Monday, November 30, 2015

அஜித் 56; அமராவதி முதல் ‘வேதாளம்’ வரை

'அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார். அது பற்றிய ஒரு ரீவைண்டு நினைவுகள்...
காதல் புத்தகம்
செப்பல் விளம்பரத்துக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் 'காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது. அதுதான் அஜித்தின் முதல் வெள்ளித்திரை பிரவேசம்!
அமராவதி
ஊட்டியில் ஒரு பள்ளியில் இந்தப் படத்தின் 'புத்தம் புது மலரே...’ பாடலைப் படமாக்க அஜித், சங்கவி என யூனிட் காத்திருந்தது. அப்போது திடீரென 'திருடா திருடா’ பட யூனிட் அங்கு வந்து இறங்கியது. மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், பிரசாந்த் என 'லைம்லைட்’ பிரபலங்களைப் பார்த்ததும்  'அமராவதி’ யூனிட்டே அவர்களை நோக்கி ஓடியது. அஜித் செல்லவில்லை. அவர் அருகில் அமர்ந்து இருந்த ஒருவரும் செல்லவில்லை. 'ஏன் நீங்க ஆட்டோகிராப் வாங்க போகலையா?’ என அஜித் அவரிடம் கேட்க, 'இல்லை. நான் ஃப்யூச்சர் ஸ்டார்கூட உட்கார்ந்திருக்கேன்’ என்றார் அவர். பெயர் சுரேஷ் சந்திரா. அவர்தான் அப்போது முதல் இப்போது வரை அஜித் மேனேஜர்!  
பாசமலர்கள்
சினிமாவில் பளிச் வாய்ப்புகள் கிடைக்கும் வரை பல விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அஜித். அப்போது, 'அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நீங்களும் நடிக்கிறீர்களா?’ என ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் கேட்க, உடனே ஒப்புக்கொண்டு இந்தப் படத்தில் நடித்தார் அஜித்.
பவித்ரா
கதைப்படி மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொண்டே இருக்கும் கேரக்டர் அஜித்துக்கு. ஆனால், அப்போது நிஜமாகவே பைக் ரேஸ் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில்தான் இருந்தார் அஜித். படப்பிடிப்புத்தளம் வரைகூட வர முடியாத நிலை. ஆனாலும், சக்கர நாற்காலியில் வந்து 'பவித்ரா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார்!
ராஜாவின் பார்வையிலே...
அஜித் - விஜய் இணைந்து நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார். ஒரே கேரியர் சாப்பாடு சாப்பிட்ட இருவரும்,  இன்று சினிமா கரியரிலும் உச்சத்தில் இருக்கிறார்கள்!
ஆசை
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், 'மே மாதம்’ படத்துக்காக அஜித்திடம் கால்ஷீட் வாங்கியிருந்தார்கள். ஆனால், பைக் ரேஸ் விபத்து ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால், அஜித்தால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. 'மே மாதம்’ படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை அப்படியே 'ஆசை’ படத்துக்குக் கொடுத்தார். அஜித் நடித்த கிளாசிக் பட வரிசையில் இடம் பிடித்தது 'ஆசை’!
வான்மதி
அஜித்தை 'ஏ’ சென்டர் ஹீரோவாக நினைத்து, நெருங்காமல் சிதறியவர்கள் நிறைய. அவருக்கு கதை சொல்லவரும் உதவி இயக்குநர்களும், அஜித் பேசும் இங்லீஷைக் கேட்டு மிரள்வார்கள். அந்த 'ஏ சென்டர்’ இமேஜை மாற்றவே  'வான்மதி’ படத்தில் நடித்தார் அஜித்.  பி, சி சென்டர்களில் படம் தாறுமாறு ஹிட். அதன் பிறகே பல அறிமுக இயக்குநர்கள் அஜித்துக்கு என கதை யோசித்து அவரை அணுகினார்கள்!
