கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகள் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள், மீண்டும் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது முறையாக பெய்த மழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டூர், பனங்காடு, பீமாராவ்நகர், ஞானபாலம்நகர், புருசோத்தமன்நகர், கண்ணகி நகர் உள்ளிட்ட 509 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 70 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் 30 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீடு தோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. நோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட மூன்று நகராட்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஜேசிபி எந்திரங்கள் மூலம் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெருமாள் ஏரி உடையும் தருவாயில் இருக்கிறது. தீர்த்தனகிரி கிராமம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் உள்ள 100 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு
பண்ருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் சிக்கிக் கொண்டவர்களை பேரிடம் மீட்பு குழுவினர் படகுகளின் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்ருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் சிக்கிக் கொண்டவர்களை பேரிடம் மீட்பு குழுவினர் படகுகளின் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-க.பூபாலன்
படங்கள்: தேவராஜன், அ.குரூஸ்தனம்
விகடன்