Monday, June 01, 2015

இந்தி யில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படத்தைப் பார்த்தேன்.கொள்ளை அடித்தேன்! -பட்டுக்கோட்டை பிரபாகர்

2007-ம் வருடம், கேரளா - மலப்புரம் மாவட்டத்தில் இடுமுழிக்கால் நகரம். டிசம்பர் மாதத்தின் சில்லென்ற குளிரை அனுபவித்தபடி, இரண்டு தினங்களில் பிறக்க இருக்கும் புத்தாண்டை எப்படிக் கொண்டாடலாம் என்று மக்கள் வகை வகையாக திட்டமிட்டுக்கொண்டிருந்த 30-ம் தேதி இரவில் ரகசியமாக நிகழ்ந்தது அந்த விபரீதம்.
அதை அவர்கள் உணர்ந்தது மறுநாள் தான். தென் மலபார் ‘கிராமின் வங்கி’க் கிளை மேனேஜரும் ஊழியர்களும் என்றும்போல மதிய உணவை டப்பாவில் அடைத்துக் கொண்டு வங்கிக்கு வந்து சேர்ந்தார்கள். வங்கியின் சேஃப்ட்டி லாக்கர் இருக்கும் பாதுகாப்பான(?) தனியறைக்கு வந்து பார்த்த ஊழியர் வீல் என்று மலையாளத்தில் அலறினார்.
லாக்கர் உடைக்கப்பட்டு, தங்கமும் பணமும் இருக்க வேண்டிய இடத்தில் காற்று மட்டுமே இருந்தது. கீழே பார்த்தால் அறையின் நடுவில் தரையில் ஒரு ஓட்டை. தளத்தின் கான்கிரீட் ஸ்லாப் உடைக்கப்பட்டு ஓட்டை உருவாக்கப்பட்டிருந்தது.
சைரன் சத்தத்துடன் விரைப்பாக வந்து சேர்ந்தது போலீஸ். பயிற்சி பெற்ற போலீஸ் நாய்கள் குதித்து இறங்கின. தடயவியல் நிபுணர்கள் கை ரேகை, கால் தடம் சேகரிக்க பூதக் கண்ணாடி, பவுடர், பிரஷ் சகிதம் வந்து சேர்ந்தார்கள்.
லாக்கர் ‘கேஸ் கட்டர்’ கொண்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தளத்தின் கான்கிரீட்டைப் பெயர்த்து உடைக்கப் பயன்படுத்திய ஆயுதம் எதுவும் சிக்கவில்லை. லாக்கர் அறை யின் சுவர் ஒன்றில் ‘ஜெய் மாவோ' என்று எழுதப்பட்டிருந்தது.
மேனேஜர் கம்ப்யூட்டரைத் தட்டி திருடுபோன தங்கம், ரொக்கம் இரண் டின் மொத்த மதிப்பு 9 கோடி என்றார். வாயைப் பிளந்தது கேரள போலீஸ்! கேரளா மாநிலத்தில் நடந்த வங்கிக் கொள்ளைகளிலேயே பெரிய கொள்ளை என்கிற அந்தஸ்து பெற்றுவிட்டது அந்தக் கொள்ளை!
மீடியாக்கள் உச்ச சத்தத்தில் அல றின. வாட்ஸ் அப் அப்போது இல்லாத தால், மக்கள் கடைகளிலும் தொலை, அலைபேசிகளிலும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பலவிதமான குழுக்கள் அமைக்கப் பட்டன. விசாரணைகள் முடுக்கிவிடப்பட் டன. வங்கி இருந்த அந்தக் கட்டிடத் தின் கீழ்த் தளத்தில் ‘ஜனவரி 8 அன்று புதிய உணவகம் திறக்கப்படும்' என்கிற போர்டு வெளியே வைக்கப்பட்டிருக்க, உள்ளே மேஜை, நாற்காலிகள் கொஞ்சம் இருக்க, ஆயத்த ஏற்பாடுகள் அரைகுறையாக நடந்திருக்கும் நிலை யில் இருந்தது.