கல்லூரி வாசல்
படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்தி நடிகை  பூஜா பட். அவருக்கு அஜித்தின் நடவடிக்கைகள் பிடித்துப்போக, இருவரும் 'திக் ஃப்ரெண்ட்ஸ்’ ஆனார்கள். அந்தப் பழக்கத்தில் அஜித்தை இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தார் பூஜா. ஆனால், 'தமிழே போதும். இந்தி இஷ்டம் இல்லை’ என அன்பாக மறுத்துவிட்டார் அஜித்.
மைனர் மாப்பிள்ளை
இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு, படப்பிடிப்புகளுக்கு பைக்கில்தான் செல்வார் அஜித். 'மைனர் மாப்பிள்ளை’யில் நடித்தபோதுதான் சொந்தமாக வாங்கிய மாருதி 800 காரில் செல்லத் தொடங்கினார். அந்த கார் இன்னும் அஜித் கராஜில் பத்திரமாக இருக்கிறது!
காதல் கோட்டை
சென்னைத் துறைமுகத்தில் படப்பிடிப்பு. ஷூட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். அஜித் மட்டும் கப்பலுக்குள் புகுந்து அதன் மரைன் இன்ஜினீயர்களிடம் கப்பல் இயக்கம், அதன் தொழில்நுட்ப விவரங்களைக் கேட்டுக்கொண்டிருப்பார். கார், பைக், விமானம் மட்டும் அல்ல... கப்பல் ஓட்டுவது குறித்தும் அஜித்துக்குத் தெரியும்!
நேசம்
இன்று சில ஹீரோக்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய, தாங்களே பணம் கொடுப்பது வழக்கம். ஆனால்,  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தான் நடித்த 'நேசம்’ படத்தை வெளியிட முடியாமல் இயக்குநர் சுபாஷ் பண நெருக்கடியால் தவிக்க, 28 லட்சம் ரூபாய் கொடுத்து படம் வெளியாக உதவினார் அஜித். பைக் விபத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்த தன்னை 'பவித்ரா’ படத்தில் நடிக்க அழைத்த சுபாஷ§க்கு அஜித் காட்டிய 'தேங்க்ஸ் கிவ்விங்’ அது.
ராசி
சென்னை மீரான் சாகிப் தெருவில் நிக் ஆடியோ கம்பெனி ஒன்றை வைத்திருந்தார், சக்ரவர்த்தி. அஜித் நடித்த 'கல்லூரி வாசல்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி இருந்தார். அப்போது அஜித்தைச் சந்தித்து, 'எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுங்க’ எனக் கேட்டபோது, அஜித் கால்ஷீட் கொடுத்த படம்தான் 'ராசி.’ அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. பொதுவாக, ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால், தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் முட்டிக்கொள்ளும். ஆனால், அதன் பிறகுதான் அஜித்துக்கும் சக்ரவர்த்திக்கும் அதீத நெருக்கம் ஏற்பட்டு பல வெற்றிப் படங்கள் கொடுத்தனர்.
உல்லாசம்
அமிதாப் பச்சன் தமிழில் தயாரித்த படம். அஜித் மார்க்கெட் அப்போது ஏறுமுகமாக இருந்தது. 'உல்லாசம்’ படத்தின் இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகிய நண்பர்கள். படத்தில் இன்னொரு ஹீரோ கதாபாத்திரத்துக்கு விக்ரமை நடிக்கவைக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு, 'நீங்க எப்படி ஜேடி - ஜெர்ரினு ஒண்ணா இருக்கீங்களோ, அதே மாதிரி படத்துல என் கேரக்டருக்கு இணையா விக்ரம் கேரக்டரும் இருக்கணும்’ எனக் கறாராகச் சொன்னவர் அஜித்.
பகைவன்
ரமேஷ் கண்ணா 'அமராவதி’ படப்பிடிப்பின்போதே, அஜித்தை ஹீரோவாக வைத்து ஒரு கதை சொல்லியிருந்தார். சினிமாவில் தனக்கு என அடையாளம் இல்லாதபோதே, கதை சொன்ன ரமேஷ் கண்ணாவுக்காக 'பகைவன்’ படத்தில் நடித்தார்.
