Wednesday, December 02, 2015

முருங்கைக்கீரை- பொன்னாங்கன்னி - நன்மைகள் என்னென்ன?

எந்தக் கீரையில் என்ன சத்து?
 
''எளிமையாக இருப்பதாலேயே பல அற்புதமான விஷயங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இதில் கீரை முதன்மையானது'' என்கிறார் சீனியர் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. 'ரத்த விருத்திக்கு இரும்புச் சத்து, மலச் சிக்கலைப் போக்க நார்ச் சத்து, கண்களைப் பாதுகாக்க பீட்டா கரோட்டின், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலிக் அமிலம், தசைச் செயல்பாடுகளுக்கும் - உடல் சீராக இயங்குவதற்கும் தாது உப்புக்கள், எலும்புகளை உறுதியாக்க கால்சியம்’ என விதவிதமான சத்துக்களின் களஞ்சியமாக விளங்குபவை கீரைகள்! 

''தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அவசியம். பொதுவாக உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள், உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். 


நார்ச் சத்து நிறைந்து இருப்பதால் கீரையைச் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில், வைட்டமின் சி வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே வைட்டமின் சி இருக்கும். ஆனால், கீரையை அதிக நேரம் வேகவைப்பதால் வைட்டமின் சி ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். பயிர் செய்யப்படும் விளை நிலங்களைப் பொறுத்து, கீரையின் சத்துக்களும் ருசியும் சிறிது மாறுபடும். கீரையை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்ற டயட் கிருஷ்ணமூர்த்தி எந்தெந்தக் கீரையில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பட்டியலிட்டார்.
 முளைக்கீரை
கலோரி, புரதம், மாவுச்சத்தின் அளவு மிகக் குறைவு. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. சோடியம், பொட்டாஷியம், பீட்டா கரோட்டின் ஓரளவு உள்ளது. ஆக்ஸாலிக் ஆசிட் இதில் மிகவும் அதிகம். சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
சிறுகீரை
கலோரி, புரதம், பாஸ்பரஸ் குறைவான அளவில் உண்டு. ஓரளவுக்கு கால்சியமும் உண்டு. இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பீட்டா கரோட்டின், நார்ச் சத்துகளும் உண்டு. சிறு பருப்புடன் சிறு கீரை சேர்த்துச் செய்த சமையலை எல்லா வயதினரும் சாப்பிடலாம்.
பாலக்கீரை
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து குறைந்த அளவே இருந்தாலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி மிக அதிகம். மேலும் இதில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. வேகவைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ளலாம்.
புதினா
பீட்டா கரோட்டின், ரிபோ ஃப்ளோமின், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன. மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், குரோமியம் போன்ற தாது உப்புக்களும் ஓரளவு இருக்கின்றன. துவையல் மற்றும் சட்னி செய்து சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். எல்லோருக்கும் ஏற்றது.
வெந்தயக்கீரை
இரும்பு, நார்ச் சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் மிகுதியாக இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் நிறைய இருக்கிறது. தாது உப்புக்களில் பொட்டாஷியம் குறைந்த அளவும், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஷ், துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவும் இருக்கின்றன. சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களும் தங்கள் உணவில் இந்தக் கீரையை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடியது. எல்லோருக்கும் ஏற்ற வெந்தயக் கீரையை மசியல் செய்து சாப்பிடலாம்.
முருங்கைக்கீரை
கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கண்களுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புக்களான பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம் மற்றும் குளோரைடு ஆகியவை ஓரளவு இருப்பதால், உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்புகள் உறுதி பெறும். கூட்டு செய்து சாப்பிட ஏற்றது.
 பொன்னாங்கன்னி

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஓரளவு உண்டு. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ஃப்ளோமின் நிறைந்தது. மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், சல்பர் ஆகியவை ஓரளவு உண்டு. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் மற்றும் கலோரி ஓரளவு உண்டு. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.
 அரைக்கீரை
கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம். ஓரளவு பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச் சத்து இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது. புரதம் மற்றும் கலோரி மிகக் குறைந்த அளவே இருந்தாலும் இது எல்லோருக்கும் ஏற்றது. அரைக்கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம்.
மணத்தக்காளிக்கீரை
ஓரளவுப் புரதச் சத்தும் இரும்பு, கால்சியம், நார்ச் சத்துக்களும் உண்டு. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.


நன்றி - விகடன்