Saturday, September 05, 2015

போக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : ஸ்ரீதர்
நடிகை :ஸ்பூர்த்தி சுரேஷ்
இயக்குனர் :ராகௌ மாதேஷ்
இசை :இந்திரவர்மன்
ஓளிப்பதிவு :சினிடெக்சூரி
நன்றி- மாலைமலர்


வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊர் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்ரீதர். இவருக்கு அந்த ஊரில் இருக்கும் மயில்சாமி காசு கொடுத்து உதவி வருகிறார். அந்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருக்கிறார் நாயகன். 

ஒருநாள் கல்லூரியில் படிக்கும் நாயகியை பார்க்கிறார். பார்த்தவுடனே அவள்மீது காதல்வயப்படும் நாயகன் அவள் பின்னாடியே சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் நாயகியும் நாயகனின் காதலை ஏற்றுக் கொண்டு, இருவரும் காதலித்து வருகிறார்கள். 

இந்நிலையில், நாயகனுடைய நண்பர்களில் ஒருவன் மது குடித்துவிட்டு, இறந்துவிடுகிறான். அவன் போலியான மது சாப்பிட்டுத்தான் இறந்துபோனான் என்பது அப்போது யாருக்கும் தெரியாததால் அதை அலட்சியமாக விட்டு விடுகின்றனர். 

பின்னர், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வரும் சிங்கம்புலி, ஊரில் கவுன்சிலராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அவரின் ஆசையை புரிந்து கொண்ட நாயகனும், மயில்சாமியும் அவரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து, அவருக்கு உதவுவதாக கூறி, சிங்கம் புலியிடமிருந்து பணத்தை கறக்கின்றனர். 

அவரிடமிருந்து கறந்த பணத்தை கொண்டு தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் ஸ்ரீதர். திருமணத்துக்கு முந்தைய நாள், தங்கையை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்க, அப்போது, அவர் மது குடித்து இறந்து போகிறார். 

அவர் போலி மது குடித்துதான் இறந்து போயிருப்பது நாயகன் உள்பட அனைவருக்கும் தெரிய வருகிறது. இந்த போலி மதுவுக்கு பின்னால் ஒரு கும்பல் இருப்பதையும் நாயகன் அறிகிறார். 

இறுதியில், அந்த போலி மது கும்பலை நாயகன் கண்டுபிடித்து போலி மதுக்களை ஒழித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. 

இதுவரை டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் கலக்கிய ஸ்ரீதர், நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படம். நாயகனுக்குண்டான அத்தனை அம்சங்களும் இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. வசனங்கள் உச்சரிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். 

நாயகி ஸ்பூர்த்தி சுரேஷ் பார்க்க அழகாக இருக்கிறார். நாயகனை திட்டுவதும், பின்னர் அவருடன் கொஞ்சி பழகுவதுமென இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. மயில்சாமி, சிங்கம் புலி வரும் காட்சிகள் எல்லாம் நகைச்சுவைக்கு 90 சதவீதம் கியாரண்டி. படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமேஷ் ரெட்டி, கிடா மீசையுடன் மிரட்டுகிறார். சாராய தொழில் செய்யும் பெரிய தாதாவாக அசத்தியிருக்கிறார். 

மதுவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுவுக்கு எதிரான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு ராகௌவ் மாதேஷுக்கு சபாஷ் போடலாம். சமூகத்துக்கு நல்லதொரு கருத்தை சொல்ல வந்திருக்கும் இயக்குனர், கூடவே நகைச்சுவையையும் கொடுத்து, மக்களுக்கு மனதில் அந்த கருத்து எளிதில் பதியும் படி செய்திருக்கிறார். 

இந்திரவர்மன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை ஓ.கே. சினிடெக்சூரி ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கூட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ஸ்ரீதரின் வேகமான நடனத்துக்கு இவருடைய கேமராவும் வேகம் காட்டியிருப்பது சிறப்பு. 

மொத்தத்தில் ‘போக்கிரி மன்னன்’ மன்னாதி மன்னன்.