ரெட்டை ஜடை வயசு
பாக்யராஜுடன் 'இன்று போய் நாளை வா’ படத்தில் நண்பராக நடித்தவர், பழனிச்சாமி. அவரே பாக்யராஜுக்கு மேனேஜராக இருந்தார். அஜித், பாக்யராஜைச் சந்தித்தபோது, 'என் மேனேஜர் பழனிச்சாமி உங்களை வெச்சு படம் தயாரிக்க ஆசைப்படுறார்’ எனச் சொன்னார். பாக்யராஜ் மேல் இருந்த மரியாதையால் உடனே கால்ஷீட் கொடுத்தார். அதுதான் 'ரெட்டை ஜடை வயசு’!
காதல் மன்னன்
சரண் இயக்கிய முதல் படம். அஜித்துக்கு இந்தப் படத்தின் கதையைச் சொன்னது ஆகாயத்தில் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சரண், கே.பாலசந்தரின் உதவியாளர் என்ற அளவில் அஜித்துக்கு அறிமுகம் இருந்தது. இருவரும் ஹைதராபாத் ஃப்ளைட்டில் பக்கத்துப் பக்கத்து ஸீட். ஒரு மணி நேரப் பயணம். அந்த நேரத்தில் சரண் சொன்ன கதை இது. ஃப்ளைட்டை விட்டு இறங்கும்போது 'நிச்சயம் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்’ என்றாராம் அஜித்.
உயிரோடு உயிராக
அஜித் எதிர்காலத்தில் இயக்குநர் ஆவாரா என்பது தெரியாது. ஆனால், அவர் ஏற்கெனவே இயக்கிய ஒரு பாட்டு இந்தப் படத்தில் இடம் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஹீரோயினுக்கு அஜித்தே டான்ஸ் கம்போஸிங் செய்துவிட்டு, தானும் நடனமாடினார். அந்தப் பாட்டை இயக்கியதும் அவரே!
அவள் வருவாளா
அதுவரை ஆண்களை ஈர்த்த அஜித் நடித்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது 'அவள் வருவாளா’. டீன் ஏஜ், மிடில் ஏஜ் என அனைத்துத் தரப்பு பெண்கள் மத்தியிலும் அஜித்துக்கு என ஒரு பிரியம் விதைத்தது இந்தப் படம். ஹீரோயின் சிம்ரனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் சாஃப்ட்டாக நடித்திருப்பார் அஜித்.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
கமர்ஷியல் வசூல் குவிக்கும் அந்தஸ்து கிடைத்த பிறகு, பெரும்பாலான ஹீரோக்கள் 'டபுள் ஹீரோ’, கௌரவ வேடப் படங்களில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், அஜித்துக்கு அப்படியான சங்கட, தயக்கங்கள் எதுவும் இல்லை. தனக்கு என மார்க்கெட் உண்டான பிறகும் கௌரவ வேடத்தில் நடிக்க விக்ரமன் அழைத்தபோது, இந்தப் படத்தில் நடித்தார் அஜித்.
தொடரும்
ஏறத்தாழ ஒரு டஜன் படங்களுக்குப் பூஜை போட்டு ஒரு படமும் வெளியாக சோகத்தில் இருந்தார் ரமேஷ் கண்ணா. விஷயத்தைக் கேள்விப்பட்டு அஜித் கால்ஷீட் தந்த படம் இது.
ஆர்.பாண்டியராஜன் அசிஸ்டென்ட் என்ற தகுதியில் இருந்து, நடிகராகவும் இயக்குநராகவும் ரமேஷ் கண்ணாவின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஹீராவோடு அதிகமாகக் கிசுகிசுக்கப்பட்டிருந்த நேரத்தில், தேவயானியின் கணவராகவும் ஹீராவை விரும்புகிறவராகவும் நடித்தார்.
