Friday, October 09, 2015

'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட தற்கொலையே மேலானது: டேனியல் க்ரெய்க் அதிரடி

டேனியல் க்ரெய்க் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
டேனியல் க்ரெய்க் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
"இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் தற்கொலையே செய்து கொள்ளலாம்" என்று நடிகர் டேனியல் க்ரெய்க் தெரிவித்துள்ளார்.
2006-ஆம் ஆண்டு வெளியான 'கேஸினோ ராயல்' படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் க்ரெய்க் நடிக்கத் துவங்கினார். தொடர்ந்து 'குவாண்டம் ஆஃப் சோலஸ்', 'ஸ்கைஃபால்', தற்போது வெளியாகவுள்ள 'ஸ்பெக்டர் 'ஆகிய படங்களிலும் அவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இனிமேலும் இந்த பாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று டேனியல் கூறியுள்ளார்.
இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள டேனியல் க்ரெய்க், "இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதில் கண்ணாடியை உடைத்து எனது மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன். நான் அந்த பாத்திரத்தைக் கடந்து வந்துவிட்டேன். நான் அதை விட்டு நகர வேண்டும். அடுத்த ரெண்டு வருடங்களுக்காவது அதைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறேன் என எதையும் திட்டமிடவில்லை.
இதுவரை யாரும் அடுத்த பாண்ட் படத்தைப் பற்றி என்னிடம் பேசவில்லை. இதற்கு மேல் நான் பாண்ட் வேடத்தில் நடித்தால் அது பணத்துக்காக மட்டுமே இருக்கும். எனது சிந்தனை எல்லாம் ஒன்று தான். இந்த வேடத்திலிருந்து நான் ஓய்வு பெறும் போது, அதை நல்ல நிலையிலேயே வைத்திருக்கிறேன். அடுத்து வருபவர்கள் இதை இன்னும் மேம்படுத்துவார்கள்.
எனவே அடுத்து வருபவர்கள் இந்த பாத்திரத்தில் சிறக்க வேண்டும். அது போதும். இது ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம், கண்டிப்பாக கடுமையான உழைப்புக்கு தகுந்த பாத்திரம்", இவ்வாறு டேனியல் க்ரெய்க் பேசியுள்ளார்.
'ஸ்பெக்டர்' இந்தியாவில் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது. 'ஸ்கைஃபால்' படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ், ஸ்பெக்டரையும் இயக்கியுள்ளார்.



நன்றி-தஹிந்து