Sunday, March 02, 2014

FANDRY -சினிமா விமர்சனம் ( இந்தியாவைக்கலக்கிய மராத்தி மொழிப்படம்)

குஜராத், வங்காளம், ஒரிசா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநில மொழி சினிமாக்கள் ரீமேக் என்ற வகையில்கூடத் தென்னிந்தியாவுக்கு வருவதில்லை. அப்படியிருக்க, இந்தியில் டப் செய்யப்பட்டு தென்னிந்தியா முழுவதும் இன்று வெளியாகவிருக்கிறது ஃபேன்ட்ரி என்ற மராத்தி மொழிப் படம். நடந்து முடிந்த மும்பை திரைப்பட விழாவில் ஜூரிகளின் சிறப்பு விருதைப் பெற்ற இந்தப் படம், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியப் பட விழாக்களைக் கலக்கியது மட்டுமல்ல, பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பாலிவுட்டில் வெளியாகிக் கணிசமான வசூலையும் அள்ளியிருக்கிறது.



படத்தின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுலேவுக்கு இது முதல் படம். ‘பிஸ்டுல்யா’ என்ற தலைப்பில் இவர் இயக்கிய குறும்படம் தேசிய விருதைப் வென்றது. மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த நாகராஜ் கவனம்பெற்ற இளம் மராத்திக் கவிஞரும்கூட. கிராமத்தில் பன்றியை வளர்த்து மேய்க்கும் ஒரு தலித் குடும்பத்தின் வாழ்வியலை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறார் ஃபேன்ட்ரி படத்தில்.


ஃபேன்ட்ரி என்றால் மராத்தி மொழியில் பன்றி என்று அர்த்தம். ஆடு மாடு வளர்ப்பதைக் கால்நடை வளர்ப்பாகப் பார்க்கும் சமூகம், பன்றி வளர்ப்பதை வாழ்க்கைத் தொழிலாகப் பார்க்காமல் தீண்டாமையின் ஒரு கூறாகவே பார்க்கிறது. கதையின் நாயகன் ஜாப்யா தலித் பள்ளி மாணவன். ஒரு பன்றியாகவே ஆதிக்கச் சாதி மக்களால் அவன் பார்க்கப்படுவதை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவும் யதார்த்தத்தின் சித்தரிப்பு. 


அதேபோல அவனது நிறமும், அவன் காதலிக்கும் ஷாலுவின் நிறமும் பார்வையாளர்களுக்குத் தரும் அழுத்தம் பொய்யானதல்ல. மொத்த கிராமத்திலும் ஒரே தலித் குடும்பமாக இருக்கும் ஜாப்யாவின் காதல் சாதியத்தின் முன் என்னவாகிறது என்பதுதான் கதை. காதல் வந்த பிறகு சந்தையில் விற்பனைக்கு வந்த ஜீன்ஸ் பேண்ட்களை வாங்க முடியாதா என்று ஜாப்யா ஏங்கும் காட்சியும், பன்றிகளைத் துரத்திப் பிடிக்கும் காட்சியும் அனைவரையும் சிரிக்கவும் கலங்கவும் வைக்கும் நுட்பமான சித்தரிப்புகள்.


பள்ளிப் பருவக் காதலைச் சொல்வது போல் தலித் அரசியலைப் பேசியிருக்கிறார் இயக்குநர். “நகைச்சுவையைப் படம் முழுக்க தூவியிருந்தாலும் சாதி அரசியலின் கூரிய நகங்களைப் பார்வையாளன் மனதில் பதியவைக்கும் விதம் போலித்தனம் அற்ற வாழ்வனுபவம் கொண்டது” என விமர்சகர்களின் பாராட்டை அள்ளியிருக்கிறார்.


ஜீ தொலைக்காட்சி குழுமம் வெளியிடும் இந்தப் படத்தில், நட்சத்திரத் தேர்வு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என அனைத்து அம்மசகளும் நேர்த்தி. முக்கியமாக இசை. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மரபார்ந்த இசையையும் இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.


நன்றி - த ஹிந்து

fandry marathi Movie dialogue