உன்னைத் தேடி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த சமயம், அஜித்துக்கு மீண்டும் முதுகில் ஆபரேஷன் நடந்தது. உட்காரக்கூட முடியாத சிரமம். ஆனால், தன்னால் பட வேலைகள் பாதிக்கப்பட வேண்டாம் என, சிரமப்பட்டு வந்து டப்பிங் பேசிச் சென்றார். அந்த மெனக்கெடல், முதுகுக் காயங்களில் இருந்து ரத்தம் வழியச் செய்துவிட்டது.
வாலி
அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம். 'மாஸ் வெற்றி’யை அஜித் ருசிக்கவும், 'மாஸ் ஹீரோ’ பட்டியலில் அவர் இடம் பிடிக்கவும் 'ஒரே கல்... ரெண்டு மாங்காயா’க உதவிய படம். உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவின் அபார உற்சாகம் பார்த்து, 'நிச்சயம் நாம ஒரு படம் சேர்த்து பண்ணுவோம்’ எனச் சொல்லியிருக்கிறார் அஜித். அதை ஞாபகம் வைத்து சமயம் வந்தபோது, ரிஸ்க்கான கதையில் எஸ்.ஜே.சூர்யாவை இயக்குநராக அறிமுகப்படுத்தினார்.  
ஆனந்த பூங்காற்றே
அதுவரை 'க்ளீன் ஷேவ்’ தோற்றத்திலேயே  நடித்த அஜித், இந்தப் படத்தில் இரண்டு நாள் தாடி கெட்டப்பில் நடித்தார்.அதற்கு சரமாரி லைக்ஸ் குவிய, அந்த 'லுக்’கை அப்படியே தக்கவைத்துக் கொண்டார்!  
நீ வருவாய் என...
தீவிரமான ரசிகர் பட்டாளம் அஜித்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வெளியான இந்தப் படத்தில் அஜித் இறந்துவிடுவதுபோல நடித்திருப்பார்.   படம் வெளிவந்ததும் அஜித்தைத் தேடிவந்த ரசிகர்கள், 'இனிமேல் இறப்பதுபோல நடிக்க வேண்டாம்’ எனக் கோரிக்கை வைத்தார்களாம்.
அமர்க்களம்
முதல் நாள் படப்பிடிப்பில் அஜித், ஷாலினியைக் கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சி. அப்போது எதிர்பாராவிதமாக நிஜமாகவே ஷாலினியின் கையைக் கீறிவிட்டார் அஜித். ரத்தம் துளிர்த்துவிட்டது. ஷாலினியைவிட அதிகம் பதறிவிட்டார் அஜித். அந்தப் பதற்றமும் அதன் பிறகான அஜித்தின் அக்கறையும், இருவருக்குமான காதலாக மலர்ந்து சிறகடித்தது... ஒரு மகிழ்ச்சியான காதல் கதை!    
முகவரி
இதுவரை அஜித் நடித்த படங்களிலும், இனி நடிக்க இருக்கும் படங்களிலும்... அவர் மனதில் இருந்து நீங்காத இடம்பிடித்த கேரக்டர் எது எனக் கேட்டால், 'முகவரி’ ஹீரோ ஸ்ரீதர் கேரக்டர்’ என்பார் அஜித். அந்த அளவுக்கு மிக யதார்த்தமான, இயல்பான அந்த கேரக்டர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'மில்லினியம்’ பாடலும் அவருக்கு மிகவும் பிடிக்கும்!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, 'சிவாஜி கணேசனுக்குப் பிறகு பாடலுக்கான உதட்டு அசைவு அஜித்துக்கு அற்புதமாகப் பொருந்துகிறது’ எனச் சொல்ல, எதிர்பாராத அந்தப் புகழ்ச்சிக்குத் திக்கென அதிர்ந்து, பின் எழுந்துநின்று அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
அஜித், விஜய் என இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் ஆவேசத்தை அதிகப்படுத்திய படம். 'வாலி’, 'முகவரி’ வெற்றிக்குப் பிறகு வெளியான இந்தப் படம் சரியாகப் போகவில்லை.
