அன்பு கமல்...
ஏதோ ஒரு வெளியில், பணியிலிருந்து ஓய்வுபெற்றவனுக்கும், ஒரு துறவிக்குமான இடைப்பட்ட நிலையிலிருந்து, எனது குறைகளையும், வலிகளையும் பேணிக்கொண்டே, இந்த உலகில் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் கமல் ஹாசனின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சட்டென எனது வயது குறைகிறது, களைப்பு வடிகிறது, முதுகுத் தண்டு நிமிர்கிறது, மூட்டுக்கள் குணமாகின்றன, இதயம் லேசாகிறது, என் புன்னகை விரிகிறது, எனது ஆன்மா எழுச்சி பெறுகிறது.
ஒவ்வொரு படைப்பாளியும், நடிகனாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் சரி, தனது புகழ் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு, ஐந்து நிலைகளைப் பார்த்தாக வேண்டும்.
எனது பெயரை எடுத்துக்காட்டாகக் கொண்டால்,
முதல் நிலை, ‘பாலச்சந்தர் யார்?’
அடுத்த நிலை, ‘எனக்கு பாலச்சந்தர் மட்டுமே வேண்டும்’
மூன்றாம் நிலை, ‘எனக்கு பாலச்சந்தரைப் போல யாராவது வேண்டும்’
நான்காம் நிலை, ‘எனக்கு இளமையான பாலச்சந்தர் வேண்டும்’
கடைசி நிலை, மீண்டும் -‘அட, பாலச்சந்தர் யார்?’
ஆனால் திரு. கமல்ஹாசன் தான் சாதித்ததன் மூலமாக, எனக்கு இந்தக் கடைசி நிலை வருவதைத் தவிர்த்துவிட்டார்.
கமல் ஒரு அடையாளம். தான் எடுத்த எல்லாத் துறைகளிலும் மன்னன். மின்சாரத்தைக் கண்டுபிடித்தது எடிசன் என்கிறோம், தொலைபேசியைக் கண்டுபிடித்தது அலெக்சாண்டர் பெல் என்கிறோம், ரேடியோவுக்கு மார்கோனி, அசையும் படங்களை வைத்துக் கதையைச் சொன்னவர்கள் லூமியர் சகோதரர்கள் என்கிறோம்.
மேற்சொன்ன தொழில்நுட்பங்கள் எவ்வளவு முன்னேறினாலும் அதைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்கள், அவர்களது தொலைநோக்குப் பார்வையால், அவர்கள் முன்னோடியாக இருந்ததால், என்றென்றும் நினைவுகூரப்படும்.
இந்த ஒப்பற்ற பட்டியலில் எனது பெயருக்கும் ஒரு இடமிருப்பதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். ஏனென்றால் கமலைக் கண்டறிந்தது நான் என்பதால்.
உண்மையாகப் பார்த்தால் கமலை நான் கண்டறியவில்லை. அவரை அவரே தெரிந்துகொள்ள ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தேன். அவ்வளவே. அந்தக் காலகட்டத்தில் என்னை நானே அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
கமல், சினிமா வீதிகளில் நடக்கக் கற்றுக்கொண்டபோது, தனது கையைப் பற்றிக்கொள்ள எனக்கு அனுமதி அளித்தார். அடுத்து, நான் யோசிக்கும்போது தனது மனதைப் பற்றிக்கொள்ள அனுமதி அளித்தார். அடுத்து, அவரது கற்பனா சக்தியின் எல்லைகளை எனக்குக் காண்பித்தபோது, நான் அதில் ஆராய்ந்தேன், தொடர்ந்து அவரது படைப்பாற்றலுக்கான எல்லை விரிந்தபோது, அதற்கான பசி அதிகரித்தபோது நான் மனப்பூர்வமாக அவரை என் பிடியிலிருந்து விடுவித்தேன், அவர் தன்னை அறிந்துகொள்ள, சிறகுகளை விரித்துப் பறந்ததைப் பார்த்தேன்.
