Friday, September 04, 2015

பாயும் புலி - சினிமா விமர்சனம்

மாஃபியா கும்பலை ஒழித்துக்கட்டும் கதை என்பதால் படம் முழுவதும் அதிரடி வேகத்தில் அடிக்கிறார் விஷால்.
திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றலாகி வரும் அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் ரோல் அவருக்கு. பணியில் இணைவதற்கு முன்பாகவே ஹீரோ அண்டர் கிரவுண்ட் ஆபரேஷனில் இறங்குகிறார். ஆஃப் டூட்டியில் வந்து அங்குள்ள மாஃபியாக்களின் கொட்டத்தை அடக்கிவிட்டு திரும்புகிறார். அதன்பிறகும் மதுரையில் ஒரு தொழிலதிபர் கொல்லப்பட உண்மையிலேயே ஆன் டூட்டியில் வந்து மாஃபியாக்களின் வேர்வரை சென்று களையெடுக்கிறார்.
இந்த நாலுவரி மையக்கருவை வைத்துக்கொண்டு பாயும் புலியாக மிரட்ட வேண்டிய திரைக்கதை ஏனோ, பல காட்சிகளிலும் பதுங்கு புலியாகவே வந்து பம்முகிறது.
விஷாலுக்கு அண்ணனாக வரும் சமுத்திரகனி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார்.. வெறும் அழகு பதுமையாக வரும் காஜல் அகர்வால் அவ்வப்போது வந்து டூயட் பாடுகிறார். பாடல் காட்சிகளுக்கான இசை தெலுங்கு படங்களையே ஞாபகப்படுத்துகின்றன.
சூரியின் காமெடி முதல் பாதியில் பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. வேல ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் இரண்டு பேருமே அப்பா பாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
நீண்ட நாள் கழித்து நடிகர் ஆனந்த்ராஜை திரையில் பார்க்க முடிகிறது. ஆனந்த்ராஜூக்கு இப்படத்தில் மிகவும் பக்குவமான ரோல்.
ஒரு வழக்கமான தமிழ் பட போலீஸ் கதைக்குத் தேவையான பல விஷயங்கள் பாயும் புலி படத்தில் இருக்கிறது. அதுதான் இந்தப் படத்தில் பெரிய குறையே.
இடைவேளைக்குப் பிறகு, சரி என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம் என நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் வேகம் மிஸ்ஸிங். பாடல்களும் அவ்வளவு சிறப்பாக படத்துடன் பொருந்திப் போகவில்லை.
டெக்னிக்கலாக பாயும் புலி வெகு சிறப்பான முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை. வேல்ராஜ் ஒளிப்பதிவு, இமான் பின்னணி இசை, ஆண்டனி படத்தொகுப்பு எல்லாமே மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த சிறப்புகள் எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமே படத்திற்கு வலுசேர்க்கிறது,
அதிரடி தெலுங்கு சண்டைப் பட ஸ்டைலில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. கேமராவும் எடிட்டிங்கும் சிறப்பாக இருந்தும் படத்தை தூக்கிநிறுத்த முடியவில்லை.
முதல் பாதியில் வரும் சில சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் மிகவும் அழுத்தமாக இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் அருமையான கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆதாயத்துக்காக அரசியல் செய்யாத, தேசபக்தியில ஈடுபாடுமிக்க ஒரு பாரம்யரிய குடும்பத்தின் வாரிசுகள் எப்படி அடாவடி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பது நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த சின்னச் சின்ன தருணங்களில் மட்டுமே இயக்குநர் சுசீந்திரன் மிளிர்கிறார்.
கடைசி 20 நிமிடங்கள் சுவாரசியமாக இருந்தாலும் அது படத்தை பெரிய அளவில் தூக்கி நிறுத்தவில்லை. ஒரு சுமாரான படம் என்ற நிலைக்குக் கீழாக இல்லையென்றாலும் 'பாண்டிய நாடு' தந்த திருப்தி பாயும்புலியில் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.


நன்றி- த இந்து