Thursday, September 03, 2015

புலி படத்தின் மெயின் காமெடி ஹீரோ ரோபோ சங்கர் பேட்டி

‘மாரி’ படத்தின் மூலம் காமெடி நடிப்பில் பளிச்சென்று தெரிந்தார் ‘ரோபோ’ சங்கர். தற்போது விஜய் நடித்து வெளிவரவுள்ள ‘புலி’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் எப்படி ‘ரோபோ’ சங்கர் ஆனீர்கள்?
என்னுடைய பெயர் சங்கர். நான் மதுரைக்காரன், எம்.ஏ வரை படித்திருக் கிறேன். படிக்கும்போதே நான் பாடி பில்டர். நடனக் குழுக்களிலும் இருந்துள் ளேன். ஒரு முறை வித்தியாசமாக MUSCLES நடனம் பண்ண ஆரம் பித்தேன். பிறகு உடல் முழுக்க பெயின்ட் அடித்து ரோபோ போன்று நான் ஆடிய நடனம் பிரபலமானது. அப்படித்தான் ‘ரோபோ’ சங்கர் ஆனேன். இதுவரை 42 நாடுகளில் 14,000 கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.
கலை நிகழ்ச்சிகளில் இருந்து எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?
தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிதான் எனக்கு அறிமுகம். அதன் மூலமாக மேலும் சில நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வந்தது. அது இன்னும் பிரபலமாக சினிமா வாய்ப்புகள் வந்தன. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களில் பெரிய பாத்திரங்கள் கிடைத்தன. ‘வாயை மூடி பேசவும்’ இயக்குநர் பாலாஜி மோகன் மூலமாக ’மாரி’ படத்தில் வாய்ப்பு வந்தது. அதன்மூலம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி இருக்கிறேன். இந்த இடத்தைப் பிடிக்க நான் நிறைய கஷ்டப்பட்டுள்ளேன்.
நான்தான் ‘மாரி’ படத்தின் நிஜ ஹீரோ என்று நீங்கள் பேசியதாக சில செய்திகள் வெளிவந்ததே?
என் வாழ்க்கையிலேயே நான் மிகவும் வருத்தப்பட்டது இந்தச் செய்தியைப் பார்த்துதான். ‘மாரி’ படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ் சார். அப்படி இருக்கும்போது தனுஷ் சாரை புண்படுத்தும் விதமாக நான் அப்படி சொல்வேனா?
தனுஷ் சாரை நேரில் சந்தித்து, அந்த மாதிரி எல்லாம் நான் பேசவில்லை சார் என்றேன். அதற்கு அவர், “எனக்கு உங்களைப் பற்றி தெரியும். நீங்கள் இப்போதுதானே வந்திருக்கிறீர்கள். இதைப்போல இன்னும் நிறைய வரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்றார். அதற்கு பிறகு 2 நாட்கள் கழித்து ஒரு தங்கச் சங்கிலியை பரிசளித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அதுதான்.
எந்த இயக்குநரின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. ஆகையால் அனைத்து இயக்குநரின் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். நமக்கு காமெடிதான் வரும். அதனால் காமெடிக்கு முதலில் முக்கியத்துவம் அளிப்பேன்.
‘புலி’ படத்தில் உங்களுக்கு என்ன பாத்திரம்?
அதில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்ன பாத்திரம் என்பது மட்டும் சஸ்பென்ஸ்.
எந்த நாயகனுடன் இணைந்து காமெடி பண்ண ஆசைப்படுகிறீர்கள்..
எனக்கு கமல் சார், அஜித் சார் இருவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதே போல, நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள், நான் யாருக்கும் போட்டி இல்லை. என் வழி தனி வழி என்று தீர்மானித்து போய் கொண்டிருக்கிறேன்.


நன்றி - த இந்து