கட்டிடத்தின் உரிமையாளர் விசாரிக் கப்பட்டார். ‘உணவு விடுதி தொடங்க வாடகை பேசி 50 ஆயிரம் முன் பணம் கொடுத்தார்கள். அதற்காகத்தான் வேலைகள் நடக்கின்றன' என்றார் அவர். வாடகை ஒப்பந்தத்தில் இருந்த முகவரியில் விசாரித்தபோது அது போலி யான முகவரி என்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் மிகவும் சாமர்த்திய மாக திட்டம் போட்டிருப்பதும் புரிந்தது. வெளிப் பார்வைக்கு அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக உணவு விடுதி வரப் போவதாக ஒரு போர்டை வைத்துவிட்டு, பேருக்கு சில மேஜை, நாற்காலிகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு, வங்கி நேரம் முடிந்ததும் இரவுகளில் கீழ்த் தளத்தில் இருந்து, லாக்கர் அறைக்கு நேர் கீழே ஸ்லாபில் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து ஓட்டை போட்டு வந்திருக்கிறார்கள்.
மலப்புரம் எஸ்பி விஜயன் தலைமையில் ஒரு குழு தீவிரமாக விசாரணையில் இறங்கியது. கட்டிடத் தின் உரிமை யாளர், மற்றும் அவர்களைப் பார்த்த சிலர் சொன்ன அடையாளக் குறிப்புகளைக் கொண்டு கம்ப்யூட்டர் மூலம் கொள்ளையர்களின் முகங்களை வரைந்தார்கள். (இந்த முறையில் குற்றவாளிகளை வரைவதற்கு முன் னோடி ஜான்பென்ஸ் என்பவர். விதவித மான கண்கள், மூக்குகள், காதுகள், கன்னங்கள் வைத்து முதலில் ஃபோட்டோ ஃபிட் சிஸ்டம் ஒன்றை இவர்தான் அறி முகப்படுத்தினார். இப்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் கோடிக்கணக்கான முகங்களை வரை யவும், ஒப்பிடவும் முடியும்.)
வரையப்பட்ட முகங்கள், மற்றும் கிடைத்த கைரேகைகள் இவற்றை பழைய குற்றவாளிகளின் பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது எவற்றுடனும் அவை பொருந்தவில்லை. ‘ஜெய் மாவோ' என்று சுவரில் எழுதப்பட்டிருந் ததால், ‘இது நக்சல் கூட்டத்தின் வேலை’ என்றுதான் முதலில் நினைத்தார்கள். ஆனால், போலீஸைக் குழப்புவதற்காக அவர்கள் செய்த சதி வேலை என்பது பிறகுதான் தெளிவாகியது.
போலீஸுக்குக் கிடைத்த 12 விதமான துப்புகளை வைத்து கொள்ளையர் களைப் பிடிக்கப் போராடியும் ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு துப்பு அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு லாட் ஜில் இருப்பதாகச் சொன்னது. ஒரு படை அங்கு விரைந்தது. அவர்கள் அந்த அறையைக் காலி செய்திருந்தார்கள்.
அந்த அறையில் திருடப்பட்ட தங்கத் தில் ஒரு கிலோவை மட்டும் விட்டு விட்டுச் சென்றிருந்தார்கள். மீதி தங்கம் ஹைதராபாத்தில்தான் யாரிடமோ விற்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற நோக்கில், ஆந்திர போலீஸின் உதவி யுடன் ஹைதராபாத்தை அலசியெடுத் தார்கள். ‘என்னாச்சு?' என்று உயரதிகாரி கள் கேட்டபோது, போனவர் கள் உதடுகளைப் பிதுக் கினார்கள்.
விசாரணை அதிகாரி களுக்கு கோவாவில் இருந்து ஒரு போன். ‘எங்களை உங் களால் பிடிக்க முடியாது' என்று சவால்விட்டது அந்தக் குரல். ஒரு டீம் கோவாவுக்கு ஒடியது. வாயில் நுரை தள் ளாத குறையாக அலைந்தது. இப்போது பெங்களூரில் இருந்து போன். கர்நாடகா போலீஸின் உதவியைக் கோரி பெங்களூரில் தேடுதல் வேட்டை நடத்தியது இன்னொரு டீம். அடுத்த போன் தமிழ்நாட்டில் இருந்து. இந்த விபரீதமான கண்ணாமூச்சி தொடர... கேரளா போலீஸுக்கு இந்தக் கொள்ளைக்காரர்களைப் பிடித்தேயாக வேண்டும் என்று வெறி ஏறியது.
