Monday, October 20, 2014

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா? - சிம்பு பேட்டி

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிம்பு. சர்ச்சையான கேள்வியாக இருந்தால் வேண்டாம் என்னும் நடிகர்கள் மத்தியில், எந்தக் கேள்வி என்றாலும் பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார் சிம்பு. அவருடன் பேசியதிலிருந்து.. 


‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ ரிலீஸ்? 

 
‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும். 


உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ? 

 
வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும். 


வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா... கிஸ்தானே பண்ணினேன். எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. 


உதவி செய்யும் விஷயத்திலும் அஜித்தை பாலோ பண்ணுகிறீர்கள் போல? 


 
உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது பண்ணினேன். எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது. அஜித் சாரை இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறேன் என்று இல்லை. எப்போதுமே உதவி பண்ணியிருக்கேன். அதைப் பற்றி எல்லாம் சொல்லணும், பேசணும் என்று அவசியமில்லை. 



நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே? 


 
முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை. அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான். 



இந்திப் படங்கள், தயாரிப்பு நிறுவனம் எனப் போய்க்கொண்டிருக்கும் உங்களது நண்பர் தனுஷ் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? 


 
ரொம்ப சந்தோஷப்படுறேன். தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்குப் போனது கொஞ்ச ஆட்கள்தான். அவரது முதல் படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. இப்போ அங்கேயும் தொடர்ச்சியா படங்கள் பண்றார். வேறொரு மொழி பேசும் திரையுலகுக்குப் போய் ஒரு நடிகர் நடிச்சு, பெயர் வாங்குறது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் தனுஷ் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. 


தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்? 


 
அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது. 



இயக்குநர் சிம்பு என்ன ஆனார்? 

 
அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன். 


ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா? 

 
ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும். நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன். 



காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்? 

 
காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும். 


உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன? 

 
என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே. 

 

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா? 

 
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம். 


thanx - the hindu