தீனா
முதலில் இந்தப் படத்துக்கு இயக்குநராக  ஒப்பந்தமானவர் வேறு ஒருவர். ஆனால், படப்பிடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கும் படத் தயாரிப்பாளருக்கும் திடீரென முட்டிக்கொண்டது. புது இயக்குநரைத் தேடவேண்டிய நிர்பந்தம். 'எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டென்ட்னு ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தாரே... அவரை உடனே அழைச்சுட்டு வாங்க’ என அஜித் ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அந்த ஒருவர்தான்... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
சிட்டிசன்
பொதுவாக, அஜித் 'கெட்டப்’ மாற்றம் குறித்து அலட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், இந்தப் படத்தின் கதை பிடித்துப்போனதால், அத்திப்பட்டி கிராமத்து மீனவர் வேடத்துக்காக தினசரி வெற்றிலை போட்டு தனது பற்களைக் கறையாக்கிக்கொண்டு, விக், மேக்கப், தியாகி தாத்தா கெட்டப் எனப் பல வித்தியாச கெட்டப்களில் நடித்திருப்பார்!
பூவெல்லாம் உன் வாசம்
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக குலுமணாலி சென்றிருந்தார்கள். அப்போது திடீரென சிவாஜி கணேசன் இறந்துவிட்டார். குலுமணாலியில் அப்போது கடும் மழை. ஆனாலும் யோசிக்காமல் ராத்திரி ஒரு மணிக்கு குலுமணாலியில் இருந்து தானே காரை ஓட்டிக்கொண்டு அருகாமை நகரத்துக்கு வந்து, டெல்லிக்கு வந்து சேர்ந்தார். அங்கு இருந்து விமானம் பிடித்து சென்னைக்கு வந்து சிவாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றார். காரணம், சிவாஜி மீது அவருக்கு அந்த அளவுக்கு அபிமானம் கலந்த மரியாதை!
அசோகா
சின்ன ரோல்தான். கிட்டத்தட்ட வில்லன் வேடம்கூட. ஆனாலும், ஷாரூக் கான் கேட்டுக்கொண்டதால், இந்த இந்தி படத்தில் நடித்தார் அஜித். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் ஓடியாடி, துடிப்பாக வேலைபார்க்கும் உதவி இயக்குநர்களுக்குத் தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுப்பார் அஜித். அப்படி இந்தப் படத்தில் வேலைபார்த்த ஓர் இளைஞரை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர்... அஜித்தை வைத்து 'பில்லா, 'ஆரம்பம்’ என இரண்டு படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன்.
ரெட்
பிரபல டைரக்டர் ஒருவர் படத்தில் நடிப்பதற்காக அஜித் 'மொட்டை’ அடித்துக்கொண்டார். ஆனால், எதிர்பாராத காரணங்களால் அந்தப் படம் ரத்தாக, சிங்கம்புலியை அழைத்து 'ரெட்’ பட இயக்குநர் ஆக்கினார். அந்த மொட்டை கெட்டப்புக்கு ஏற்ப 'ரவுடி’ கதை பிடித்தார்கள்.
ராஜா
சும்மாச்சுக்கும் விடுமுறையைக் கழிப்பது போல மிக கேஸுவலாக அஜித் நடித்த படம். இந்தப் படம்தான் வடிவேலுவுடன்  அஜித் நடித்த ஒரே படம்.
வில்லன்
இந்தப் படத்தின் கதையை எழுதிய யூகிசேது, 'அஜித் இப்போ மாஸ். அவரோட ரசிகர்கள் அவர் படத்தில் ரஜினி மாஸையும் எதிர்பார்க்கிறார்கள்; கமல் பெர்ஃபார்மன்ஸையும் விரும்புகிறார்கள்’ என்றார். 'பக்கவாத’ நடை, கண்டக்டர் உடை என அஜித்தும் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து வைத்திருப்பார்!
