‘‘நான் சினிமா உலகுக்கு வந்து 33 ஆண்டுகள் ஓடிவிட்டது. அர்ஜுன்தான்
இந்தக்கதைக்கு சரியாக இருப்பார் என்று இன்றைக்கும் தமிழ், கன்னடம்,
தெலுங்கு, இந்தி இப்படி எல்லா மொழிகளிலும் படம் செய்ய எனக்கு அழைப்புகள்
வந்துகொண்டு இருக்கின்றன. சினிமாவை ஒரு வேள்வியாக நினைத்து ஒவ்வொரு
மணித்துளியும் அதை நேசித்துக் கொண்டிருப்ப தால் மட்டுமே இதெல்லாம்
சாத்தியம் ஆகிறது’’ என்று படு உற்சாகமாகப் பேசுகிறார், அர்ஜுன்.
20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தின்போது இருந்த உடற்கட்டு
கொஞ்சமும் குறையாமல் இருக்கிறார் அர்ஜுன். ‘ஜெய்ஹிந்த் - 2’ படத்தின்
இறுதிகட்ட வேலைகளில் இருந்தவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
பொதுவாக பார்ட் - 2 என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது முதல் படத்தின் சாராம்சம் கொஞ்சம் இருக்குமே. ‘ஜெய்ஹிந்த் - 2’வில் எப்படி?
‘ஜெய்ஹிந்த் - 2’ அதன் முதல் பாகத்தைப்போலவே நாட்டுப்பற்றுள்ள படம்.
அதுமட்டும்தான் இந்தப் படத்திதுக்கும், அந்தப் படத்துக்கும் உள்ள ஒற்றுமை.
மற்றபடி இந்தப் படத்தின் எந்த விஷயங்களும் முதல் பாகத்தை ஞாபகப்படுத்தாது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ‘ஜெய்ஹிந்த் - 2’
படத்தை இயக்கி நடித்திருக்கிறீர்கள். இப்படிச் செய்யும்போது தொழில்நுட்ப
ரீதியான வேலைப்பளு ரொம்பவே இருந்திருக்குமே?
நிச்சயமாக. படப்பிடிப்பை முடிக்கும் வரை அது பெரிதாகத் தெரியவில்லை. படத்தை
எடுத்து முடித்து டிராக், மிக்ஸிங், பேக்ரவுண்ட் இப்படித் தொழில்நுட்ப
வேலைகளைச் செய்யும்போது ஒவ்வொரு மொழிக்கும் ரொம்பவே வேலை வாங்கியது.
‘ஜெய்ஹிந்த் 2’ எனக்கு நல்ல அனுபவம்.
பல ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் படம் இயக்கத் தொடங்கிவிட்டீர்கள். ஆனால் பெரிய நாயகர்களை வைத்து இன்னும் படம் இயக்கவில்லையே?
என்னை வைத்துப் படம் இயக்கும்போது என்னுடைய இமேஜுக்குத் தகுந்தமாதிரி கதையை
வடிவமைப்பேன். வேறு நாயகர்களை வைத்து இயக்கும்போது அதற்கான உழைப்பு
வேறுவிதமாக இருக்க வேண்டும். நான் அடுத்ததாக என் மகள் ஐஸ்வர்யாவை வைத்து
ஒரு படத்தை இயக்கப்போகிறேன். அந்தப்படத்தில் நான் நடிக்கப் போவதில்லை.
அஜித், விஜய் மாதிரியான நடிகர்களுக்கும் நல்ல கதைகள் சொல்லி இயக்கினால்
வித்தியாசமாகத்தான் இருக்கும். நிச்சயம் வேறு ஹீரோக்களை வைத்தும் படம்
இயக்குவேன். அதேபோல் அழகான ஒரு காதல் கதையை இயக்க வேண்டும் என்பது என்
நெடுநாள் ஆசை. இனி வரும் நாட்களில் நிச்சயம் இப்படியான விஷயங்கள் நடக்கும்.
