Saturday, August 29, 2015

மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹிந்தி , ராதிகா ஆப்தே)

இருப்பவர்களில் சிலரும், இறந்துபோனவர்களில் சிலரும் வரலாறாக ஆக முடியும். அவர்கள் வரலாற்றை செல்லுலாயிடில் செதுக்கவும் முடியும் என்பது தற்போதைய பாலிவுட்டின் நம்பிக்கை. அந்த வகையில், 2011-ல்‘ தி டர்ட்டி பிக்சர்’ தொடங்கி 'பாக் மில்கா பாக்' ‘பான் சிங் தோமர்’, ‘ரங் ரசியா’ ‘மேரி கோம்’ என கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘பயோபிக்' வகை படங்கள் வரிசைகட்டி வந்துகொண்டிருக்கின்றன.
ஒருகாலத்தில் ‘பயோபிக்’ என்றாலே நாட்டு விடுதலைக்குப் போராடியவர்களின் வாழ்க்கைக் கதை என்பதுதான் இந்திய சினிமாவின் நிலை. ஆனால், 1994-ல் வெளிவந்த சேகர் கபூரின் 'பண்டிட் குயின்' பூலான் தேவியின் வாழ்க்கையை வெற்றிப் படமாக ஆக்கித்தந்தது. எனினும் இந்தவகை ‘பயோபிக்’ ஒரு ‘ட்ரெண்ட்'டாக மாறியது 2013-ல் இருந்துதான்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மட்டும் அல்லாமல் சம்பல் கொள்ளைக்காரர்கள் (பான் சிங் தோமர்), விளையாட்டு வீரர்கள் (பாக் மில்கா பாக், மேரி கோம்), மனித உரிமைப் போராளிகள் (ஷாஹித்), திரைப்படக் கலைஞர்கள் (டர்ட்டி பிக்சர்) எனப் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இன்னும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள், இசை மேதைகள், அரசியல் தலைவர்கள், நிழல் உலக தாதாக்கள், கார்கில் வீரர்கள் எனப் பலரது வாழ்க்கைக் கதைகள் படமாக்கப்பட்டுவருகின்றன. தோனி, அசாருதீன், மோடி, கிஷோர் குமார், எம்.எஸ். சுப்புலட்சுமி, சார்லஸ் சோப்ராஜ் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைக்கு வருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் மீதான பாலிவுட்டின் மோகத்தில் பிறந்த இன்னொரு படமாக ‘மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ திரைப்படத்தை எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம், ‘தஷரத் மாஞ்சி’ என்னும் எளிய மனிதனின் வாழ்க்கை அவ்வளவு எளிதாகக் கடக்கக்கூடியதல்ல. வர்க்கம், சாதி, அரசு, சுரண்டல் போன்றவை குறித்த சமூகப் பொருளாதாரப் பாடமாக இந்தப் படம் விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மாஞ்சியின் அசாத்தியமான வாழ்க்கை.
பிஹாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கஹலவுர் கிராமத்திலுள்ள மலையைத் தனியாளாகக் குடைந்து பாதை உருவாக்கியிருக்கிறார் தஷரத் மாஞ்சி. சுத்தி, உளியை மட்டும் வைத்துத் தன் கையாலேயே இந்த மலைப் பாதையை உருவாக்குவதற்கு அவருக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த அசாத்தியமான மனிதனின் வாழ்க்கையைத் திரையில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் கேத்தன் மேத்தா. வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படங்களை எடுப்பதில் இவருக்கு அனுபவம் அதிகம். பாலிவுட்டில் ‘சர்தார்’, ‘மங்கல் பாண்டே’, ‘ரங் ரசியா’ போன்ற படங்கள் இவர் இயக்கியவை.
‘மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ படத்தில் ‘தஷரத் மாஞ்சி’ கதாபாத்திரத்தில் நவாஸுத்தீன் சித்திக்கி நடித்திருக்கிறார். மாஞ்சியின் மனைவி ‘பகுனியா’வாக ராதிகா ஆப்தே. 1950களில் சுதந்திர இந்தியாவில் தலைவிரித்தாடிய சாதியப் பாகுபாடுகளையும், வறுமையையும் பின்னணியாகக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தஷரத் மாஞ்சிக்கும், பகுனியாவுக்கும் குழந்தைத் திருமணம் நடக்கிறது. ஊரின் ஜமின்தாரிடமும் (திக்மான்ஷு தூளியா), அவரது மகனிடமும் (பங்கஜ் திரிபாதி) அடிமையாக வேலை செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக ஊரைவிட்டே ஓடிவிடுகிறான் தஷரத்.
ஏழு ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்பி வரும் தஷரத், போராடி தன் மனைவி பகுனியாவிடம் சேர்கிறான். ஆனால், அந்த ஏழு ஆண்டுகளில் ஊரில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறையாலும், சுரண்டலாலும் தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதனால் தஷ்ரத்தும் பாதிக்கப்படுகிறான். அந்த ஊரில் இருக்கும் மலை, மக்களுக்கு அடிப்படை வசதிகளான மருத்துவமனை, பள்ளி போன்ற எதுவும் கிடைக்கவிடாமல் செய்கிறது.
அந்த மலைமீது நடந்து வரும்போது கால்தவறி விழுந்து இறந்துவிடுகிறாள் பகுனியா. மனைவி இறப்பதற்குக் காரணமாக இருந்த மலையைக் குடைந்து பாதை அமைப்பதைத் தன் வாழ்க்கையின் லட்சியமாக ஆக்கிக்கொள்கிறான் தஷ்ரத். ஊரே பைத்தியக்காரன் என்று சொன்னாலும், இருபத்திரண்டு ஆண்டுகள் போராடித் தன் லட்சியத்தில் வெற்றியடைகிறான் தஷ்ரத் மாஞ்சி.
நவாஸுத்தீன் சித்திக்கின் நடிப்புத் திறமைக்கு மற்றுமொரு சாட்சியாக தஷ்ரத் மாஞ்சியின் கதாபாத்திரம் எப்போதும் விளங்கும். இந்தக் கதாபாத்திரம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். திரைக்கதை ஆங்காங்கே அலுப்பை ஏற்படுத்தினாலும் அதைத் தன் நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார் நவாஸுத்தீன்.
பகுனியா கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவின் நடிப்பைவிட அழகுப் பதுமை பிம்பத்தையே அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ‘127 அவர்ஸ்’ படத்தின் சாயல் அவ்வப்போது காட்சிகளில் எட்டிப் பார்க்கிறது. நேர்த்தியான வசனங்களும், உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்தாலும் திரைமொழியோடு இசையாத இசையும், படத்தொகுப்பும் திரைக்கதையில் சற்றுத் தொய்வை ஏற்படுத்துகின்றன.
படம் எப்படியிருந்தாலும் அரசாங்கம் எனும் அதிகார இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் தெரிவித்து ஒடுக்கப்பட்டவன் ஒருவனின் உயர்ந்த வாழ்க்கையை எல்லோருக்கும் புரியும் இயல்பான திரைமொழியில் பதிவுசெய்ததற்காகவே கேத்தன் மேத்தா பாராட்டுக்குரியவர்.
சாதியப் படிநிலைகள், வறுமை, உழைப்புச் சுரண்டல், செயல்படாத அரசு இயந்திரம் போன்றவற்றின் கோர முகத்தையும், அவற்றுக்கு எதிரான ஒரு எளிய மனிதனின் வெற்றியையும் வலுவாகப் பதிவுசெய்கிறது ‘மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’.


நன்றி - த இந்து
என். கௌரி