பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் குறித்தும் பல்வேறு செய்திகள்
உலா வருகின்றன. அதில் 90 சதவீதம் தவறானவை என சிறைத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
உண்மை நிலையை அறிந்து கொள் வதற்காக சிறையில் ஜெயலலிதாவை நேரில்
சந்தித்தவர்களிடமும் சில சிறைத்துறை அதிகாரிகளிடமும் பேசினோம். அவர்கள்
அளித்த தகவல் வருமாறு:
வருமான வரி செலுத்துபவர் என்ப தாலும், முக்கிய அரசியல் தலைவர் என்பதாலும்
பரப்பன அக்ரஹாரா சிறை யில் ஜெயலலிதாவுக்கு ‘ஏ-கிளாஸ்' அறை
ஒதுக்கப்பட்டுள்ளது. ‘விஐபி'கள் அடைக் கப்பட்டுள்ள பகுதியில் ஆண்களுக்கும்
பெண்களுக்கும் தனித்தனி கட்டிடம் இல்லை. எனவே மற்ற விஐபிகள் இருக் கும்
பகுதியிலேயே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இருக்கிறார்கள்.
மேலும் ஜெயலலிதாவின் உடல் நிலையையும் வயதையும் கருத்தில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் அவருக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வில்லை. அதேபோல நீதிபதி
டி'குன்ஹா வும் ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து எதுவும்
தெரிவிக்க வில்லை. எனவே சிறைத்துறை விதிமுறை களின் அடிப்படையில்
அவருக்குஅனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா தங்கியிருக்கும் அறையில் கலர் டி.வி., மின்விசிறி, மெத்தையுடன்
கூடிய கட்டில், மேஜை நாற்காலி ஆகிய வையும் இருக்கின்றன. அறையுடன் இணைந்த
தனி கழிப்பறை வசதியும் இருக்கிறது. அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு
வெளியிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது.
மேலும் ஜெயலலிதாவுக்கு கைதிகளுக் கான வெள்ளை சீருடையும் வழங்கப்பட வில்லை.
வழக்கமான உடைகளை அணிந்து கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. எனவே அவருடைய
உதவியா ளர்கள் இரண்டு சூட்கேஸ்களில் உடைகளை கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.
மருத்துவ வசதி
ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தினமும் காலை 9 மணிக்கும் மாலை
7.30 மணிக்கும் சிறை மருத்துவர் பரிசோதனை மேற்கோள்கிறார். தேவையான
நேரத்தில் முதலுதவி செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரது
குடும்ப மருத்துவர் திங்கள்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து சில பரிசோதனைகளை
செய்தார். மேலும் அவருக்கு தேவையான மருந்து, மாத் திரைகளையும்
வழங்கியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, இதயக்கோளாறு உள்ளிட்ட நோய்கள்
இருப்பதால் எண்ணெய் தவிர்த்த உணவை சாப்பிடுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளார்.
எனவே அதிக அளவில் பச்சைக் காய்கறிகள், பால், மோர், பழங்கள் ஆகியவற்றை
சாப்பிடுகிறார். இது தவிர வெளியிலிருந்து கொண்டுவரப்படும் இட்லி, பிரட்,
சாண்ட்விச் மற்றும் வீட்டில் சமைத்து கொண்டுவரப்படும் உணவையும்
சாப்பிடுகிறார். உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகளை வைத்துக் கொள்
வதற்காக அவருக்கு குளிர்சாதன வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
நடை பயிற்சி மேற்கொள்கிறார்
கடந்த இரு தினங்களாக காலை 5.30 மணிக்கு எழுந்துகொள்ளும் ஜெய லலிதா,
விஐபிகளுக்கான பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்கிறார். காலை 7.30, மதியம்
12.30, இரவில் 8 மணிக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உணவு
வழங்கப்படுகிறது. இடையில் சசிகலா, இளவரசி ஆகியோரை சந்தித்து பேசவும் அனுமதி
அளிக்கப்படுகிறது.
தன்னை பரிசோதிக்க வரும் மருத்துவர், சிறை காவலர்களிடம் சரளமாக கன்னடத்தில்
பேசுகிறார். சில நேரங்களில் சசிகலா, இளவரசிக்கு தேவையான வசதிகளையும் சிறை
அதிகாரிகளிடம் கன்னடத்தில் பேசி செய்து தருகிறார். அவருடைய வேண்டுகோளுக்கு
இணங்க தினமும் காலையில் 3 தமிழ், 2 ஆங்கில செய்தித்தாள்கள்
வழங்கப்படுகின்றன.
ஜெயலலிதா நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருக்கிறார். பெங்களூரில் தற் போது
குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி காற்றிலேயே நன்றாக தூங்க
முடிகிறது என தன்னை பார்க்க வருபவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல தன்னை யார் பார்க்க வர வேண்டும் என அவர் அனுமதி அளிக்கிறாரோ,
அவர்கள் மட்டுமே சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தனர்.
சுதாகரனுக்கு சிகிச்சை
சிறையில் ஜெயலலிதா வசதியாக இருக்கும் அதேநேரத்தில் சசிகலாவும், இளவரசியும்
மனம் உடைந்து போய் இருக் கிறார்கள். அவ்வப்போது அவர்களுக்கு ஜெயலலிதா
ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில்
சுதாகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட சுதாகரனுக்கு இதுவரை 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு,
உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பா இருந்த அறை
நிலமோசடி புகாரில் சிறைக்கு சென்ற கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா
அடைக்கப்பட்டிருந்த அறையில்தான் ஜெய லலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரி நியமனம்
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு
அதிகாரியாக சிறைத்துறை ஏடிஜிபி ககன் தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான
அறிவிப்பை கர்நாடக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஐபி கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு
அளித்துவரும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ககன் தீப்புக்கு கூடுதல் பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்துக்கு வெளியில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு, சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவை காணவரும் அனைவரும் சிறை வளாகத்துக்கு வெளியே
நிறுத்தப்படுகின்றனர். ககன்தீப் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் எடியூரப்பா,
முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கிருஷ்ணய்ய ஷெட்டி ஆகியோருக்கு
பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
thanx -the hindu