Saturday, August 01, 2015

இது என்ன மாயம் - சினிமா விமர்சனம்

'சைவம்' படத்துக்குப் பிறகு விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'இது என்ன மாயம்'.
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் (அறிமுகம்) நடிப்பில் வெளிவரும் காதல் படம் என்பதால் 'இது என்ன மாயம்' மனதிலும் மேஜிக் ஜாலம் நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
'இது என்ன மாயம்' மனசுக்குள் நுழைந்ததா?
டிராமாவில் பணம் சம்பாதிக்க முடியாமல் சர்வைவலுக்காக திணறும் நண்பர்கள் ஒரு தலையாய் காதலிப்பவர்களை, விரும்பும் நபருடன் சேர்த்து வைப்பதற்காக ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். விக்ரம் பிரபு அந்த கம்பெனியை இயக்குகிறார்.
நவ்தீப், தான் பாடகி கீர்த்தி சுரேஷைக் காதலிப்பதாகவும், எங்களை சேர்த்து வைக்க நீங்கள் உதவுங்கள் என்றும் விக்ரம் பிரபு அண்ட் கோவிடம் கேட்கிறார். ஆனால், விக்ரம் பிரபு இதில் வழக்கத்துக்கு மாறாக சொதப்புகிறார். ஏன் இந்த சொதப்பல் நிகழ்கிறது?நவ்தீப் காதல் நிறைவேறியதா? விக்ரம் பிரபுவின் புராஜெக்ட் என்ன ஆகிறது? இப்படியான சில கேள்விகளுக்கு கொஞ்சம் இழுவையாக பதில் சொல்கிறது திரைக்கதை.
திரையில் டிராமா ஆரம்பிக்கும்போது சிரித்து மகிழும் ரசிகர் கூட்டம், காதலை சேர்த்து வைப்பதற்காக ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று விக்ரம் பிரபு ஐடியா உதிர்த்ததும் நிமிர்ந்து உட்கார்கிறது.
காதலை சேர்த்து வைப்பதற்காக விக்ரம் பிரபு செய்யும் செட்டப் மேஜிக் ரசிக்க வைக்கிறது. சிரிப்பும், எனர்ஜியுமாக கடந்து போகும் அந்த எபிஸோட் மீண்டும் மீண்டும் அப்படியே ரிப்பீட் ஆவதால் பின்பாதி முழுக்க முடியலை சாமியோவ்...
இது முழுமையான ரொமான்ஸ் ஜானரில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம். காலேஜ் இளைஞன், கிரிக்கெட் பிளேயர் என கதாபாத்திரத்துக்குப் பொருந்திப் போகிறார். அவர் உருவமும், பாடி லேங்வேஜூம் ரொமான்ஸ் செய்வேனா என்று அடம்பிடிக்கிறது. ஆனால், காதலில் விழுவது, அதை ஒப்புக்கொள்ள ஈகோ காட்டுவது, பின்னர் பிரிவுக்குப் பின் காதலிக்காக மருகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
அறிமுக நாயகி கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கான தேவையை நிறைவு செய்கிறார். கண்ணீரோடும், காதலோடும் பேசும் காட்சியில் மனதில் நிற்கிறார்.
நாசர், அம்பிகா, காவ்யா ஷெட்டி, பாலாஜி வேணுகோபால், பிக் எஃப் எம் பாலாஜி, 'லொள்ளு சபா' ஜீவா, சார்லி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
கிரிக்கெட் வீரராக இருக்கும் விக்ரம் பிரபு ஹாக்கி போட்டியில் ஜெயிப்பது எல்லாம் எந்த லாஜிக் சாரே? காலேஜ் கல்ச்சுரல், ஃபிரஷ்ஷர்ஸ் டே நிகழ்ச்சி என்றால் எவ்வளவு எனர்ஜி இருக்கும்? ஆனால், இதில் எந்த எனர்ஜியும் இல்லாமல் ஒட்டாமல் கடந்துபோகிறது.
காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படத்தில் அழுத்தமாக இருக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் தேமே என்று நகர்கின்றன. ரசனையான அத்தியாயங்கள் கடக்க வேண்டிய இடங்கள் எல்லாம் மெதுவாக...மிக மெதுவாக நகர்ந்து சோதனையை ஏற்படுத்துகின்றன.
பிக் எஃப் எம் பாலாஜி, அஜய், பாலாஜி வேணுகோபால் டீம் மட்டும் கவுன்டர் வசனம் பேசி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
நீரவ்ஷாவின் கேமரா கல்லூரிக் கனவுகளையும், காதலர்கள் எண்ணங்களையும் வண்ணங்களாகப் படம் பிடிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஆனால், பின்னணி இசையில் ஜி.வி.பின்னி இருக்கிறார்.
ஆண்டனி பல இடங்களில் கத்தரி போட மறந்துவிட்டாரே என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
விஜய் இயக்கும் படங்களில் காதல், எமோஷன், சென்டிமென்ட் என்று ஏதாவது ஒரு விஷயம் ஆழமாகப் பேசப்படும். ஆனால், இந்தப் படத்தில் காட்சிகள் அழகாக இருக்கிறதே தவிர ஆழம் எதுவும் இல்லை.
விக்ரம் பிரபு காதலியைப் பிரிவது ஏன் என்பதற்கு எந்த காரணமும் அழுத்தமாக இல்லை. வித்தியாசமான ஐடியா என்று உருவாக்கிவிட்டு அதை படம் முழுக்க உலவ விடாமல் அதே ஐடியாவில் நொண்டி அடிப்பதுதான் படத்தின் பலவீனம்.
மனதில் எந்த மாயமும் செய்யாமல், மேஜிக் இல்லாமல் சாதாரணமாய் முடிகிறது படம்.


நன்றி -த இந்து