Sunday, August 31, 2014

சிவப்பு எனக்கு பிடிக்கும் - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

பாடலாசிரியர் யுரேகா, யுரேகா சினிமாஸ் ஸ்கூல் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து, இயக்கியுமிருக்கும் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை ப(பா)டம் தான் ‛‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'' திரைப்படம்!

‛‛பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை தடுப்பதற்கு மும்பை மாதிரி, சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி உருவாக்கப்பட வேண்டும், அரசு பாலியல் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும், பாலியல் கல்வி பள்ளிகளில் அவசியம் கொண்டு வரப்பட வேண்டும்... உள்ளிட்ட கோரிக்கைகளை, கோரிக்கைகளாக காட்டிக் கொள்ளாமல் வலியுறுத்தி வெளிவந்திருக்கும் டாக்குமெண்ட்ரி ஓ...சாரி, திரைப்படம் தான் ‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'!

பாலியல் தொழிலாளி சான்ட்ரா எமியை, எழுத்தாளர் யுரேகா தான் எழுதும் ஒரு நாவலுக்காக சந்தித்து பேசுகிறார். சான்ட்ரா தான் சந்தித்த பல்வேறு விதமான வாடிக்கையாளர்களைப்பற்றி யுரேகாவிடம் பகிர்ந்து கொள்கிறார். அதை கதையாக்கும் யுரேகாவின் வாழ்க்கையிலும் ஒருவிதமான பாலியல் சோகம் குடி கொண்டிருக்கிறது. அது என்ன? ஏது...? சான்ட்ரா எமியின் எதிர்காலம் என்ன.? என்பதை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

நாயகி சான்ட்ரா எமி, ஆயிரம் சோகங்களை சுமந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பாலியல் தொழிலாளிகள் மாதிரி இல்லாமல் சோகமாக சீரியல் நாயகி மாதிரி சீரியஸாக தெரிவதும், திரிவதும் கடுப்பேற்றுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் புரோக்கர், தொழில் நடத்தும் பெண்மணி உள்ளிட்டோர் ‛வாவ்' சொல்ல வைக்கும்விதமாக நடித்திருந்தாலும், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை ஆபாசமில்லாமல் படம் பிடிக்கிறேன் பேர்வழி என அந்தமாதிரி கதையில், அந்த மாதிரி சீன்களை காட்டாமல் வெறுப்பேற்றுகிறார் இயக்குநர்...

மகேஷ்வரனின் ஒளிப்பதிவு, சிவசரவணன், அனீஷ் யுவானி இருவரது இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், இயக்குநர் யுரேகாவின் நடிப்பில் இருக்கும் தெளிவும், அழுத்தமும், இயக்கத்தில் இல்லாததும், ஊருக்கு ஊர் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற இயக்குநரின் வாதமும், படத்தை பின்னோக்கி இழுத்து செல்வதாக தெரிகிறது!

மொத்தத்தில், இயக்குநர் யுரேகாவிற்கு பிடித்த ‛‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'' எல்லோருக்கும் பிடிக்குமா தெரியவில்லை!!
 
 
thanx - dinamalar