Saturday, October 03, 2015

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 6)

சூணாம்பேடு ஊர் ஜாதகம்

காஞ்சிபுரம் மாவட்ட தென்கோடியில் உள்ள ஊர் சூணாம்பேடு! கலவரம், கல் உடைப்பு, கடை அடைப்பு, பேருந்து எரிப்பு என ரத்தம் தெறிக்கும் யுத்த பூமி! ஏதாவது ஒரு ரூபத்தில் எப்போதும் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே இருக்கும்! சுருக்கமாக சொன்னால் சூணாம்பேடு ஒரு குட்டி காஷ்மீர்!

சூணாம்பேடு பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அடுத்ததாக வன்னியர் இன மக்களும் அதிகம் வசிக்கும் பகுதி. சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் விவசாயம்தான் பிரதான தொழில். பெரிய அளவில்  வேலைவாய்ப்பு இல்லாத பகுதி. பிழைப்புக்காக சாராயம் காய்ச்ச தொடங்கியவர்களுக்கு, அதுவே குலத்தொழிலாகவே அமைந்துவிட்டது. 

இன்றளவும் இப்பகுதிகளில் நடக்கும் வன்முறைகளுக்கு, சாராயத்தின் பின்னணி வலுவானதாக இருக்கும். சாராயம் காய்ச்சினால் காவல்துறையினர் அழைத்துச் செல்வார்கள். காவல்துறையினருக்கு பணம் கைக்கு வந்தால் அடுத்த அரைமணி நேரத்தில், பிடிபட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிடலாம். அதை மிஞ்சினால் கணக்கு காட்டுவதற்காக ஒரு சிலரை கைது செய்வார்கள். கொஞ்சம் அபராதம்… சிலகாலம் சிறை! மீண்டும் வெளியே வந்தால், அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு வேறு தொழில் ஏதும் கைவசம் இருக்காது. அவர்களுக்கு இயல்பாகவே சாராய தொழிலை நோக்கி கால்கள் பயணிக்க தொடங்கிவிடும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்துவிடுவார்கள். 

குடும்பத்தலைவர் இல்லாத நேரங்களில், வாரிசுகள் தொழிலை கவனித்துக் கொள்வார்கள். படிப்பறிவு இல்லாததால் வாரிசுகளும் அதையே தொடர்வார்கள். கையெழுத்து போட காவல்நிலையம் வருபவர்களில் சிலர் வெளியே அரிவாளை போட்டுவிட்டு உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வருவதும் உண்டு. மாமூல் வந்தால் போதும் என்று காவல்துறையும் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையத்தில என்ன நடக்கின்றது என உளவு பார்ப்பதற்கென்றே சிறுவர்கள் இருப்பார்கள்.

பகையை வளர்த்த பதவி சுகம்!

சூணாம்பேடு கலவர வரலாறு பற்றி இன்னும் தெரிந்து கொள்ள சுமார் 20 வருடங்கள் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். திருநாவுக்கரசு என்பவரின் மகன் செந்தில். திருநாவுக்கரசின் தங்கை மகன் ஆனந்தன். செந்தில் சென்னையில் உள்ள நந்தனம் கலைக்கல்லூரில் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வருகின்றான். விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசம் இல்லாத அந்த ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளையை தொடங்குகின்றான். 

கட்சியை படிப்படியாக வளர்த்து மாவட்ட செயலாளர் பதவியை அடைகின்றான். சிறுசிறு பஞ்சாயத்தில் தொடங்கி பெரிய கட்டபஞ்சாயத்து வரை அவன் அதிகாரம் நீள்கிறது. இதனால் கைகளில் காசு புரள ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனது கட்டப்பஞ்சாயத்து தொழில்.

 
அப்போது அப்பகுதி திமுக பிரமுகர் தாமோதரன் என்பவரது ஆட்களுக்கும் செந்திலுக்கும் மோதல் ஏற்படுகின்றது. மோதலின் உச்சகட்டத்தில் ஒருநாள் தாமோதரனின் லாரியை செந்திலின் ஆட்கள் எரித்தனர். லாரி எரிப்பு வழக்கில் கைதாகி உள்ளே செல்கிறான் செந்தில். அந்த நேரத்தில் செந்தில் பொறுப்பை கவனித்துக் கொள்ளும் வாய்ப்பு அத்தை மகனான ஆனந்தனுக்கு கிடைக்கின்றது. 

மாவட்ட செயலாளராக வலம் வந்த இடங்களில் எல்லாம் வளம் வந்து  சேர்ந்தது. பதவி சுகம், பணம், பந்தா என்று கிடைத்த அத்தனை சந்தோஷங்களும் ஆனந்தனை திக்குமுக்காடச்செய்கிறது. அந்த பதவியை செந்திலுக்கு கொடுக்காமல் தாமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த நிலையில் செந்தில் ஜாமீனில் வெளிவந்தான். மாவட்ட செயலாளர் பதவியை  செந்திலுக்கு விட்டத்தர மறுக்கிறான் ஆனந்தன். 

