Monday, November 03, 2014

கல்கண்டு - சினிமா விமர்சனம்

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், டிஸ்கோ ஆட்டபுகழ் நடிகர்
ஆனந்தபாபுவின் வாரிசுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும்
திரைப்படம் தான் "கல்கண்டு".

கதைப்படி, கண்டிப்பு மிகுந்த பள்ளி ஆசிரியர் முத்துராமனின் வாரிசுகள்
கல்லூரி அகிலும், கார்த்திக் எனும் கஜேஷூம். அப்பாவின் விருப்பபடி
ஒழுங்காக படித்து டாக்டராகி அமெரிக்காவில் செட்டில் ஆகிறார் மூத்தமகன்
விக்னேஷ் எனும் கல்லூரி அகில். ஆனால் இளைய மகன் கார்த்திக் எனும்
கஜேஷூக்கு ப்ளஸ்-டூவில் ஜெஸ்ட் பாஸ் மார்க் தான் கிடைக்கிறது. ஆனாலும்
அமெரிக்க டாக்டர் அண்ணன் அகில் தரும் 50 லட்சத்தை அமைச்சருக்கு கொடுத்து
மெடிக்கல் சீட் வாங்க முயற்சிக்கும் கஜேஷ், அங்கும் தன் அலட்சியத்தால்
அவசரத்தால், ஐம்பது லட்சத்தை கொடுத்து ஏமாறுகிறார். ஆனாலும்
அப்பாவுக்காகவும், அண்ணனுக்காகவும் மெடிக்கல் படிப்பதாக சென்னையில் ஒரு
மேன்ஷனில் தங்கி குடும்பத்தினரிடம் காசு பறித்து ஜாலியாக வாழ்ந்து வரும்
கார்த்தி அலைஸ் கஜேஷ், தீவிர முயற்சிக்கு அப்புறம் தனக்கு கிடைக்க
வேண்டிய மெடிக்கல் சீட்டை தன் தவறால் அவர் நான்காம் ஆண்டு
எம்.பி.பி.எஸ்., படிக்கும் நேரத்தில் தேடிப்பிடித்து தன் ஐம்பது லட்சத்தை
கேட்கப் போகிறார்.

ஆனால், போன இடத்தில் டிம்பிளை சந்தித்ததும் காசு கேட்க மறந்து காதல்
வயப்படுகிறார் கஜேஷ் ! கஜேஷின் காதலை டிம்பிள் ஏற்றுக் கொள்கிறாரா?
அல்லது, ஏற்க மறுக்கிறாரா? எனும் கதையுடன், படிப்பு முடிந்து டாக்டரான
டிம்பிள் அதிரடியான இரு வீட்டு பெரியோர்களால் அமெரிக்க டாக்டரும் கஜேஷின்
அண்ணனுமான அகிலுக்கு நிட்சயிக்கபடுவதும், கஜேஷ் டாக்டருக்கு படிக்கவில்லை
எனும் உண்மை ஊருக்கும், உலகுக்கும் தெரிய வருவதும், ஆனாலும் உண்மை
எல்லாம் தெரிந்த அண்ணன் அகில், டிம்பிள்ளை கஜேஷூக்காக விட்டு தருவதும்,
க்ளைமாக்ஸில் கஜேஷூம், டிம்பிளும் திருமணம் செய்து கொண்டு
கம்பவுண்டரும், டாக்டருமாக வாழ்வதும் ..., என ஏகப்பட்ட வழக்கமான
திருப்பங்களுடன் இனிதே நிறைவுருகிறது கல்கண்டு.

கார்த்திக்காக கஜேஷ், அப்பா ஆனந்தபாபு சாயலில் இருந்து கொண்டு தாத்தா
நாகேஷ் பாணியில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். அதை கதாநாயகராக
இருந்து கொண்டு செய்யாமல் காமெடியனாக இருந்து செய்து தாத்தா மாதிரி
வளர்ந்த பின் கதாநாயகராகி இருக்கலாம் !

கார்திகாவாக டிம்பிள் சோப்டே தன் முந்தைய படமான யாருடா மகேஷ்ஐ காட்டிலும்
நிறைய நடித்திருக்கிறார். ஆனால் அந்தப்படம் அளவிற்கு கிளாமர் காட்ட
மறுத்திருப்பது மைனஸ் !

கல்லூரி அகில் தியாகமே உருவான அண்ணனாக கெஸ்ட் ரோலில் பெஸ்ட் ரோல்
செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு, சாமிநாதன் மயில்சாமி,
டி.பி.கஜேந்திரன், டவுட் செந்தில், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் காமெடி
செய்து இருந்தும் சிரிப்பு மட்டும் வரமறுக்கிறது. முத்துராமன்,
ஸ்ரீரஞ்சனி இருவரும் அப்பா-அம்மா ரோலுக்கு கச்சிதம் !

தமிழ் படம் கண்ணனின் இசை, கே.வி.சுரேஷின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ்
பாயிண்ட்டுகள் இருந்தும் ஏ.எம்.நந்தகுமாரின் எழுத்து, இயக்கத்தில் நம்ப
முடியாத ஹம்பக் கதை, மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன்ல அங்கு படிக்கும்
ஹீரோயின் வீட்டு அட்ரஸ் இருக்காதா என்ன? என எழும் கேள்வி உள்ளிட்ட மைனஸ்
பாயிண்டுகள் கல்கண்டு படத்தை இழுவை நூல்கண்டு ஆக்கி விடுகின்றன என்றால்
மிகையல்ல !

ஆக மொத்தத்தில் கல்கண்டு - அவிழ்த்து முடியா பெரிய நூல்கண்டு !


நன்றி -தினமலர்