57 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கோழிக்கோட்டில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தது போலீஸ் படை. அந்த நால்வரில் ஜோசஃப் என்கிற ஜெய்சன்தான் கொள்ளை டீமின் தலைவன். மற்ற மூவரில் ஒருத்தி பெண். (இன்னொரு கொள்ளைக்காரனின் மனைவி)
நால்வரையும் விசாரிக்கிற விதத்தில் விசாரித்ததும் தங்கம், ரொக்கம் இவற் றைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தை அவர்கள் கக்க, இரண்டு கட்டங்களாக அவற்றைக் கைப்பற்றினார்கள். கோர்ட் டில் தொடரப்பட்ட வழக்கில் மூன்று ஆண் களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பெண்ணுக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் கிடைத்தன.
விசாரணையில் ஜோஃசப், ‘‘இந்தி யில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் புத்தாண் டுக்கு முதல் நாள், ஓர் அபார்ட்மெண்ட் டில் உள்ள ஒரு லாக்கரை தளத்தில் ஓட்டை போட்டுக் கொள்ளையடிப்பது போல காட்சி வரும். அதைப் பார்த்து தான் நான் இந்தக் கொள்ளைத் திட்டத்தை உருவாக்கினேன். மொத்தம் இரண்டு மாதங்கள் யோசித்து திட்டம் வகுத்தேன்’’ என்றான்.
எப்படி கண்டுபிடித்தார்கள்?
கொள்ளை நடந்த 30-ம் தேதி இரவில் அந்த நால்வரில் யாராவது ஒருவர் செல்போன் உபயோகித்திருக்க வேண்டும் என்று முதலில் ஊகித்தது போலீஸ். அந்த ஊகம் உண்மை என்று உறுதியானது. அந்த வங்கிக்கு அருகில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து அன்று அழைப்புகள் கடத்தப்பட்டவை கிட்டத்தட்ட 20 லட்சம். இதில் எந்த போன் நம்பர் கொள்ளைக்காரனுடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடும் வேலை!
இதை சவாலாக எடுத்துக் கொண் டார்கள். செல்போன் சர்வீஸ் தருகிற அத்தனை பேரின் உதவியையும் நாடினார்கள். ஐ.டி-யில் வேலை பார்க்கிற தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நிறையப் பேரை அழைத்தார்கள். ஒரு மிகப் பெரிய படை அமைக்கப்பட்டது. 20 லட்சம் போன்களையும் மானிட்டர் செய்தார்கள். சந்தேகப் பட்டியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி, கடைசியில் 1,057 அழைப்புகளை அழுத்தமாக சந்தேகப்பட்டார்கள். அந்த போன்களை விடாமல் ரகசிய மாக கண்காணித்தார்கள். பட்டியலைச் சுருக்கி ஒற்றை எண்ணுக்கு வந்துவிட் டார்கள். அந்த எண்ணை வைத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டார் கள். ஒரு மிகப்பெரிய நெட் வொர்க் மூலம் பலரின் ஒத்துழைப்புடன் இதைச் சாதிக்க முடிந்தது என்று பெருமை யுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித் தார்கள் போலீஸ் அதிகாரிகள்.
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில்... ஒரு வில்லன் ஒரு பெண்ணைக் கொலை செய்வான். பழி அவள் கணவன் மேல் விழுவது போல செட்டப் செய்வான். போலீஸ் சோதனையிடும்போது சமையலறையில் ஒரு கள்ளக் காதலன் எழுதிய மூன்று காதல் கடிதங்கள் கிடைக்கும். அந்தக் கள்ளக் காதலனைப் பிடித்து விசாரிப்பார்கள். அவன் 'ஆமாம் ரகசிய காதல் உண்மைதான்' என்பான். அவன் வில்லனின் ஆள்.
அந்தக் கடிதங்கள் செட்டப். போலீஸின் கையில் கிடைப்பதற்காகவே ரகசியமாக வைக்கப்பட்டவை. கடிதங்களை நுணுக்கமாக கார்பன் பவுடர் தடவி சோதிக்கும்போது... சதி அம்பலமாகும். 7-ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தின் அச்சுப் பதிவுகள் 2-ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் இருக்கும். அதாவது, ஒரே சமயத்தில் மூன்று கடிதங்களும் எழுதப்பட்டிருக்கும். இயல்பாக எழுதி முடித்த கடிதத்தை அடியில் வைத்து அடுத்த கடிதத்தை எழுதியதால் மாட்டிக் கொள்வான்!
- வழக்குகள் தொடரும்…
a



thanx = the hindu