Sunday, October 04, 2015

கொலைகள் உணர்த்தும் பாடம்: (காஞ்சி கொலைகள் -தொடர்: 10)

ரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்! என்பார்கள். அன்றோ? நின்றோ? இங்கே ஒருநாள் கொல்லப்படுவது நிச்சயம்! கொல்பவர்கள் தெய்வங்கள் அல்ல. கொல்லப்படுபவர்கள் உத்தமர்கள் அல்ல! இது அனைத்து கொலைகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு கொலையும் ஒரு நீதியை உணர்த்துகின்றன.

கொலைகள் சொல்லும் சேதி!

கொலைகள் பல அரங்கேற்றி, துன்புறுத்தி செல்வங்கள் சேர்த்து, தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைத்து வாழந்தான் குரங்கு குமார். எல்லாவற்றையும் வெறுத்து அமைதி வாழ்க்கைக்கு திரும்பிய பின் ஒருநாள் சத்தமில்லாமல் முடிந்தது அவனது கதை. 

கத்தியை எடுத்தவன் திருந்த நினைத்தாலும் முன் செய்த பாவங்கள் அவனை விடுவதில்லை. குரங்கு குமாரை கொன்றவன் ரவிப்பிரகாஷ். அடுத்தவனை கொன்று பதவியை அடைந்தால் அவனும் ஒருநாள் அதேபோல் வீழ்வது நிச்சயம் என்பது ரவிப்பிரகாஷ் கொலை சொன்ன சேதி. பாவங்கள் செய்வது மட்டும் பாவமல்ல. பாவங்கள் செய்ய நண்பனுக்கு துணைநிற்பதும், உதவுவதும் ஒருவகை பாவமே. கூடா நட்பிற்கு உதாரணம் ரவிப்பரகாஷின் நண்பன் சுரேஷ். பதவிக்காக ஒருவன் வீழ்த்தப்பட்டபோது, எதிரணி கூடாரத்தையே காலி செய்யும் சம்பவமாக அமைந்தது பொன்விளைந்த களத்தூர் விஜயகுமார் கொலை.

எவ்வளவு பணம் இருந்தாலும், எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், தான் செய்த  பாவங்கள் ஒருநாள் துரத்திக் கொல்லும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீபெரும்புதூர் குமரன் கொலை. இப்படி ஒவ்வொரு கொலையும் நமக்கு(!?) ஒரு பாடத்தை கற்று உணர்த்திச் செல்கின்றன. ஆனால் இந்த தாதாக்களுக்கு அது வெறும்  சம்பவமாக மட்டுமே கடந்துசென்றுவிடுகின்றன. பெரும்பான்மையான அரசியல் பிரமுகர்கள் இன்றளவும் தன்னை சுற்றி  பாதுகாப்பு வேலியிட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் வாழ்வதற்கு காரணம் பணம் மற்றும் அதிகாரத்தின் மீது கொண்ட தீராத ஆசை. 

அரசியல் தவிர்ப்பு அவசியம்!

குற்றவாளிகள் அரசியலில் நுழைவதை தடுக்க வேண்டும். அதற்கு கட்சிகளிடத்தில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும். மாறாக கட்சியை பலப்படுத்த வேண்டும். பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளிகளை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் மனோபாவம்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் இருக்கிறது. குற்றப்பின்னணி உள்ள அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிவு அந்த கட்சியினருக்கு இல்லாமல் போய்விடுகின்றது. கட்சி உட்பகையையும் அதிகரித்து கொலைக்கு வித்திடுகின்றது. 

குற்றவாளிகள் உள்ளாட்சி பதவி வகிப்பதால், மக்களும் அவர்களிடம் குறைகளை சொல்ல முடிவதில்லை, எதிர்த்து போராடவும் முடிவதில்லை. எவ்வித தகுதியும் இல்லாத இவர்களை போன்ற அரசியல்வாதிகள் உருவெடுப்பதை ஆரம்பத்திலேயே அரசியல் கட்சிகள் தடுக்க வேண்டும்.

கடிவாளமிடப்பட்ட காவல்துறை!

மக்களின் நண்பர்களாக இருக்க வேண்டிய காவல்துறை, குற்றவாளிகளுக்கு நண்பர்களாக செயல்படுகின்றது. அதற்கு காரணம், ஒரு காலத்தில் லுங்கியுடன் காவல்நிலையத்தில் கைகட்டி நின்ற குற்றவாளிகள் கொஞ்சநாளில் மக்கள் பிரதிநிதிகளாக, வளையவர ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு சல்யூட் அடிக்கும் நிலையில்தான் இன்று காவல்துறை உள்ளது. 

குற்றப் பின்னணி உள்ள அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டுவது, காவல்துறை மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது. ஒருவர் கிடைத்துவிட்டால் அவர்மீது தேங்கியுள்ள அனைத்து குற்றங்களையும் திணித்து தப்பித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளது காவல்துறை. இதனால் கொலைசெய்தவர்கள் வெளியில் சுகபோகமான வாழ்கின்றனர். கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், கிடைத்தவர்களையெல்லாம் கொலைகாரர்களாக மாற்றிவிடுகின்றனர். 

அதுபோல் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்களை கண்காணிக்கப்பதில்லை. பிழைப்பிற்காக தமிழகம் தேடி வரும் வடமாநிலத்தவரில், சரியான வேலை கிடைக்காமல் ஒரு கட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவது சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன. ஹோட்டல்கள், கட்டுமானப் பணி, தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களின் விவரம் காவல்துறையினரிடம் இல்லை. இதனால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது.

தனிப்பட்ட மனிதன் திடீரென ஆத்திரமூட்டப்பட்டு செய்யப்படும் கொலைகள் சமுதாயத்தை பெரிதும் அச்சுறுத்துவதில்லை. பலர் கூடி திட்டமிட்டு, நோட்டமிட்டு, கொடூர முறையில் பொது இடத்தில் ஓடஓட ஒருவரை சிதைப்பது சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சமூக கட்டமைப்பை சிதைக்கும் இது போன்ற கடும் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கை காவல்துறையினர் கடைபிடிக்கின்றனர். 

குற்றவாளிகள் தொழிலதிபர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் சமூகத்தில் வலம் வருகின்றனர். அவர்கள் அந்த பதவியை அடைந்ததும் தன்மீதான குற்ற ஆவணங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை அழிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். குற்றவாளிகளை ஆரம்பத்திலேயே தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதை தவறவிட்டதன் விளைவுதான் விளைவுதான் இது.

நிம்மதி உங்கள் சாய்ஸ்!

பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, சுகபோக வாழ்க்கைக்காகவோ ஒருவன் தவறான பாதையை தேர்தெடுக்கும்போது, ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்டுவதே இந்த தொடரின் நோக்கம். தவறான பாதை செல்வத்தை கொடுக்கலாம். நிம்மதியை கொடுக்காது!  தவறான பாதை பதவியை கொடுக்கலாம். நன்மதிப்பை கொடுக்காது! தவறான பாதையால் ஆடம்பரத்தை பெறலாம். அன்பை பெறமுடியாது.

தொடர் நிறைவடைந்தது! ஆனால் கொலைகள்.........?!
 
- பா.ஜெயவேல்

thanx-vigatan