Sunday, December 06, 2015

100 ஆண்டு பார்த்திராத சோகம்!

100 ஆண்டு பார்த்திராத சோகம்!
நாட்டின் நான்காவது பெரிய நகரமான சென்னை, தன்னைவிட 3 பெரிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவைவிட பாதுகாப்பான நகரம் என பெயர் பெற்றிருந்தது. மும்பை, ஒடிசா, ஆந்திராவில் வெள்ளப் பாதிப்புகள் குறித்த செய்தி வரும்போதெல்லாம் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என சென்னை மக்கள் பெருமிதப்பட்டனர். இந்த வட கிழக்குப் பருவமழை அந்தப் பெருமிதத்தைச் சிதைத்துவிட்டது.

100 ஆண்டு சாதனையை முறியடித்த மழை!
கடந்த 100 ஆண்டுகளில் சென்னை சந்தித்திராத மழை என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘வரலாறு காணாத மழை’ என்ற வாக்கியத்தை உண்மையாக்கி உள்ளது சென்னையில் இந்த மாதத்தில் கொட்டிய மழை. கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் பெய்த 108.8 செ.மீ. மழைதான் இன்றைய அளவுக்கு மிக அதிகபட்ச மழையாக இருந்து வருகிறது. நவம்பர் மாத இறுதிநாளில் இடைவிடாது பெய்த மழையால், இந்தச் சாதனையை முறியடித்து உள்ளது நடப்பு ஆண்டில் பெய்த மழை. இந்த ஆண்டில் நவம்பர் மாதம் பெய்த மழையின் அளவு 119.73 செ.மீ. 1918-ம் ஆண்டு பெய்த மழையைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகம். 1918-க்குப் பின்னர் 1985-ம் ஆண்டு சென்னை ஒரு பெருமழையைச் சந்தித்தது. அந்த ஆண்டில் சென்னையில் பெய்த மழை 97 செ.மீ. என்கிறது புள்ளிவிவரம்.
“இது, நிச்சயம் பேய் மழைதான். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த கனமழையைவிட இந்த மழை அதிகமாகப் பெய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 23.5 மி.மீ. மழை பெய்துள்ளது. திங்கட்கிழமையும் இதே அளவு மழை பெய்தது. இதனால், நவம்பர் மாதத்தின் மழை அளவு 119.73 செ.மீ. என பதிவாகியுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் அதன் கொள்ளளவைத் தாண்டிவிட்டன. இதனால் பல ஏரிகளைத் திறந்துவிட வேண்டியதாகிவிட்டது. சில இடங்களில் மக்கள் அவர்களாகவே ஏரிகளில் இருந்து நீரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். அதனால், மக்கள் வசிக்கும் இடங்களில் நீர் பெருக ஆரம்பித்தது’’ என்கிறார்கள் பொதுப்பணித் துறையினர்.
சென்னையில் மட்டும் 65 பேர் பலி!
சென்னையில் சாலைகள் எல்லாம் மழை நீரில் மூழ்கி, போக்குவரத்து கிட்டத்தட்ட முழு பாதிப்பைச் சந்தித்து இருந்தது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து முடங்கியது. விமான நிலைய ஓடுதளங்கள் மழைநீரால் மூழ்க, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்டது. பெரும்பாலான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தன. நகரமெங்கும் வெள்ளநீர் சூழ, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இப்படி சென்னை மக்கள் கடந்த சில தினங்களாகப் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் நிச்சயம் விவரித்துவிட முடியாது. நோயாளிகள் மருந்து மாத்திரைகளுக்காகவும் குழந்தைகள் பாலுக்காகவும், குடிநீருக்காகவும், உணவுக்காகவும் தவித்தனர். எல்லாவற்றையும்விட இந்த கனமழை, 65 பேர் உயிரை சென்னையில் மட்டும்  பழிவாங்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180-ஐ கடந்துள்ளது. புயல் தாக்கினால் இப்படியான விளைவுகள் ஏற்படலாம். ஆனால், புயல் தாக்குதல் இல்லாமல் இடைவிடாது பெய்த மழைக்கே சென்னை திக்குமுக்காடி போனது.
14 மணி நேர தொடர்ச்சியான மழை!
கடந்த திங்கள்கிழமை தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை பெய்த கனமழைதான் மிக மோசமாக இருந்தது. தொடர்ச்சியாக 14 மணி நேரம் பெய்த மழையின் அளவு 20 செ.மீ-க்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரங்கள். சென்னையில் வேளச்சேரி, நுங்கம்பாக்கம், பெரும்பாக்கம், முடிச்சூர், மணப்பாக்கம், வில்லிவாக்கம், மதுரவாயல், கொரட்டூர், அண்ணா நகர் என நகரின் முக்கியப் பகுதிகளே வெள்ளத்தில் தத்தளித்தன. சில பகுதிகளில் முதல் மாடி அளவுக்கு மழை நீர் சூழ, சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர் சென்னை மக்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பலர் மருத்துவச் சிகிச்சைக்குக் கூட வெளியே வர முடியாமல் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். பல பகுதிகளில் மூன்று நான்கு நாட்களாக மின்சார சப்ளை இல்லை. அதனால் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியாமல் இருட்டில் தத்தளித்தனர். சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈ.சி.ஆர். சாலை, ஓ.எம்.ஆர். ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், போக்குவரத்துக் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மழையில் சிக்கும் ஆர்.கே.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகள் இந்த ஆண்டு வெகுவாகப் பாதிக்கப்பட்டன. புதிதாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளால் இந்தப் பழைய பகுதிகளின் பாதிப்புகள் மீது பலரின் கவனம் திரும்பவில்லை.
பேரிடரை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை!
மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது வானிலை ஆய்வு மையம். இதை அலட்சியப்படுத்திய விளைவுதான், கடந்த சில வாரங்களாக மழை வெள்ள நீரில் தத்தளித்தது. இந்தச் சூழலில் அடுத்த இரு தினங்களில் சென்னையில் 500 மி.மீ. மழை கொட்டும் என்று எச்சரித்தது பி.பி.சி. அதன் பின்னரும் மழை வெள்ள நீர் சூழும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு உணவு, உறைவிடத்தை வழங்க அரசு தவறிவிட்டது. இதனால் மழை வெள்ளத்தில் பல இடங்களில் சிக்கித்தவித்தனர் மக்கள்.
இதுபோன்ற பேரிடர் நேர்ந்தால் அதை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை என்பதை மீண்டும் அடித்துச் சொல்லியிருக்கிறது மழை. மோசமான பாதிப்புகளுக்குக் காரணம் மழை மட்டும் அல்ல.
- ச.ஜெ.ரவி, படம்: தி.ஹரிஹரன்

