தமிழ் ரசிகர்களை ‘ஓ காதல் கண்மணி’ மூலமாகக் கவர்ந்திருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமா, கேரள சினிமா, ஃபகத் பாசிலுடனான நட்பு, அப்பா மம்மூட்டியின் பங்களிப்பு என ‘தி இந்து’ தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவிட்டீர்களே…
ஒரு கனவு நனவான மாதிரி இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. எல்லாம் கடவுளின் ஆசீர்வாதம். மணி சார் படங்களுக்கு நான் அவ்வளவு பெரிய ரசிகன். இந்தப் படத்துக்காக அவர் அழைத்துப் பேசியதிலிருந்து இப்போதுவரை நடந்தது அனைத்துமே ஒரு கனவு போலவே இருக்கிறது.
ஒரு பக்கம் சீரியஸ் மலையாளப் படங்கள். அதற்கு இணையாகக் காதல் படங்கள். உங்களை எந்த மாதிரியான நடிகர் என்று சொல்ல விருப்பம்?
எந்த மாதிரியான படங்களிலும் நடிக்க முடியும் என்று மக்கள் நினைக்க வேண்டும். எந்தக் கதாபாத்திரத்துக்கும் நான் சரியாக இருப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டார்கள் என்றால் அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும். எனக்கு இந்த வகை சினிமா மட்டும்தான் என்றில்லை எல்லா வகையான படங்களும் பார்ப்பேன். அதைப் போலவே எந்த வகைப் படத்திலும் நடிக்கத் தயார்.
உங்கள் வளர்ச்சியை ஒரு அப்பாவாக மம்மூட்டி எப்படிப் பார்க்கிறார்? தலையீடு செய்வதுண்டா?
எனக்கு என்ன தெரியுமோ, அதில் சிறந்தது எதுவோ அதை நான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். நடிப்பில் அப்பாவுக்குத் தேசிய விருது கிடைத்தபோது என்னிடமும், அக்காவிடமும் “நீங்க என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்கணும்” என்று சொன்னார்.
எப்போதுமே படப்பிடிப்பில் இருந்ததால் எங்களைப் பார்த்துக் கொண்டது எல்லாம் கம்மிதான். எப்போதுமே திட்ட மாட்டார், அடிக்க மாட்டார். எனக்கு அப்பாவே ஓர் உதாரணம்தான்.
அதேபோல என்னுடைய விஷயங்களில் எப்போதுமே அப்பா தலையிட்டதில்லை. என்ன முடிவு என்றாலும் நீயே எடு, தப்பாக வந்தாலும் சரி, சரியாக வந்தாலும் சரி அதிலிருந்துதான் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்வார். நடிப்பு மட்டுமல்ல, எனக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பாதான் ரோல் மாடல்.
இந்திய அளவில் தரமான படங்களைத் தருவதில் மலையாளத்துக்கு முக்கியமான இடம் உள்ளது. ஆனால், சினிமா வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லையே?
தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே திரையரங்குகள் அதிகம். மாநிலங்களும் பெரியவை. கேரளாவில் திரையரங்குகள் குறைவு. இந்தித் திரையுலகம் என்று எடுத்துக்கொண்டால் அதன் வியாபாரம் உலகம் முழுவதும் இருக்கிறது. நிறைய மக்களுக்குத் தமிழ் மொழி தெரியும். ஏன் கேரளாவில்கூடத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார்கள்.
இப்போது எங்களால் முடிந்த அளவுக்கு சப்-டைட்டில் போட்டு இந்திய அளவில் மலையாளப் படங்களை வெளியிட முயற்சி செய்கிறோம். ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மலையாளப் படங்களுக்கு நல்ல விமர்சனம் வருகிறது. ஒரு படத்தை வேறு மொழியில் ரீமேக் பண்ணும்போது அதன் அசல்தன்மை போய்விடும். அதே வேளையில் அந்தந்த மொழியில் சப்-டைட்டில் சேர்த்தாலே போதும். படமும் புரிந்துவிடும், படத்தின் அசல்தன்மையும் குறையாது.
மலையாள சினிமாவில் சக நடிகர்களில் ஒருவரான ஃபகத் பாசிலுக்கு நெருக்கமானவர் நீங்கள். அவர் பற்றிச் சொல்லுங்கள்..
ஃபகத்தைச் சின்ன வயதிலிருந்தே தெரியும். இயக்குநர் பாசில் எனது குடும்ப உறுப்பினர் மாதிரி எனது திருமணம் நடந்தபோது அனைத்து வேலைகளையும் பார்த்து, அனைவரையும் வாசலில் நின்று வரவேற்றார். அதே போல, ஃபகத்துக்குத் திருமணம் நடந்தபோது அவன் பின்னால் நான் இருந்தேன். ஃபகத், நஸ்ரியாவைத் திருமணம் பண்ணியது ரொம்ப சந்தோஷம்.
நஸ்ரியாவும், எனது மனைவியும் நெருங்கிய தோழிகள். ஃபகத்துக்கு இருக்கும் திறமை அவனுடைய வயது நடிகர்களில் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதுதான் உண்மை. அவனுடன் எனக்கு இருக்கும் நட்பை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போட்டியாக நான் நினைக்கவில்லை. நான் நன்றாக வர வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கும், அவன் நன்றாக வர வேண்டும் என்ற நினைப்பு எனக்கும் எப்போதுமே இருக்கிறது.
சென்னை எந்த அளவுக்கு உங்களுக்கு நெருக்கம்?
சொன்னால் நம்பமாட்டீர்கள்..கேரளாவைவிடச் சென்னையில்தான் அதிக நேரம் செலவழித்திருக்கிறேன். பள்ளி வாழ்க்கை எல்லாமே சென்னையில்தான். கல்லூரி மட்டுமே அமெரிக்காவில் படித்தேன். எனக்கு இங்கு நண்பர்கள் அதிகம். என்னுடைய அப்பா, அம்மா கட்டிய முதல் வீடு சென்னையில்தான் இருக்கிறது. எனக்குப் பிடித்த நகரம் எப்போதுமே சென்னைதான்.
தமிழக - கேரள சினிமா ரசிகர்கள் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
இரண்டு மாநில சினிமா ரசிகர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சினிமாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பார்க்கிறார்கள். எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்து விமர்சனம் செய்வார்கள். அவர்களுக்குப் பிடித்த நடிகர்களைக் குடும்பத்தில் ஒருவரைப் போலக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு அந்த நடிகரை எவ்வளவு பிடிக்கும் என்பதை ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் வெளிப்படுத்துகிறார்கள்.
இங்கேயும் என்னை ஒரு கேரள நடிகராகப் பார்க்காமல், எப்படி நடித்திருக்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள். இரண்டு மாநில ரசிகர்களையும் எனக்குப் பிடிக்கும். சினிமாவுக்கு மொழியோ பிராந்திய உணர்வோ தேவையில்லை. அதில் வாழ்க்கை இருந்தால் கொண்டாடிவிடுவார்கள்.
நன்றி - த இந்து