்கதை இரண்டுக்கும் நடுவில் படம் சிக்கித் தவிக்கிறது. பல இடங்களில் மேலோட்டமான வசனங்களும் படத்தின் தாக்கத்தைக் குறைத்துவிடுகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் இனிமையான இசையாலும், இர்ஷத் காமிலின் கூர்மையான பாடல் வரிகளாலும்கூடப் படம் ஏற்படுத்தும் அலுப்பைத் தடுக்க முடியவில்லை. கோர்ஸிகா பயணத்தில் ரவிவர்மனின் கேமரா மேஜிக்கலாகச் செயல்பட்டிருக்கிறது.


இந்தப் படத்தில் ரன்பீர், தீபிகா இருவருமே நடிப்பில் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். கோர்ஸிகாவில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காட்சிகளில் இருவரும் புத்துணர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிற்பாதியில் இருவரின் ஆழமான நடிப்பையும் உணர முடிகிறது. படத்தின் வலுவான அம்சங்களில் ஒன்று இவர்களது நடிப்பு.


குவிமையம் என்பது வலுவாக உருப்பெறாததே ‘தமாஷா’வின் முக்கிய மான பிரச்சினை. தனிமனிதனின் சுயதேடல், காதல், சமூகம், குடும்பம் எனப் பலவற்றையும் கையாண்டதில், படம் அது உருவாக்க வேண்டிய தாக்கத்தை உருவாக்க முடியாமல் போய்விடுகிறது.


-தஹிந்து

a






a






a