உதவி கேட்க உதவிய சமூக வலைதளங்கள்!
சமூக வலைதளங்கள் இந்த மழையின்போது பெரும் உதவி புரிந்தன. வெள்ளத்தில் சிக்கிய பலர், தங்களை காத்துக்கொள்ள சமூக வலைதளங்களின் மூலம் உதவி கேட்டனர். ஃபேஸ்புக், ட்விட்டரில் ‘சென்னை ரெயின்ஸ் ஹெல்ப்’ எனும் ஹாஸ்டாக் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதேபோல் பலர், சமூக வலைதளங்கள் மூலம் எந்தெந்த ஏரியாக்களில் எங்கு தங்குவதற்கு இடம் உள்ளது என்ற விவரங்களையும் பதிவுசெய்தனர்.
மழை கொட்டிய நாட்கள்!
வழக்கமான பருவமழை இந்த முறை தாமதமாகத்தான் தொடங்கியது. அக்டோபரில் தொடங்கி பெய்யும் மழை, இந்த முறை நவம்பர் முதல் வாரத்தில்தான் தீவிரமடைந்தது. நவம்பர் 9-ம் தேதி 13.6 செ.மீ. மழை பெய்ய, திக்குமுக்காடி போனது சென்னை. இதோடு முடிந்தது என நினைத்திருக்க, நவம்பர் 13, 16, 23-ம் தேதிகளில் மழை கொட்டியது. நவம்பர் 16-ம் தேதி அதிகபட்சமாக 24.6 செ.மீ. மழை பெய்ய, மழைநீரில் மூழ்கியது சென்னை. தொடர்ந்து 23-ம் தேதி 14 செ.மீ. மழை கொட்டியது. இதன் உச்சமாக நவம்பர் இறுதியில் இரு தினங்கள் தொடர்ச்சியாக 20 செ.மீ. மழை பதிவானது. இதனால், நவம்பர் மாதத்தில் மட்டும் 120 செ.மீ. என்ற அளவை எட்டியுள்ளது கனமழை. இதுவே கடந்த 100 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
20 நாட்களைக் கடந்து தொடரும் விடுமுறை!
தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 22 பணி நாட்களை விடுமுறை என அறிவித்துள்ளது அரசு. இந்த மழைக்காலத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மழை சீசனில் மட்டும் மழை காரணமாக 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்க வேண்டிய அரையாண்டுத் தேர்வுகளும் ஜனவரி மாதத்தில் நடக்கும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் விடுமுறை!
கொட்டிய கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மட்டும் விடுமுறையின்றி செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொட்டிய கனமழையால், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது. ஐ.டி. கம்பெனிகள், மோட்டார் கம்பெனிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது.

விகடன்