Tuesday, October 06, 2015

இனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேசம்!

இதுவரை நான் சாஃப்டாக இருந்து விட்டேன். இனி அப்படி இருக்க மாட்டேன் என நடிகர் சரத்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.


நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வருவதால் சரத்குமார் அணியும், விஷால் அணியும் வாக்குகளை வாங்க கடுமையான போட்டியில் இறங்கியுள்ளன. சரத்குமார் அணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகிறது விஷால் அணி. இதனால் இவர்களும் பதிலுக்கு அவர்கள் மீது பணம் கொடுத்து வாக்கு வாங்க முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரையில் இருக்கும் நாடக நடிகர்களை சந்திப்பதற்காக சரத்குமார் அணியினர் மூன்றாவது தடவையாக இன்று மதுரை வந்தனர். சரத்குமார், ராதிகா, ராதாரவி, கே.என்.காளை, ராம்கி, பாத்திமாபாபு, பசி சத்யா ஆகியோர் வந்திருந்தனர். அதற்கு முன்பே மதுரை சங்கம் ஹோட்டலில் நாடக நடிகர்கள் குழுமி இருந்தனர். அவர்களுக்கு உணவு கொடுத்து, வழிச்செலவுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டை மதுரை ஆதீனம் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது நடிகர் ராதாரவி பேசும்போது, ''எங்களுக்கு நிகரானவர்கள் கிடையாது. இவர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் நாடக நடிகர்களை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விடுவார்கள். எஸ்.வி.சேகர், கருணாஸ் எல்லாம் ஆளே கிடையாது. சரத்தை விட ஒரு தலைவர் யாருமில்லை. நடிகர் சங்கத்தில் வாரிசுகளை புகுத்துவதாக சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தில் என் மகனை சேர்க்காமல் உன் மகனையா சேர்க்க முடியும். அப்படி சேர்த்தால் அது அசிங்கமாக சொல்ல மாட்டார்களா? சரத்தும் நானும் மச்சான், மாப்ளையாக இருக்கிறோம் என்று வெளியில் சொல்கிறார்கள். என் தங்கச்சியை கட்டினால் சரத் எனக்கு மச்சான்தானே. இது எப்படி தப்பாகும். அவர்கள் தரும் 500க்கும், 1000க்கும் விலை போய் விடாதீர்கள். அவனுங்களுக்கு மதுரை நாடக நடிகர் சங்கம், புதுக்கோட்டை சங்கமெல்லாம் இப்பத்தான் தெரியும். நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் எங்களுக்கு நல்லது. வாக்களித்தால் உங்களுக்கு நல்லது’’ என்று மிகவும் ஆபாசமாகவும், ஒருமையிலும் பேசினார்.


சரத்குமார் பேசும்போது, ''எங்கள் மேல் தொடர்ந்து ஊழல் புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் இதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால், பணம் கைமாறிவிட்டது என்று எஸ்.வி.சேகரும், விஷாலும் ஆதாரமில்லாமல் சொல்லி வருகிறார்கள். அவர்கள் மீது பத்து கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போட்டுள்ளேன். ரஜினி, கமல் அவர்களை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு ஜனநாயகப்படி உரிமை உண்டு. இந்த சரத்குமார் நடிகர் சங்கத்துக்கு ஒன்றுமே பண்ணவில்லை என்று சொல்லும்போது மனது வலிக்கிறது. நாளை தேர்தல் நடந்து முடிந்தாலும் இனி ஒற்றுமையாக முடியாது. என்னை பற்றி அவதுறாக பேசியவர்கள் முகத்தில் என்னால் முழிக்க முடியாது. இவ்வளவு நாள் சாஃப்டாக இருந்துவிட்டேன். இனி இருக்க மாட்டேன். நான் யாரென்பதை காண்பிப்பேன்’’ என்றார்.


thanx-vigatan