Sunday, October 19, 2014

மீண்டும் குன்ஹா; மிரண்ட அ.தி.மு.க.,வினர்: பெங்களூரு தனி நீதிமன்றம், சிறையில் திக்... திக்... நிமிடங்கள்

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா, நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

செப்டம்பர், 27ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம், தலா நான்கு ஆண்டுகள் தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இவர்களுக்கு, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது.ஒவ்வொருவருக்கும், இரண்டு பேரின் பிணைய பத்திரம், பிணையத்தொகை உள்ளிட்ட ஆவணங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தாக்கல் செய்வதற்காக, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள், நேற்று காலை, பெங்களூரு தனி நீதிமன்றம் வந்தனர். காலை, 11:00 மணிக்கு, நீதிமன்றம் கூடியவுடன், நான்கு பேரின் பெயரையும், நீதிமன்ற ஊழியர் வாசித்தார்.ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில்குமார், பரணிகுமார் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தின் ஜாமின் உத்தரவு, தண்டனை நிறுத்த உத்தரவு நகலை, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவிடம் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, ''பிணைய பத்திரதாரர்கள் யார்?'' என்று, நீதிபதி கேட்டார். உடனே, தலா இருவர் வீதம், நான்கு பேருக்கும், எட்டு பிணைய பத்திரதாரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தாக்கல் செய்த சொத்து உத்தரவாத பத்திரங்களை, நீதிபதி பரிசீலனை செய்தார்.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான பிணைய பத்திரம் கொடுத்தவர்களிடம், ''உங்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களை தெரியுமா; எவ்வளவு நாட்கள் தெரியும்?'' என்று, நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு அவர்கள், '20 ஆண்டுகளாக தெரியும்' என்றனர். ''இந்த சொத்துக்களை, நீங்கள் யாரிடம் வாங்கினீர்கள். இதன் மதிப்பு எவ்வளவு?'' என்று கேட்ட நீதிபதி பின்னர், அனைத்து சொத்துகளின் மதிப்பையும் சரிபார்த்தார்.

ஜாமின் கொடுப்பவர்களிடம், “இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாவிட்டால், அவர்களை அழைத்து வரவேண்டியது, உங்கள் பொறுப்பு. அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிச்சென்றால், உங்களின் சொத்துக்கள் முடக்கப்படும்,” என்று, நீதிபதி விவரித்தார்.

இதை, ஜாமின் கொடுப்பவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம், பிணைய பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவர் சரிபார்த்த பின், மீண்டும் நீதிபதியிடம் அனுப்பி வைத்தார். ஜாமின் உத்தரவு நகலை, நீதிமன்ற ஊழியர் வெங்கடேஷிடம், நீதிபதி கொடுத்தார். இந்த உத்தரவு, தனியார் கார் மூலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அங்கு, சிறை அதிகாரிகளிடம், மதியம், 2:50 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், உடனடியாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறை அதிகாரி முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம், ஜாமின் உத்தரவு வந்துள்ள விவரத்தை, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறையினுள் வரும்போது, அவர்கள், சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சென்றிருந்த நகைகள், பொருட்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மாலை, 3:15 மணியளவில், சிறையிலிருந்து, நான்கு பேரும் வெளியில் வந்தனர்.



மனம் மாறிய கன்னட சேனல்கள்:





*சிறையில் இருந்த நாட்களில், ஜெயலலிதா, பூஜை, விரதம் மேற்கொண்டதால், அவருக்கு, நான்கு கிலோ எடை குறைந்ததாக, சிறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
*சிறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வரும் மகிழ்ச்சியில், அங்கிருந்த பெண் கைதிகளுக்கு, டவல், இனிப்புகள், சேலைகள் வழங்கி மகிழ்ந்தார்.
*ஜெயலலிதா விடுதலையாவதற்கு சில மணி நேரத்துக்கு முன், பெங்களூரு மத்திய சிறை வளாகத்தில், கன மழை பெய்தது.
*ஜெயலலிதா மீது பொழிவதற்காக, 200க்கும் மேற்பட்ட மூட்டைகளில், பூக்கள் வாங்கி வரப்பட்டிருந்தன.
*ஜெயலலிதா சிறையில் அடைக்கப்படும் போது, கன்னட, 'டிவி' சேனல்கள் கிண்டலடித்து பாடல்களை ஒளிபரப்பின. அதே சேனல்கள், நேற்று, ஜெயலலிதாவை பாராட்டி, 'அம்மா நீனு ஏனே ஆதரு... நீனே நன்ன தேவரு' (அம்மா.. நீங்கள் எப்படி இருந்தாலும்.. நீங்கள் எங்கள் கடவுள்) என்று ஒளிபரப்பின.



பிணையதாரர்கள் யார் யார்?





ஜெயலலிதா: எலக்ட்ரானிக் சிட்டி தொழிலதிபர் பரத், கர்நாடக மாநில அ.தி.மு.க., செயலர் புகழேந்தியின் மனைவி குணஜோதி.
சசிகலா: பெங்களூரு தியாகராஜ் நகர் எஸ்.வி.சி.கே., கல்வி நிறுவனர் லட்சுமிபதி,
ஹெச்.ஏ.எல்., அன்னசந்திரபாளையா விபூதி நகரில் வசிக்கும் கர்நாடக மாநில அ.தி.மு.க., இணைச் செயலர் ராஜு.
சுதாகரன்: லட்சுமிபதி மகன் லோகேஷ், ராஜுவின் மனைவி அன்பம்மாள்.
இளவரசி: கர்நாடக மாநில அ.தி.மு.க, செயலர் புகழேந்தி, பொருளாளர் ராஜேந்திரன்.பிணையதாரர்கள் தங்களின் மனை, வீடுகளை பிணையமாக வைத்துள்ளனர்.
இதில், ஜெயலலிதாவின் பிணையதாரரான பரத், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பிணையமாக வைத்துள்ளார்.



விடுதலைக்கு முன் ஜெ., சொன்னது என்ன?





'சிறையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை' என, விடுதலைக்கு முன், ஜெயலலிதா கூறியதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெய்சிம்ஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:சிறையில், 22 நாட்கள் இருந்த ஜெயலலிதா எந்த வசதியும் வேண்டும் எனக் கேட்கவில்லை. மிக எளிமையாகவே இருந்தார். ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு வந்துள்ளது என, அவரிடம் நான் கூறிய போதும் கூட, எந்த பெரிய மாற்றத்தையும் அவர் முகத்தில் காட்டவில்லை. வெறும் புன்னகை மட்டுமே அவரிடம் இருந்து பதிலாக வந்தது.அதே நேரத்தில், சசிகலா, இளவரசி ஆகியோரிடம் இந்த சந்தோஷத்தை அவர் பகிர்ந்து கொண்டதாக அறிந்தேன். சிறையில் இருந்த நாட்களில், அவர் யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கூட சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.ஆனால், என்னை சந்தித்த போது, என் குடும்ப விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். யாரையும் சந்திக்காத அவர், என்னையும், என் குடும்பத்தையும் பற்றி விசாரித்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது.சிறையில் இருந்து வெளியேறும் போது, 'எனக்கு போதிய ஒத்துழைப்பு அளித்தமைக்காக உங்களுக்கு நன்றி; இங்கிருந்த நாட்களில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள்; அதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன். குட்பை' என்று ஜெயலலிதா கூறினார்.இவ்வாறு, ஜெய்சிம்ஹா தெரிவித்துள்ளார்.
thanx - dinamalar