Monday, November 30, 2015

அடுத்து யார்?-ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே

அடுத்து யார்?
ஜூ.வி. ஸ்பெஷல் சர்வேஜூவி டீம், ஓவியங்கள்: கண்ணாபடங்கள்: கே.குணசீலன், உ.பாண்டி, ஆர்.ராம்குமார், கா.முரளி, சித்தார்த்
ஜூ.வி. ‘ஸ்பெஷல் சர்வே’-யின் மூன்றாவது பகுதி இது. வாக்களிக்கும் வயது வந்த 16,846 பேரை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட விகடன் டீம் சந்தித்தது. கிராமம், நகரம் என புகுந்து புறப்பட்ட ஜூ.வி. டீம் ஆண், பெண், இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என பல தரப்பு மக்களைச் சந்தித்து சர்வே படிவங்களைப் பூர்த்தி செய்தது டீம்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என இரண்டாக உடைந்தது அ.தி.மு.க. 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த இரண்டு அணிகளும் போட்டியிட்டபோது, ஜெயலலிதாவுக்குத்தான் அமோக செல்வாக்கு இருந்தது.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என்பதை காலம் சொன்னது. 1989-ல் இருந்து அ.தி.மு.க-வின் ஒன்மேன் ஆர்மியாக இருந்து வருகிறார் ஜெயலலிதா. ‘அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?’ என்கிற கேள்வி எல்லாக் காலங்களிலும் எழுப்பப்பட்டு வருகிறது. நெடுஞ்செழியன் தொடங்கிப் பல பெயர்கள் அடிபட்டு வந்தன. அது இப்போது சசிகலா, 
ஓ.பன்னீர்செல்வம் வரையில் வந்து நிற்கிறது. ‘அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?’ என்கிற கேள்விக்கு விடை தேடினால் என்ன என்கிற யோசனை எழ... அதையே சர்வேயில் கேள்வி ஆக்கினோம்.

‘அ.தி.மு.க-வின் அடுத்த தலைவராக வரத் தகுதியானவர் யார்?’ என்கிற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், மற்றவர்கள் என மூன்று ஆப்ஷன்கள் தந்தோம். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தைத் தாண்டி இன்னொருவரைதான் பலரும் விரும்புகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்தது. ‘மற்றவர்கள்’ என்பதைத்தான் 54 சதவிகிதம் பேர் ‘டிக்’ அடித்தனர். அதற்கு அடுத்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 38 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் நிழலாக வலம் வருபவர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை. சசிகலாதான். ஆனால், அவருக்கு வெறும் 7 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. ‘‘பின்னால் இருந்து அரசியல் ‘மூவ்’ நடத்திக்கொண்டிருக்கிறார் சசிகலா’’ என்கிற பேச்சுகள் இருந்தபோதும் அவர் அ.தி.மு.க-வின் நம்பர் டூ ஆகத் தகுதியில்லை என்பதை பொட்டில் அடித்தார்போல சொல்லியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வட்டாரத்துக்குள்ளேயே சசிகலாவுக்கு ஆதரவு இல்லை. அவரிடம் காரியம் சாதித்துப் பதவிகளைப் பிடிக்க நினைக்கும் சொற்பமான வர்கள்தான் அவரைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்கிற பேச்சும் இதில் இருந்து உண்மையாகி இருக்கிறது.
சர்வேயில், அடுத்த கேள்விக்கு போயஸ் கார்டனில் இருந்து அப்படியே கோபாலபுரம் பக்கம் போகலாம். தி.மு.க. வென்றால் அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்கிற விவாதம் நடந்துகொண்டு இருக்கிறது. அதையே, ‘தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யாருக்கு உங்கள் ஆதரவு’ என்று கேள்வியாக வைத்தோம். கருணாநிதியைவிட ஸ்டாலினுக்குத்தான் ஆதரவு அதிகமாக இருந்தது. ஸ்டாலினுக்கு 60 சதவிகிதம் பேரும், கருணாநிதிக்கு 39 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இன்னும் சொல்லப்போனால் சர்வேயின் எல்லாக் கேள்விகளுக்கும் கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் மிக அதிகமாக ஸ்டாலினுக் குத்தான் 60 சதவிகிதம் கிடைத்தது. ஸ்டாலினின் அரசியல் பயணம் மிசாவுக்கு முன்பு தொடங்கியது. தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட ஸ்டாலினுக்குத் தகுதி உண்டு என்பதை மறுப்பதில்லை. ‘ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் என்ன’ என்கிற கேள்வியை சர்வேயின்போது பலரும் எழுப்பினார்கள். ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியிருப்பதும் சர்வேயின்போது அறிய முடிந்தது.
இந்த சர்வேயின் ஃகிளைமேக்ஸ் கேள்விக்கு ஆச்சர்ய முடிவுகள்   அடுத்த இதழில்..

ன்றி=விகடன்