Sunday, November 30, 2014

திகார் - பேரரசு உடன் எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேட்டி

திகார் இசை வெளியீட்டு விழாவில் கிரண் பேடி உடன் பவர் ஸ்டார் சீனிவாசன்
திகார் இசை வெளியீட்டு விழாவில் கிரண் பேடி உடன் பவர் ஸ்டார் சீனிவாசன் 
பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திகார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
கிரண்பேடி படத்தின் இசையை வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள். 



இவ்விழாவில் 'பவர் ஸ்டார்' சீனிவாசனை பேச அழைப்பதற்கு, "இங்கு வந்துள்ளவர்களில், ஒருவருக்கு மட்டுமே திகாரைப் பற்றி தெரியும். பெயரிலே பவரை வைத்திருக்கும் பவர் ஸ்டாரை அழைக்கிறேன்" என்று கூறினார் பேரரசு. 



அதனைத் தொடர்ந்து 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேசியது: 



"பேரரசு போன் செய்து இசை வெளியீட்டு விழாவிற்கு வரணும்னு கேட்டார். நான் என்ன படம் என்று கேட்டேன். 'திகார்' என்றார். என்னது திகாரா? மறுபடியும் டெல்லி போலீஸ் வந்திருச்சோ என்று பார்த்தேன். உண்மையில் நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் என்று நினைக்கிறேன். 


நிறைய இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவிட்டேன். தம்பி பேரரசு இயக்கத்தில் நடித்தபோதும் சந்தோஷமாக இருந்தது. ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் சொல்லுவார், நானும் அலட்டிக் கொள்ளாமல் நடித்துவிட்டேன். 2, 3 நாள் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 



நான் இந்த நிகழ்ச்சிக்கு வரணுமா, வேண்டமா என்று யோசித்தேன். வந்தால் கிண்டல் செய்வார்களோ என்று பயந்தேன். போவோம், எல்லாத்தையும் பார்த்துவிட்டோம்... இதையும் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். 



ரமேஷ் கண்ணா, வெங்கடேஷ் இருவரும் டெல்லி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதெல்லாம் ஒண்ணுமே கிடையாதுங்க. திடீரென்று இரவு 12 மணிக்கு தமிழ்நாட்டில் இருந்து "சார்.. உங்களை டெல்லிக்கு கூட்டிட்டு போறோம்" என்றார்கள். எதுக்கு என்று கேட்டேன். விசாரணை என்றவுடன் முன்னாடியே சொல்லக்கூடாதா கொஞ்சம் பணம் ஏதாவது எடுத்துட்டு வருவேன்ல என்றேன். எதுக்கு டெல்லி, கூட்டிட்டு போய் தூக்கு போட்டுருவாங்களோ என்று யோசித்தேன். 



என்ன தான் வருது என்று பார்த்துவிடுவோம் என்று கிளம்பினேன். வேலூரில் இருந்தே ஏற்றினார்கள். என்னங்க சென்னைக்கு போகலயா என்று கேட்டேன். இல்லை சென்னைக்கு சென்றால், உங்களது ரசிகர்கள் உங்களை பிடித்துவிடுவார்கள் என்றார்கள். சரி பரவாயில்லை என்றேன். அதிகாலை 2 மணிக்கு எழுப்பி, 3 மணிக்கு குளித்து கிளம்பி கூட்டிட்டு போனார்கள். 



என்னை நம்பிக்கை துரோகம் செய்தார்கள். வேண்டுமென்றே நான் செய்யவில்லை. என் உடன் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். கோடிக்கணக்கான பணங்களை இழந்து, நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால், அது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்லுவேன். உண்மை என்று ஜெயிக்கும் என்பார்கள். அதனால் தான் உங்கள் முன் நிற்கிறேன். 



உண்மையில் சொல்கிறேன், திகார் ஜெயில் ரொம்ப நல்ல ஜெயில். இரவு 8 மணிக்கு கொண்டுப் போய் விட்டார்கள். மொழி தெரியாது, புது இடம் என்று பயந்தேன். ஒரு ரூம்மில் படுக்கச் சொன்னார்கள். படுத்திருந்தேன். பக்கத்தில் இருவர் படுத்திருந்தார்கள். அவர்கள் யார் என்றே தெரியாது. காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கு தான் நன்றி சொன்னேன். ஏனென்றால், திகாரில் ஜெயிலில் இருந்த 1500 தமிழ் போலீஸும் என்னுடைய ரசிகர்கள். 



என்னை பார்த்தவுடன், "என்ன பவர்.. இங்க வந்துட்டா. ஷுட்டிங்கா " என்றார்கள். ஆமா என்று பொய் சொல்லக்கூடாது ஏனென்றால் ரொம்ப நாள் இருக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியும். குறைந்தது 20 நாளாவது இருக்கணும், அப்படின்னா தான் பெயில் கிடைக்கும். ஷுட்டிங் எல்லாம் இல்லை. அப்படியே வந்தேன் என்று தெரிவித்தேன். பரவாயில்லை பவர். அதனால ஒண்ணுமில்லை. இதப் பார்த்து நீங்க படம் எடுக்கணும் என்றார்கள். கண்டிப்பாக எடுக்கிறேன் என்று தெரிவித்தவுடன், உங்களுடன் இரவு படுத்திருந்தார்கள் அல்லவா யாரென்று தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். ரேப் கேஸில் வந்தவர்கள் என்றவுடன், நம்மளை ரேப் பண்ணாமல் விட்டார்களே சாமி என்று எண்ணினேன். 



அங்கு எனக்கு ஒரு அருமையான நண்பர் கிடைத்தார். என்ன பவர் இங்கு இருக்கீங்க என்று கூட்டிட்டு அவருடைய இடத்திற்கு சென்றார். அடுத்த நாள் இன்னொரு இடத்திற்கு கூட்டிட்டு போனார். அங்கு இருந்தது எல்லாம் பெரிய பெரிய முதலைகள், போனவுடன் என்ன பண்ணிட்டு வந்தீங்க என்று கேட்டார்கள். சின்ன மேட்டர் தான் என்றவுடம், நான் எவ்வளவு தெரியுமா 2000 கோடி என்றார்கள். நான் கடப்பாரை நீ குண்டு ஊசி என்றார்கள். 


ஒவ்வொரு இடத்திற்கு சொல்லும் போது, வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது. திகார் அனுபவங்கள் எல்லாம் வேண்டாம், ஆனால் நான் பார்த்துவிட்டேன். திகார் பார்த்தவுடன் நிறைய விஷயங்கள் இருக்குமோ என்று பார்த்தால், ஒண்ணுமே இல்லை. ஆனால் இந்த 'திகார்' படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. 



இந்தியாவில் எங்கு சென்றாலும் இனிமே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் எங்கேயும் போக மாட்டேன், திரையுலகில் தான் நிரந்தரமாக இருப்பேன். என்னுடன் இருந்த நண்பர்கள், உள்ளிட்ட அனைவரையும் துரத்திவிட்டேன். என்னுடைய ரசிகர்கள் தான் என்னை இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். என்னுடைய ரசிகன் ஒருவன், "தலைவா.. நீ உள்ளே போனால், உனக்காக உயிரைக் கொடுப்பேன்" என்றார்கள். ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் கொடுக்கவில்லை. நான் இதெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அனுபவத்தில் கற்றுக்கொண்டதால் சொல்லுகிறேன். 'திகார்' வெற்றியடைய வாழ்த்துகள்" என்று சீனிவாசன் பேசினார். 



நன்றி  - த இந்து