Saturday, September 06, 2014

மேரி கோம் (இந்தி) - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் மேரி கோம்!

ஏழை பெண்ணான மேரி கோம்(ப்ரியங்கா சோப்ரா) தன் இலக்கை அடைய எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, ஜெயிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கையை, சிறந்த நடிகையான ப்ரியங்கா சோப்ராவை வைத்து, கற்பனைகள் எதையும் கலக்காமல் அற்புதமாக படமாக்கி இருக்கின்றார் ஓமங் குமார். பின்தங்கிய கிராமம், பாலின பாகுபாடு, அப்பாவின் எதிர்ப்பு என பல்வேறு தடைகளை கடந்து மேரி கோம் எப்படி குத்துச்சண்டையில் சாதனை படைக்கிறார், சாம்பியனாகிறார், அதற்கு அவரது காதல் கணவர் தர்ஷன் குமார், பயிற்சியாளர் நர்ஜித் சிங், உள்ளிட்டோர் எப்படி உதவுகின்றனர் என்பதை முதல்பாதியில் விறுவிறுப்பாக படமாக்கி இருக்கின்றனர்.

எதிரிகளை இரத்தம் சொட்டும் அளவுக்கு வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை கொள்ளாமல், யாரையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் தைரியம் உள்ள வீர பெண்மணியாக நடித்துள்ளார் மேரி கோமான ப்ரியங்கா சோப்ரா. உண்மையான சாம்பியன்கள் தங்களது இலக்கை அடைய எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அழகாகவும், துல்லியமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ஓமங் குமார்.

போட்டியின் போது ப்ரியங்கா சோப்ரா விடும் குத்துக்கள், நிஜத்தில் மேரி கோமை பிரதிபலிப்பது போன்றே தோன்றுகிறது. அவர் காட்டும் முகபாவனைகள், போர்க்குணம் கொண்ட வெளிப்பாடுகள் எல்லாம் மிக அற்புதம். ப்ரியங்காவின் சினிமா கேரியரில் இந்தப்படம் நிச்சயம் ஒரு சிறந்த படமாக அமையும்.

ப்ரியங்கா சோப்ராவின் கணவராக நடித்துள்ள தர்ஷன் குமாரின் நடிப்பும் அற்புதம். படத்தில் ப்ரியங்கா சோப்ரா, தர்ஷன் குமார் இருவரும் சிறப்பாக நடித்து இருந்தாலும், ப்ரியங்காவிற்காக தர்ஷன் நிறைய படங்களில் விட்டு கொடுத்து நடித்துள்ளார் போல, இதனால் தர்ஷனை காட்டிலும் ப்ரியங்காவின் நடிப்பே பெரிதாக தெரிகிறது. இவர்கள் தவிர ப்ரியங்காவின் பயிற்சியாளராக வரும் சுனில் தபாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

ப்ரியங்கா சோப்ராவிற்காக நிச்சயம் மேரி கோம் பட
த்தை பார்க்க வேண்டும்!
 
 
 thanx =- dinamalar