இதனால் இருவருக்கும் இடையே  மோதல் வெடித்தது. செந்திலை ஊருக்குள் நுழையவிடாமல் ஆனந்தனின் ஆட்கள் மிரட்டத் தொடங்கினார்கள். இதனால் செந்தில் வெளியூரில் தங்கி கொண்டான். ஆனாலும் அவ்வப்போது ஊருக்குள் வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். இருவருக்கும் எற்பட்ட  மோதல் படிப்படியாக வலுப்பெற்றுக்கொண்டிருந்தது.  இந்த இருவருக்குள் ஏற்பட்ட பகையால் இருதரப்பிலும் பொருட்சேதமும், உயிர் சேதமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அறிவாள் வீசிய அத்தை மகன்

சிலவருடங்களில் செந்தில் ஆட்கள் ஊரை காலை செய்துவிட்டு சென்னையில் தஞ்சம் அடைகின்றார்கள். செந்திலின் ஆட்கள் சூணாம்பேட்டில் நுழைய முற்பட்டால் ஆனந்தனின் ஆட்கள்  விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். இதனால் செந்தில் ஓடிவிடுவான். லோக்களில் செந்திலுடைய ஆட்கள் என்று அடையாளம் தெரிந்தால் அவர்களை அடித்து துரத்திவிடுவார்கள். செந்தில் ஆட்கள் ஊரில் இல்லாததால், செந்தில் தரப்பினரின் வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. 

2007-ல் கொலை உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் தொடர்பாக செந்தில் மதுராந்தகம் கோர்ட்டுக்கு ஆஜராக வந்தான். அப்போது ஆனந்தனுடைய ஆட்கள் அவனை கோர்ட்டில் வைத்தே வெட்டுகின்றனர். அதில் காயங்களுடன் செந்தில் உயிர்பிழைத்தான். அந்த சம்பவத்திற்கு பின் ஆனந்தனை பழிதீர்க்க நினைத்தான் செந்தில். 

2008ல் சூணாம்பேட்டில் உள்ள வீட்டில் வைத்தே ஆனந்தன் மீது தாக்குதல் நடத்தினர் செந்திலின் ஆட்கள். அதில் ஆனந்தன் பிழைத்துக் கொள்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தனின் ஆட்கள் 2009 ஏப்ரல் 26-ம் தேதி மகாபலிபுரத்தில் செந்திலை துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றனர்

காவல்துறையை கலங்க வைத்த கலவர பூமி

அதைத் தொடர்ந்து 2009 மே 30-ல் ஆனந்தனுடைய அப்பா கஜேந்திரனும், கஜேந்திரனின் நண்பரான அருள் என்பவரும் செந்தில் தரப்பினரால் ஒரே நாளில் கூறு போடப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2009 நவம்பர் 30ல் ஆனந்தனின் தம்பி அருள் தன் காதலியுடன் இருந்த அந்தரங்கமான நேரத்தில் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்படுகின்றார்.

2010 ஜனவரி 13-ல் செந்திலின் சித்தப்பா மகன் வசந்தராஜா ஆனந்தனுடைய ஆட்களால் வெட்டிக் கொல்லப்படுகின்றார். இதனால் சட்டம் ஒழுங்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது காவல்துறை. 2010 ஜனவரி 18-ல் விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் ஆனந்தனின் தம்பி அசோக் என்பவனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்கின்றனர்.

இருதரப்பு முக்கிய ஆட்களும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டாஸ் காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் ஊருக்குள் பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். செந்தில் ஆதரவு குடும்பத்தினர் 15 வருடங்களாகவே ஊரில் நுழைய முடியவில்லை. சொந்த ஊரில் வாழ முடியாமல் வெளியில் தங்கியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஆனந்தன் தரப்பு ஆட்கள் சிலருக்கும் இதே நிலைதான். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரை காலிசெய்து விட்டு சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் தங்கி இருக்கின்றார்கள். இன்றளவிலும் சொந்த ஊருக்கும் நுழைய முடியாமல் பல குடும்பங்கள் பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் தங்கி இருக்கின்றன.

வேண்டும் வேலைவாய்ப்பு

“சுமார் 3500 பேர் சூணாம்பேடு காலணியில் வாழ்கின்றனர். அதில் 200க்கும் மேற்பட்ட இளம் விதவைகள் பென்ஷன் வாங்குகின்ற னர். இதில் பெரும்பாலானவர்கள் விதவைகள் ஆனதற்கு சாராயமே காரணம். பொதுமக்கள் நடுநிலைமையோடு இருக்க முடிவதில்லை. நீ எந்த குரூப் என்று கேட்டு தொந்தரவு செய் வாங்க. இந்த பிரச்சனை காரணமாகவே நிறைய பேர் ஊரை காலி செய்துவிட்டு போயிட்டாங்க. விவசாயமும் இப்ப குறைஞ்சு போயிடுச்சு. இதனால வேலையில்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள். 

சாராயம் காய்ச்சுவோர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர் கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் சூணாம்பேடு பகுதியில் எந்த தொழி லும் நடத்த முடியாது. இங்கு தொழில் செய்யவே நிறைய பேர் பயப்படுறாங்க. இதனால் இன்றளவிலும் இந்தப்பகுதி வளர்ச்சி அடையாமலேயே இருக்கின்றது.” என்கின்றனர் சூணாம்பேடு பகுதியை சேர்ந்தவர்கள்.

சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ஆனந்தனுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இதனால் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார் ஆனந்தன். கட்சியில் மீண்டும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். ஒரு பதவிக்காக ஏற்பட்ட பகை ஒரு ஊரையே சிதைத்துவிட்டது! 

அடுத்ததாக காஞ்சி நகரை கலங்க வைக்கும் நிழலுலக தாதா ஒருவரின் வெளிவராத பக்கங்களோடு தொடர்வோம்!

- பா.ஜெயவேல்

thanx-vigatan