Thursday, December 03, 2015

தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை: நடப்பு பாதிப்புகளும் அடுத்த 24 மணி நேர நிலவரமும்

சென்னை வியாசர்பாடியில் சூழ்ந்த மழை வெள்ளம். | படம்: வீ.கணேசன்
சென்னை வியாசர்பாடியில் சூழ்ந்த மழை வெள்ளம். | படம்: வீ.கணேசன்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லாவிதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வீடுகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளன.


தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.


ஏரிகளில் உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளிலிருந்து உபரி நீர் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. | விரிவான செய்தி - செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை


21 விரைவு ரயில்கள் ரத்து
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், விழுப்புரம் - தாம்பரம் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 12 விரைவு ரயில்கள் ரத்து இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்பட்டது. நாளை (புதன்கிழமை) 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. | ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்: சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
தமிழக முதல்வர் உறுதி
தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், வெள்ள பாதிப்பு மிக்க பகுதிகளில் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். | முழு விவரம் - தமிழகத்தில் மழை, வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: முதல்வர் ஜெயலலிதா தகவல்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் மேலும் 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. | முழுமையாக - வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு

மாநிலம் தழுவிய மழை - வெள்ள பாதிப்புகள்

சென்னையில் ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் மீண்டும் பெய்து வரும் கனமழையால் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. | விவரம்: சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்: புறநகர் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு
மிதக்கும் தென்சென்னை
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து பெய்த கன மழையால், தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. | விரிவாக - மிதக்கும் தலைநகரம்: தென்சென்னையை சூழ்ந்தது வெள்ளம்
நிற்காமல் இயங்கும் பஸ்கள்
சென்னையில் சாலைப் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல்கள் தொடர்கின்றன. கனமழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்களின் வசதிக்காக மாநகர பஸ்கள் நிறுத்தாமல் இயக்கப்பட்டு வருகின்றன. | விவரம் - மக்களுக்காக கனமழையிலும் நிற்காமல் இயங்கும் சென்னை மாநகர பஸ்கள்
சென்னை - புறநகர் அவலம்
சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கெனவே மழையால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய வேளச்சேரி, வில்லிவாக்கம், தாம்பரம், முடிச்சூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். பலர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் சாலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்குகூட பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மீண்டும் தத்தளிக்கும் கடலூர்
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள கட்டுப்பாட்டு அறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 36 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி முகாமுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இம்முறையும் வீடுகளும் பயிர்களும் பலத்த சேதமடைந்தன. | விரிவாக - மீண்டும் தத்தளிக்கும் கடலூர்: மீட்புப் பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிப்பு
வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கின்றன. பாலம் உடைப்பு மற்றும் தரைப் பாலங்கள் நீரில் மூழ்கியதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. | விரிவான செய்தி - பாலங்கள் உடைப்பு, தரைப்பாலங்கள் மூழ்கின: திருவள்ளூர் மாவட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு
காஞ்சி - நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகரப்பகுதியில் உள்ள குண்டூர் ஏரியும், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கொளவாய் ஏரியும் இன்று பெய்த கனமழையால் நிரம்பின. இதனால், இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், செங்கல்பட்டு நகரை சூழ்ந்துள்ளதால், நகரமே தண்ணீரில் மிதக்கிறது. இதையடுத்து, செங்கல்பட்டில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.
பரனூர் அருகே நீஞ்சல்மடுவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தாம்பரம்-செங்கல்பட்டு தண்டவாளம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. உயரழுத்த மின்கம்பங்களும் சாய்ந்தன.
மதுராந்தகம் ஏரி மற்றும் செங்கல்பட்டு நீஞ்சல் மடுவு மற்றும் பல்வேறு ஏரிகளின் உபரிநீர் பாலாற்றில் வெளியேறி வருவதால், பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஈசூர் கிராமத்திலிருந்து வாயலூர் வரையிலான 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளன. அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாள் முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.
புதுச்சேரியில் வீடுகளில் வெள்ளம்
புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அரசு பள்ளிகள், சமூகநல கூடங்களை திறந்து விடாததால் கிராமப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்தது. இதனால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. | விரிவான செய்தி - புதுச்சேரியில் தொடரும் கனழை: ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு
தூத்துக்குடி, குமரி மக்கள் அவதி
தூத்துக்குடியில் பல இடங்களில் மழை வெள்ளம் இன்னும் வடியாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தொடர் மழை, காட்டாற்று வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 100 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது. மேலும், பல இடங்களில் கால்வாய்கள் வெட்டியும், சாலைகளை துண்டித்தும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்து நிற்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக தபால் தந்தி காலனி, முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, குறிஞ்சி நகர், ராஜபாண்டி நகர், பால்பாண்டி நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்வது, அலுவலகங்களுக்கு செல்வது போன்ற அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் மக்கள் முடங்கியுள்ளனர். தூத்துக்குடி பகுதியில் சுமார் 2 லட்சம் வாழைகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் தொடர் மழை காரணமாக, கன்னியாகுமரியிலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 7 அணைகள் நிரம்பி வழிவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிரம்பியுள்ள கடனா அணையில் இருந்து சுமார் 500 கன அடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 200 கன அடி தண்ணீரும் உபரியாக ஆற்றில் விடப்பட்டுள்ளது. பாபநாசம் உபரிநீரும் தாமிரபரணியில் வரும் என்பதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களும் நிரம்பி வழிகின்றன. களக்காடு அடுத்த படலையார்குளம் உடையும் அபாயம் ஏற்பட்டதால், மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்.
மாவட்டத்தில் நேற்று இரவில் பெய்த மழையால் 3 வீடுகள் இடிந்துள்ளன. திருநெல்வேலி பேட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அந்த வகுப்பறையை மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில்...
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. நாகை மாவட்டம் முழுவதும் வயல்கள் வெள்ளநீரில் மிதக்கின்றன. பெரும்பாலான இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் குடியிருப்புக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை தொடர்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
திருவண்ணாமலையில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 408 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏரிகளில் 408 ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும், குளிக்க வேண்டாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏரி, குளங்கள், தென்பெண்ணையாற்று பகுதிகளில் சிறுவர்கள் குளிக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் எனவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின் சாதன பொருட்களை கவனமுடன் கையாள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தஹிந்து