என்னைத் தாலாட்ட வருவாளா
அஜித் நடித்த ஆரம்ப கால படம் இது. 'வெண்ணிலா' என்ற பெயரில் பாதி படம் உருவானபோது அஜித்துக்கு சென்னை அண்ணா சாலையில் பெரிய விபத்து. நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். படத்தை முடிக்க முடியாத நிலை. அஜித் 25 படங்கள் நடித்து முடித்த பின், எட்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்தனர். பாதியில் அஜித்துக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டதாகவே கதை பண்ணி, அவருடைய தம்பியாக விக்னேஷ் வந்து, ஏமாற்றிவிட்டுச் சென்ற காதலியைப் பழி தீர்ப்பதாகக் கதையை முடித்தார்கள்.
ஆஞ்சநேயா
இப்போது சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுக்காமல், தனது பட இசை வெளியீட்டு விழாக்களில்கூட கலந்துகொள்ளாமல் தவிர்க்கிறார் அஜித். ஆனால் அப்போது, 'நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்...’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தப் படத்தில் நடித்தார். அதுதான் அஜித்தின் தன்னம்பிக்கைக்கு சின்ன உதாரணம்!
ஜனா
'வல்லரசு’ படத்தை எடுத்த ஷாஜி கைலாஷை அழைத்து, ஒரு கேங்க்ஸ்டர் படம் வேண்டும் என உருவாக்கிய படம். 'பில்லா’, 'மங்காத்தா’ படங்களுக்கு முன்னர் துப்பாக்கியும் கையுமாக அஜித் உலா வந்த படம். 'பாட்ஷா’ படத்தைப்போல இருக்கும் என பட ரிலீஸுக்கு முன் பரபரப்பு இருந்தது.  
அட்டகாசம்
'பொள்ளாச்சி இளநீரே’ என்ற பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியா போயிருந்தார்கள். தயாரிப்பாளருக்குப் பணச் சிக்கல். படக் குழுவினர் அனைவரையும் தன் சொந்த செலவில் பார்த்து, அழைத்துவந்தார் அஜித்.
ஜீ
முதன்முதலாக லிங்குசாமி கதை சொன்னபோதே, 'இது மலையாளப் பட கதை மாதிரி இருக்கு. எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அதனால், இந்தக் கதை எனக்கு செட் ஆகாது’ எனச் சொன்னார். படம் வெளியான பிறகு அவர் சொன்னதுபோலவே முடிவு அமைய, பத்திரிகையாளர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து, 'படம் சரியாப் போகலை. ஆனால், நல்ல கதை’ என இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.  
பரமசிவம்
'சந்திரமுகி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் அஜித் நடித்தார். படபூஜையை ரஜினி தொடங்கிவைத்தார். ரஜினிக்கும் அஜித்துக்கும் மெல்லிய பாசம் பிறந்தது. அது இன்று வரை தொடர்கிறது.
திருப்பதி
முந்தைய சில படங்கள் சரியாகப் போகாததால், ஓய்வெடுத்துக்கொண்டு, சின்ன இடைவேளைக்குப் பிறகு ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் நடித்தார். சட்டென ஆளே மெலிந்து, இளைத்து, முடி வளர்த்து அஜித்தின் தம்பிபோல வந்து நின்றார். அஜித்தின் அந்தத் தோற்றம் அப்போதே செம வைரல் ஷாக் உண்டாக்கியது!  
வரலாறு
படத்தின் கதையைக் கேட்டதுமே, பரதநாட்டியம் ஆடும் திருநங்கை கேரக்டர் பற்றி அஜித்துக்கு சின்ன நெருடல். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் குழப்பம். 'அண்ணன், தம்பி கேரக்டர்களை மட்டும் அஜித் செய்துவிட்டு, பரதம் ஆடும் அப்பா வேஷத்துக்கு வேறு நடிகரை நடிக்க வைக்கலாமா?’ என யோசித்தார்கள். ஆனால், 'நானே நடிக்கிறேன்’ எனச் சொல்லி சில பரதநாட்டிய அபிநயங்களைக் கற்றுக்கொண்டு நடித்தார்.