தற்போது வரும் கமர்ஷியல் படங்களில் பெரும்பாலும் நாயகிகளுக்கு வேலையே
இருப்பதில்லை. இந்நிலையில் உங்கள் படத்தில் இரண்டு நாயகிகள்
இருக்கிறார்களே?
இரண்டு நாயகிகளும் கேரக்டர் என்ன கேட்கிறதோ அதை மட்டும்தான்
செய்திருப்பார்கள். பெண்கள் சார்ந்த படங்களிலும் அந்தக் கதாபாத்திரத்துக்
கான தேவை இருக்கும்போதுதான் அதை வெளிப்படுத்த முடியும். ‘ஜெய்ஹிந்த் - 2’
வில் நான் கல்வி சார்ந்த விஷயங்களைச் சொல்கிறேன். சென்டிமென்ட், எமோஷனல்,
காமெடி, காதல் இதெல்லாம் எந்த அளவுக்குத் தேவையோ அதை சரியாகக்
கொடுத்திருக்கிறோம். இந்தக்கதையில் நாயகியை எந்த அளவுக்குப் பயன்படுத்த
வேண்டுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம்.
நாட்டுப்பற்று என்ற விஷயத்தையும், உங்கள் படங்களையும் பிரிக்கவே முடிவதில்லையே?
சின்னப் பசங்க இப்பவும் என்னைப் பார்க்கும்போது ‘ஜெய்ஹிந்த்’ என்று
கூப்பிடுகிறார்கள். அதில் ஏதோ ஒரு விஷ யம் அவர்களுக்குப் பிடித்துப்போய்
விட்டது. நார்மலாக ஒரு படம் பண்ணலாம். ஆனால் அதில் பேசுவதற்கு எதுவுமே
இருக்காதே. இந்தப்படத்துக்காக ஒரு ஆண்டு உழைத்திருக்கிறேன். இந்த
இடைவெளியில் பல படங்களில் நடித்துப் பணம் சம்பாதித்திருக்க முடியும். அது
ஒரு விஷயமில்லை. நாம் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும்
என்பதற்காகத்தான் இந்தப் படத்தை இயக்குகிறேன்.
ஒரு படம் வெளிவந்து வெற்றியைப் பெற் றால் உடனே அதேபோன்று பல படங்கள் வரிசை கட்டிக்கொண்டு வருகிறது. இது ஏன்?
சினிமாவில் வியாபாரமும் முக்கிய மாச்சே. காமெடியை மையமாக வைத்து ஒரு படம்
ஹிட் அடிக்கும்போது அந்த நேரத்தில் மக்கள் அதை விரும்புகிறார்கள்
என்பதைத்தான் காட்டுகிறது. அப்படியிருக்க அதே பாணியில் படத்தைக் கொடுத்தால்
அவர்களுக்குப் பிடிக்கும் என்றுதான் தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள்.
எப்போதுமே ஓடும் குதிரையில்தானே பந்தயம் கட்டத்தோணும். நான் சினிமாவுக்குள்
நுழைந்த காலகட்டத்திலும் இந்தச் சூழல் இருந்தது.
சினிமாவின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பணம் கட்டினால் வீட்டில் படம் பார்க்கலாம் என்ற முறையைக் கொண்டுவர ஒருமுறை
கமல் சார் முயன்றாரே... அது விரைவில் வரும் என்று என் மனதில் படுகிறது.
கடந்த 33 ஆண்டுகளில் உங்கள் சினிமா பயணத்துக்கு உங்கள் குடும்பத்தின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கிறது?
நான் எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள். அம்மா, என் மனைவி இருவருக்குமே சென்டிமென்ட் அதிகம்.
என் பயணத்துக்கு அவர்கள் இருவரின் ஆதரவும் அதிகமாக இருந்தது
thanx - the hindu