Saturday, July 05, 2014

அமர காவியம்- க்ரைம் த்ரில்லரா? லவ் சப்ஜெக்ட்டா? - இயக்குநர் பேட்டி


படம் தயாரிப்பில் இருக்கும்போதோ படம் தயாராகி இயக்குநர்களுக்கு பிரிவியூ காட்சிகள் திரையிடப்பட்ட பிறகோ வெகு சில படங்களே வெளியீட்டுக்கு முன் ‘டாக் ஆஃப் த கோலிவுட்’ ஆகியிருக்கின்றன. டாக் ஆஃப் த கோலிவுட் என்றால் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நான்கு பேர் ஒன்றாகச் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட படத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். 


தற்போது அமர காவியம் படத்தின் முன்னோட்டம் கோலிவுட்டையும் தாண்டி, ரசிகர்களையும் பேச வைத்திருக்கிறது. ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாகவும், மலையாள வரவாக அறிமுகமாகும் மியா ஜார்ஜ் நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ‘நான்’ படத்தின் மூலம் விமர்சகர்கள், ரசிகர்கள், பாக்ஸ் ஆபீஸ் ஆகிய அனைத்துத் தரப்புப் பாராட்டுகளையும் ஒருசேர அள்ளிய ஜீவா சங்கர். அமர காவியம் படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் அவரே நெகிழவும் கலங்கவும் செய்வதோடு நமக்கும் அத்தகைய உணர்ச்சிகளைக் கடத்தி விடுகிறார். இனி அவரோடு…



நீங்கள் இயக்குநராக அறிமுகமான ‘நான்’ படம் அதன் திரைக்கதைக்காகவும் பேசப்பட்டது. ஆனால் அடிப்படையில் நீங்கள் ஒரு ஒளிப்பதிவாளர். திரைக்கதையை நேர்த்தியாக வடிக்கும் கலை எப்படி வசப்பட்டது?




மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவா சாரின் ஆத்மா என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பதுதான் முக்கியமான காரணம் எனத் தோன்றுகிறது. ‘நான்’ படத்தின் திரைக்கதையை எழுத வைத்தது எனது இன்ஸ்டிங்ட்தான். ஜீவாவின் மாணவனாக இருந்தபோது, “ நீ உணர்வுள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால் உனது உள்ளுணர்வு அதன் பாத்திரங்களையும், திரைக்கதையின் போக்கையும் எழுதிக்கொள்ளும்” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனார். 



நான் எந்தத் திரைக்கதை நுட்பங்களையும் கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதினேன் என்று சொல்ல முடியாது. நான் படக் கதையின் நாயகன் கார்த்தி மற்றொருவனின் அடையாளத்தில் ஒரு புதிய வாழ்க்கையை வாழ நினைக்கிறான். அவன் வாழ முயற்சிக்கும்போது எதிர்பாராமல் நேரும் ஒரு விபத்துக்குப் பிறகு, தனது வாழ்க்கை மறுபடியும் ஒரு விபத்தாகிவிடக் கூடாதே என்று வாழ முற்பட்டால் என்ன என்பதுதான் திரைக்கதை. அதை எழுதியது நானல்ல, கார்த்தி என்ற அந்தக் கதாபாத்திரம்.



பொதுவாக நடிகர்களின் பெயர்களைப் பெயரோடு சேர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் உங்கள் குருவின் பெயரை உங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களே?




சென்னை லயோலா கல்லூரியில் முதலாண்டு விஸ்காம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே ஜீவா சாரின் உதவியாளனாகச் சேர்ந்துவிட்டேன். வாலிதான் நான் பணியாற்றிய முதல் படம். பிறகு ஜீவா சார் இறக்கும்வரை அவரோடு இருந்திருக்கிறேன். எனக்கு சினிமா இயக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. ஜீவாவைப் போல ஒரு தலைசிறந்த ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால் 2002 -ல் ‘உள்ளம் கேட்குமே’ படத்தை ஜீவா சார் இயக்கும் முன்பு அதற்கான கதை விவாதம் திருச்சியில் நடந்தது. அந்தக் குழுவில் நான் மிகச் சிறியவன். 



