Wednesday, November 05, 2014

Super Nani - சினிமா விமர்சனம்

பல காமெடி படங்களை இயக்கிய பிறகு டைரக்டர் இந்திரா குமார், இயக்கத்தில்
வெளிவந்துள்ள குடும்ப படம் தான் சூப்பர் நானி. நீண்ட இடைவெளிக்கு பிறகு
நடிக்க வந்துள்ள ரேகாவுடன், ஷர்மன் ஜோஷி, ரன்தீர் கபூர், அனுபம் கர்
உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்பதை
பார்ப்போம்.

மான் எனும் ஷர்மான் ஜோஷி, நியூயார்க்கில் செட்டில் ஆன எம்.ஆர்.ஐ.,
இயக்குனர். இவர் இந்திய பாரம்பரியம் பற்றி ஒரு டாக்குமென்ட்ரி
எடுப்பதற்காக இந்தியா வருகிறார். தனக்கு மிகவும் பிடித்த தனது பாட்டி
வீட்டில் மான் தங்குகிறார். பாட்டியாக வரும் ரேகா, கடவுள் பக்தியுள்ள
குடும்ப பெண். அவரது உலகமே சமையலறையாக இருக்கிறது. வீட்டில்
எடுக்கப்படும் எந்த முடிவிலும் அவருக்கு எந்த உரிமையும், அதிகாரம்
கொடுக்கப்படுவதில்லை. இதனைக் கண்டு வேதனைப்படும் மான், பாட்டியின் இந்த
நிலையை மாற்ற நினைக்கிறார். மான் தரும் ஊக்கம் மற்றும் உற்சாகத்தால்
பாட்டியும், குடும்பமே நம்ப முடியாத அளவிற்கு ஆச்சர்ய படவைக்கும் வகையில்
மாடனாக மாறுகிறார். மாடனாக மாறும் பாட்டி, த்னனை மதிக்காத தனது
கணவருக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வாறு பாடம் புகட்டுகிறார்? தனது
மரியாதையை எவ்வாறு பெறுகிறார்? என்பதை அன்பு கலந்து சொல்லப்பட்டிருப்பது
தான் சூப்பர் நானி படத்தின் கதை.

டைரக்டர் இந்திரா குமார், பீட்டா படத்தை போன்ற இந்த படத்தையும் எடுக்க
நினைத்துள்ளார். ஆனால், தற்போதைய மசாலா காதல் படங்களை விரும்பும்
தலைமுறைக்கு ஏற்ற வகையில் சூப்பர் நானியை இயக்க மறந்து விட்டார் என்றே
சொல்லலாம். திரைக்கதையும் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைக்கப்படவில்லை.
கூடுதலான சீன்களும், க்ளைமாக்சில் வரும் அதிகப்படியான அறிவுரையும்
வசனங்களும் படத்தை போர் அடிக்க வைக்கிறது என்றே சொல்லலாம்.
எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே
தோன்றுகிறது. இசையை பொருத்தவரை, பாடல்களும் படத்திற்கு
கைகொடுக்கவில்லை. இருப்பினும் அனைத்து பாடல்களும் மறக்க முடியாதவைகளாக
உள்ளன. ஒவ்வொரு சீனும் முன்னறே யூகிக்கும் வகையிலேயே
அமைக்கப்பட்டுள்ளது. பல திறமையான நடிகர்கள் நடித்திருந்த போதும் வசனங்கள்
அனைத்தும் சலிப்படைய வைக்கிறது.

படத்தில் ரேகாவின் நடிப்பு கொஞ்சம் ஆறுதல். பல இடங்களில் யதார்த்தத்தை
மீறிய நடிப்பு வெளிப்பட்டாலும், பல காட்சிகளை அவர் தான் இழுத்து
செல்கிறார்.ரன்தீர் கபூர் அவருக்கு கொடுக்கப்பட்ட பகுதியை பாராட்டும்படி
செய்துள்ளார். ஷர்மன் ஜோஷி நல்ல நடிகர் என்ற போதும் இயக்குனர் அவரை இந்த
படத்தில் புகுத்தி உள்ளார் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவில் இருந்து
வந்தவர் போன்ற போலி தோற்றமும், க்ளிசரின் விட்டு அழுகையை வரவழைக்கும்
தன்மையும் அவரது நடிப்பை சொதப்பல் ஆக்கி உள்ளது. அவரது உணர்ச்சி
பூர்வமான காட்சிகள் சிரிப்பையே வரவைக்கிறது. டான்ஸ் டீச்சராக வரும்
ஸ்வேதா குமார் தேவைக்கேற்ப தனது நடிப்பை அளித்துள்ளார். காமெடிக்கான
முழுப் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டு அசத்தி இருக்கிறார்
அனுபம் கர்.

மொத்தத்தில் சூப்பர் நானி - குடும்ப படம் என்றாலும் குடும்பத்துடன்
பார்க்க முடியாத போர் நானி !

ரேட்டிங் - 2/5