Saturday, October 10, 2015

மசாலா படம் (2015)-சினிமாவிமர்சனம்

நடிகர் : பாபி சிம்ஹா
நடிகை :லட்சுமி தேவி
இயக்குனர் :லட்சுமண் குமார்
இசை :கார்த்திக் ஆச்சர்யா
ஓளிப்பதிவு :லட்சுமண் குமார்
வெங்கட் என்ற தயாரிப்பாளர் பெரும் பொருட்செலவில் படம் ஒன்றை தயாரித்து வெளியிடுகிறார். இந்த படத்தை பார்க்கும் கார்த்தி என்பவர், சமூக வலைத்தளங்களில் படம் ரொம்பவும் மொக்கை என்று கருத்து பதிவிடுகிறார். இது வைரலாக பரவவே, படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால், தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. 

இந்நிலையில், கார்த்தி ஒரு விபத்தில் சிக்க, அதற்கு தயாரிப்பாளர்தான் காரணம் என்று மறுபடியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் கார்த்தி. இதுவும் வைரலாக பரவி பெரிய பிரச்சினையை கிளப்புகிறது. இந்நிலையில், டிவி சேனல் ஒன்று இந்த பிரச்சினையை கையிலெடுத்து, தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்களான கார்த்தி மற்றும் அவரது நண்பர்களை அழைத்து நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.

டிவி நிகழ்ச்சியில் இவர்கள் விவாதம் செய்துவரும் வேளையில் தயாரிப்பாளரான வெங்கட், கார்த்தி மற்றும் அவர்களது நண்பருக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது, ஒரு படத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் பெரும்பான்மையான மக்கள் ரசிக்கும்படி ஒரு கதை தயார் செய்து வந்தால் அந்த படத்தை தானே தயாரிப்பதாக கூறுகிறார். இதற்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறார். 

நண்பர்களும் அதை ஏற்றுக்கொண்டு கதை தயாரிக்கும் பணியில் மும்முரமாகிறார்கள். ஆனால், இவர்களால் சரிவர கதை எழுத முடிவதில்லை. எனவே, யாராவது ஒருவருடைய வாழ்க்கையை உற்று நோக்கினால், அதிலிருந்து நமக்கு கதை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அதன்படி, ஒரு மசாலா படத்திற்கு தேவையான காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் ஆகிய மூன்றுக்கும் மூன்றுவிதமான மனிதர்களை தேடுகிறார்கள்.

அதன்படி, காமெடிக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாத, வெகுளியான சிவாவின் வாழ்க்கையை பின்பற்ற தொடங்குகிறார்கள். ஆக்ஷனுக்கு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ரவுடியான பாபி சிம்ஹாவை தொடர்கிறார்கள். அதேபோல், ரொமான்ஸுக்கு, தனது காதலியின் பிறந்தநாளையே மிகப்பெரிய அளவில், வித்தியாசமாக கொண்டாடும் கௌரவ்வை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் இணைக்க ஒரு பெண் தேவைப்படுவதால், கார்த்தியின் தோழிக்கு தோழியாக இருக்கும் லட்சுமிதேவியை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இறுதியில் நண்பர்கள் அனைவரும் இவர்களை பின்தொடர்ந்து ஒரு கதையை தயார் செய்தார்களா? அதை படமாக எடுத்து வெற்றி பெற்றார்களா? என்பதே மசாலா படம். 

மிர்ச்சி சிவா, ஒரு நடுத்தர வர்க்க இளைஞனாக அழகாக பளிச்சிடுகிறார். இவர் பேசும் வசனங்கள், சிறு சிறு செய்கைகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பாபி சிம்ஹா, ஏரியா ரவுடியாக நடிப்பில் மிரட்டுகிறார். அதேநேரத்தில், ஒரு ரவுடிக்குள்ளும் காதல் வந்தால் எந்தமாதிரியான உணர்வு இருக்கும் என்பதை தனது அழகான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். 

கௌரவ், சாக்லேட் பாயாக அழகாக இருக்கிறார். இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார். லட்சுமி தேவிக்கு மூன்று நாயகர்களுடன் நெருங்கி பழக வேண்டும் என்பது போன்ற அழுத்தமான கதாபாத்திரம். அதை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்திருக்கிறார். அதேபோல், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நண்பர்களாக வருபவர்களும் தங்களது நடிப்பால் வெகுவாக ரசிக்க வைக்கிறார்கள்.

இன்றைய காலக்கiட்டத்தில் ஒரு படத்தை சமூக வலைத்தளங்களில் எந்தளவுக்கு தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதை இந்த படத்தில் அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் லட்சுமண் குமார். அதேநேரத்தில், விமர்சனம் செய்யும் அவர்களுக்கு ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு பெரிய சிரமம் என்பதையும் அறிவுறுத்தும்விதமாக அழகாக பதிவு செய்திருக்கிறார். இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு கச்சிதமாக பொருந்தும்படி எடுத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.

இயக்குனரே இப்படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இவருடைய இயக்கம் மாதிரியே ஒளிப்பதிவும் அழகாக அமைந்திருக்கிறது. கார்த்திக் ஆச்சார்யா இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘மசாலா படம்’ அழகான கலவை.

thax-aaaalar