என்ன நினைத்தாரோ நீயும் என்னோடு விவாதத்துக்கு வா என்று அழைத்துப் போனார். சினிமா பற்றிய என் பார்வைகளை மாற்றிப்போட்டார். ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் வேறு ஆட்கள் அல்ல என்று எனக்குச் சொன்னார். அவரது ஒளிப்பதிவை விரும்பி ரசித்து விவாதித்தவன் என்பதுதான் எனக்கும் அவருக்குமான உறவு. ஆனால் அவர் என்னை எந்த நிபந்தனைகளும் இன்றி ஒரு சகோதரனைப் போல நேசித்தார். எல்லோரையுமே இப்படி நிபந்தனைகள் இன்றி நேசிக்கும் அபூர்வமான மனிதர் அவர். எனது பெயருடன் அவரது பெயர் இணைந்த பின்னணியில் அவரது அன்பே முன்னால் நிற்கிறது.



முதல் படம் ஒரு க்ரைம் த்ரில்லர். இரண்டாவது படம் காதல் காவியம், ஏனிந்த யூ டேர்ன்?




வாழ்க்கையும் அப்படிப்பட்டது தான். சில படங்கள் மட்டும்தான் சந்தோஷமும் கர்வமும், பெருமையும் நமக்குக் கொடுக்கும். இந்தப் படத்தை எடுத்தபோது ஒரு வாழ்க்கையை ஒளிக்காமல், சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கிறோம் என்ற கர்வம் எனக்கு ஏற்பட்டது. மூன்றாம் பிறை, சேது, காதல் வரிசையில் அமர காவியம் அதிர்வுகளை உண்டாக்கும் என்று படம் பார்த்த மூத்த இயக்குநர்கள் என் கைகுலுக்கிச் சொன்னபோது இயக்கத்தைக் கையில் எடுத்ததற்காகப் பெருமைப் பட்டேன். சிறு வயதிலிருந்தே என் மனதில் ஊறிக் கிடந்த காவியத் தன்மை கொண்ட ஒரு உண்மைச் சம்பவம்தான் அமர காவியம்.



தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே காதலைத் தவிர வேறு எல்லைகளுக்குப் போவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?



குற்றச்சாட்டுகள் இருந்தால்தான் விவாதங்கள் எழும். விவாதங்கள் வந்தால்தான் சிந்தனைகள் பிறக்கும். நான் எடுத்துக்கொண்ட காதல் திரைப்படத்தின் வணிகத்துக்காக ஊறுகாயாகத் தொட்டுக்கொண்ட காதல் இல்லை. உணவே இதுதான். காதல் என்ற ஒரு சொல்லில் எத்தனை எத்தனை கதைகள். எத்தனை விதமான மனிதர்களின் கனவுகளை, மகிழ்ச்சியை, துக்கத்தைக் காலந்தோறும் தனது நினைவுக் குறிப்புகளில் எழுதிக்கொண்டே இருக்கிறது காதல். இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் யாரும் முழுமையாகப் பதிவு செய்யாத கதை.



படத்தைப் பார்த்துவிட்டுக் கதாநாயகனின் அண்ணன் ஆர்யா என்ன சொன்னார்?



படம் திரையிட ஆரம்பித்ததும் நான் கிளம்பிவிட்டேன். படம் முடிகிற நேரத்துக்கு வருவோம் என்று படம் முடிய 20 நிமிடங்கள் இருந்தபோது மெல்ல உள்ளே நுழைந்தேன். ஆர்யாவும், அவருடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நான்கு நண்பர்களும் அழுதுகொண்டிருந்தார்கள். படம் முடிந்ததும் என்னைக் கட்டியணைத்துக் கண்களால் பேசிச் சென்றவன், இரண்டுநாள் கழித்தே என்னிடம் பேசினான். இரண்டு நாள் முழுவதும் பேசிக்கொண்டிருந்தான். இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான். இந்தப் படம் ரசிகர்களை அவர்களது வாழ்க்கைக்கு அழைத்துப் போகும். நான் பேசுவதைவிட ரசிகர்களிடம் இந்தப் படம் பேசட்டும்.



நன்றி  - த இந்து