ஆழ்வார்
'ஆழ்வார்’ மிகுந்த எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; சளைக்கவில்லை அஜித். ஃப்ளாப் கொடுத்தாலும் என் ஒவ்வொரு படத்துக்கும் அட்டகாசமான ஓப்பனிங் இருக்கும் என தெம்பாகச் சொன்னார். 'எத்தனை ஃப்ளாப் கொடுத்தாலும் தாங்குவேன்’ என அஜித்தின் துணிச்சல் பேட்டி அப்போது வெளியானது.
கிரீடம்
தயாரிப்பாளர் பூர்ண சந்திர ராவைச் சந்தித்து, 'ரஜினியின் 'தீ’ படத்தை  ரீமேக் செய்யலாமா?’ என அஜித் கேட்டார். 'ஏற்கெனவே பார்த்த படத்தை மக்கள் மறுபடி பார்ப்பார்களா எனத் தெரியவில்லையே!’ என்று ஏதேதோ சாக்குச் சொல்லி மறுத்துவிட்டனர். அந்த 'ரீமேக் ஜுரத்துடன்’ இருந்தபோது இயக்குநர் விஜய் எடுத்த விளம்பர படங்களைப் பார்த்து வியந்த அஜித், அவர் இயக்கத்தில் மலையாளப் பட ரீமேக்கான இந்தப் படத்தில் நடித்தார்.
பில்லா
'தீ’ ரீமேக் ஆசை நிறைவேறாமல் இருந்தவர், 'பில்லா’ படத்தை நிச்சயம் ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தார். ரஜினியிடம் அனுமதி வாங்கி நயன்தாரா, நமீதா என ஏக காஸ்ட்டிங்கில் படத்தை உருவாக்கினர். பழைய 'பில்லா’வில் தேங்காய் சீனிவாசனும் மனோரமாவும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு இணையான நடிகர்கள் இல்லை என்பதால், ரீமேக் பில்லாவில் அந்தப் பகுதியையே தூக்கிவிட்டார்கள்.
ஏகன்
முதலில் இந்த கதையைச் சொன்னவர் பிரபுதேவா. அவர்தான் படத்தை இயக்குவதாகவும் இருந்தது. ஆனால், திடீரென விஜய் படத்தை இயக்கச் சென்றுவிட்டார் பிரபுதேவா. பின்னர் பிரபுதேவா அண்ணன் ராஜு சுந்தரம் படத்தை இயக்கினார். பத்தும் பத்தாததற்கு இதன் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விழாவில் அஜித்தும் விஜய்யும் சந்தித்துக்கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பைப் பற்றவைத்தது!
அசல்
சிவாஜி குடும்பம் மீது இருந்த அபிமானத்தால், 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ பேனரில் இந்தப் படத்தில் நடித்தார். இந்தப் பட டைட்டில் கார்டில் 'கதை, திரைக்கதை, வசனம் உதவி அஜித்குமார்’ எனப் பெயர் வரும்.
மங்காத்தா
எதேச்சையான சந்திப்பின்போது, சத்யராஜுக்காக ஒரு நெகட்டிவ் ரோல் கதை வைத்திருப்பதாக அஜித்திடம் வெங்கட் பிரபு சொல்ல, கதையைக் கேட்டிருக்கிறார் அஜித். முழுதாகக் கேட்ட அடுத்த நொடி, 'இந்தப் படத்தை நானே பண்றேன். இதான் என் 50-வது படம்’ என்றார். ஐம்பதாவது படத்தை தெறி மாஸ் பட்டியலில் சேர்த்தது அந்த முடிவு!
பில்லா-2
  'பில்லா 1’ படத்தில் டான் ரஜினி ஆற்றில் விழுந்து இறந்துவிடுவதாக கதை இருக்கும். ஆனால், அஜித் நடிக்கும் 'பில்லா-2’ படத்துக்கான லீடை அதில் இருந்து எப்படி எடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தபோது, 'பில்லா டான் ஆவதற்கு முன்பு எப்படி சாதாரண ஆளாக இருந்தான். பின் எப்படி படிப்படியாக டான் ஆனான் என்று படமாக்கினால் நன்றாக இருக்கும்’ என அஜித் சொன்ன ஐடியாவில் உருவானது படம்!