கமல், தனக்கான தரத்தையும், வரம்பையும் தானே நிர்ணயிக்கும்போது நான் வியப்பதை என்றைக்குமே நிறுத்தியதில்லை. அந்த அளவில் ஒரு தரம் இருக்கும் என்பதையே பலரால் நினைத்துப் பார்க்க முடியாது. அவர் எந்த விதியையும் பின்பற்றுவதில்லை. மாறாகத் தனக்கான விதிகளை உருவாக்குகிறார். பின் அதை உடைத்துவிட்டு மீண்டும் புதிதாகத் தொடங்குகிறார்.
அவருக்கு இன்று தெரிந்திருக்கும் அத்தனையும் நான் கற்றுத் தந்ததல்ல. எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டார். மிச்சத்தை, கேள்வி கேட்டு, விசாரித்து, கோரி, பார்த்து, கவனித்து, படித்து, மேம்படச் செய்து, பரிசோதித்து, அனுபவித்து, கற்று அவரை அவரே அறிந்துகொண்டார். தனது எல்லைகளுக்கு அப்பால் செல்ல அவர் என்றுமே பயந்ததில்லை.
சினிமாவுக்காகத் தனது புகழையும், சம்பாத்தியத்தையும் கமலைப் போல யாரும் பணயம் வைத்ததில்லை. இது புகழ் மற்றும் பணத்துக்கான தேடல் அல்ல. இது அதையும் தாண்டியது. கமல் பெற்றதைவிட இழந்ததே அதிகம். போட்டிகளை, போட்டியாளர்களைக் கடந்தவர் கமல்.
இந்தியாவின் மீதிருக்கும் தீராத பற்றே அவரது உற்சாகத்துக்குக் காரணம்
அவர் தனித்து, உயர்ந்து நிற்கிறார்.
அவர் ஒப்பிட முடியாத நிலையில் இருக்கிறார்.
ஆனாலும் அவரது பாதங்களும், இதயமும் இந்திய மண்ணோடு கலந்து உறுதியாக நிற்கின்றன. தோள்கள் உறுதியாக, புகழ் தரும் சலனத்துடன் சண்டையிட்டு, நிலைத்து நிற்கும் உண்மையான, நிலையான படைப்பாற்றலைத் தேடி நிற்கிறார்.
ஆம், அதில் காயங்கள் ஏற்பட்டாலும் என்றும் அவர் தோற்கவில்லை. காயப்பட்டாலும், தாழ்ந்து போகவில்லை.
டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா !!!
(கேரள மாநில அரசு கமல் ஹாசனின் வாழ்நாள் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கியது. அந்த விருது விழாவில் கலந்துகொள்ள இயலாத இயக்குநர் பாலச்சந்தர் கமல் ஹாசனுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் இது. உத்தம வில்லன் திரைப்படம் வெளியாகும் இந்த தருணத்தில் இங்கே பிரத்யேகமாகப் பிரசுரமாகிறது)
- Prabhakar Shenoy Manager at CORP BANKமலருக்கும் மனதுக்கும் மட்டும் அல்ல கலைஞனுக்கும் ஜாதி இல்லை.இல்லவே இல்லை. ஜாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், நிற்க, நான் கலைஞர் என்று கூறப்படும் அரசியல்வாதி இதற்கு விதிவிலக்கு.about 13 hours ago · (0) · (0) · reply (0) ·
- " உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காது நீ வாழலாம் " . என்னும் வரிகளுக்கு ஏற்ப தன்னை தானே அறிந்து தன்னிலை உணர்ந்து தன்னை தானே செதுக்கிகொள்ளும் மாபெரும் கலைஞன். தன்னை என்றும் மாணவனாக எண்ணி தினமும் கற்றுக்கொள்ளும் பண்பு கொண்டவர். அவரது உயர்வை யாராலும் நிர்ணயிக்க முடியாது. ஏன் அது அவராலேயே முடியாது.Points1385
நன்றி -த இந்து