இங்கிலீஷ் விங்கிலீஷ்
ஒருநாள் அஜித்துக்குத் திடீரென போன்; எதிர்முனையில் ஸ்ரீதேவி. தான் நடிக்கும் இந்தி படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கக் கேட்டார். ஆரம்பத்தில் அஜித் தவிர்த்தார். ஆனால், 'தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை அதிகம் உள்ள ஹீரோ நீங்கதான். கதைப்படி தன்னம்பிக்கை இல்லாத என் கேரக்டருக்கு நீங்கதான் தைரியம் கொடுக்குறீங்க...’ என ஸ்ரீதேவி சொன்னதும் உடனே ஓ.கே சொல்லி நடித்துக் கொடுத்தார்.
ஆரம்பம்
ஒரு காலத்தில் 'நான் அஜித்தை வைத்துப் படமே தயாரிக்க மாட்டேன்’ என பகிரங்கமாக அறிக்கையே விட்டார், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். தமிழ் சினிமாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் கால் ஊன்றிய பிறகு, பிரமாண்ட தயாரிப்பாளர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் என்பதில் அஜித்துக்கு வருத்தம். ஏம்.எம்.ரத்னத்தின் இரண்டு தயாரிப்புகள் பாதியிலேயே நின்றதில் மன உளைச்சலில் இருந்தார். அவருக்கு ஒரு லிப்ஃட் கொடுக்க, அவரது தயாரிப்பில் இந்தப் படத்தில் நடித்தார்.
வீரம்
அஜித் என்றாலே கோட் சூட் மாட்டிக் கொள்வார்; கார் ரேஸ் போவார்; ஹெலிகாப்டர் ஓட்டுவார் என்கிற எண்ணம் இருந்து வந்ததால், பக்கா கிராமத்துப் படம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டார். இயக்குநர் சிவா அஜித்தைச் சந்தித்தபோது, 'நீங்க படம் முழுக்க வேட்டி, சட்டையோடு நடிக்கிறீங்க. உங்க ரசிகர்கள் உங்களோட தம்பியா நடிச்சா படம் எப்படி இருக்கும்?’ எனச் சொல்ல, உடனே அந்த புராஜெக்ட் நடைமுறைக்கு வந்தது!  
என்னை அறிந்தால்
'ஆரம்பம்’ படத்தின் முதல் காப்பி பார்த்துவிட்டு அஜித்தும் ரத்னமும் ஒரே காரில் சென்றனர். அப்போது 'அடுத்த படத்தையும் நீங்களே தயாரியுங்கள்’ என்றார் அஜித். 'இயக்குநர் யார்?’ என்ற பேச்சு வந்தபோது, 'கௌதம் மேனன் டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு ஆசை. ஏற்கெனவே ரெண்டு தடவை அவரோட நடிக்க வேண்டியது தள்ளிப்போச்சு!’ என்றவர், கௌதம் மேனனிடம் ஒரு வரிகூட கதை கேட்காமல் ரத்னத்திடம் அட்வான்ஸ் வாங்கிக்கொடுத்தார்.
வேதாளம்
'பாட்ஷா’வில் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்ததுபோல, 'வேதாளம்’ படத்தில் கால் டாக்ஸி டிரைவர் வேடம் அஜித்துக்கு. 'பாட்ஷா’ ஃப்ளாஷ்பேக் போல இந்தப் படத்திலும் ஒரு ஃப்ளாஷ்பேக். அந்த போர்ஷனுக்கான அஜித் கெட்டப்... 'ரெட்’ ஸ்டைல் மொட்டை 'தல’!
55 திரைப்படங்கள்தானே வருகின்றன என கச்சிதமாகக் கணக்குப் போட்டவர்களுக்கு ஓர் ஒரு வரித் தகவல்.
சுரேஷ் - நதியா நடித்த 'என் வீடு என் கணவர்’ படத்தில் பள்ளி மாணவனாக சிறிய வேடத்தில் நடித்தார். 56 ஓ.கே-வா?
எம்.குணா, படங்கள் உதவி: ஞானம்

ன்றி-விகடன்