Saturday, January 25, 2014

வல்லினம் - ‘ஈரம்’ மாதிரியே வித்தியாசமான கதைக்களமா? - இயக்குநர் அறிவழகன்


நாம் பார்க்கும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே நம் மனதை விட்டு நீங்காத இடத்தை பெறும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றான ‘ஈரம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் அறிவழகன். அந்தப் படத்திற்கு பிறகு ‘வல்லினம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார் அறிவழகன். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக்கொண்டிருக்கையில், ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.




‘ஈரம்’ மாதிரியே ‘வல்லினம்’ படமும் வித்தியாசமான கதைக்களமா?



'ஈரம்' பேய்ப்படம் என்றால் ‘வல்லினம்’ முழுக்க முழுக்க ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு சம்பந்தமான கதை. விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையில் காதல், நட்பு, வில்லன்கள் இப்படி எல்லாமே கலந்து திரைக்கதை பண்ணியிருக்கேன். 6 மாதங்களில் படத்தோட திரைக்கதை எல்லாம் எழுதி, மொத்த ஷுட்டிங்கும் 90 நாள்ல முடிச்சுட்டேன். ‘ஈரம்’ படம் எப்படி டெக்னிக்கல் விஷயங்களால் பெரிதும் பேசப்பட்டதோ, அந்த வகையில் ஒரு படி மேலே போய் இந்த ‘வல்லினம்’ படத்தை பண்ணியிருக்கேன்.



பேஸ்கட் பாலை மையமா வைச்சு கதை எழுத என்ன காரணம்?



நான் ஒரு பேஸ்கட் பால் ப்ளேயரோ, விளையாட்டு ரசிகனோ கிடையாது. இருந்தாலும் எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. எனக்கு மட்டுமல்ல சமூகத்துல இருக்குற மக்கள்கிட்ட ஒரு ஆதங்கம் இருந்துட்டு இருக்கு. இங்க கிரிக்கெட்டுக்கு இருக்கிற மரியாதை மத்த விளையாட்டுக்கு இல்லை. அந்த ஆதங்கத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கேன்


இந்த மாதிரி கதைல ஹீரோவுக்கு அந்த விளையாட்டு தெரியலைன்னா பாக்கும்போது சிரிப்பாயிடும்.. இல்லையா..?



ஒரு நடிகரை பிளேயரா நடிக்க வைக்குறது கஷ்டமான விஷயம்தான். எல்லாருமே இந்த கதைக்கு ஒரு பிளேயரை தான் நடிகராக ஆக்குவாங்க. நான் நகுலை முடிவு பண்ணினேன். ஏன்னா அவரோட எனர்ஜி. எப்போதுமே துறுதுறுன்னு இருப்பார் அதுதான் பேஸ்கட் பால் விளையாட்டுக்கு ரொம்ப முக்கியம். கிட்டதட்ட ஒரு மாசத்துல அந்த விளையாட்டுல இருக்குற முக்கியமான விஷயங்களை உடனே கத்துக்கிட்டார். படம் பாத்தவங்க எல்லாருமே அவர் ஒரு பாஸ்கட் பால் வீரராகவே மாறிட்டதா சொல்லியிருக்காங்க.



‘ஈரம்’மாதிரியே வல்லினம் படமும் மேக்கிங்கில் பேசப்படுமா?



‘ஈரம்’ படம் பாத்தீங்கன்னா ஒரு ப்ளூ டோன் (Tone) இருக்கும். அதே மாதிரி ‘வல்லினம்’ படத்துக்கு சிவப்பு டோன் அப்படினு ஃபிக்ஸ் பண்ணினேன். தமிழ்நாட்டுல சிவப்பு நிற கட்டிடம் இருக்குற கல்லூரியா தேடினேன். கோயம்புத்தூர் விவசாய கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மட்டும்தான் சிவப்பு கலர்ல இருந்துச்சு. அங்கே ஷுட்டிங் அப்படின்னா வகுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனால காலேஜ் லீவு நேரத்துல, சனி,ஞாயிறு இப்படி ப்ளான் பண்ணி ஷுட்டிங் நடத்தினோம். அதே மாதிரி காலேஜ் க்ரவுண்டுக்கு பக்கத்துல பேஸ்கட் பால் க்ரவுண்டு மாதிரி காட்சிகள் இருக்கு. அதுக்கு தமிழ்நாடு, ஐதராபாத்துல எல்லா காலேஜ்ஜையும் பார்த்தேன். கடைசில சென்னை பச்சையப்பா காலேஜ்தான் செட்டாச்சு.



இந்த மாதிரி விளையாட்டை மையப்படுத்தி எழுதின கதையில் கதாநாயகிக்கு நடிக்க ஸ்கோப் குறைவா இருக்குமே?


விளையாட்டை மையப்படுத்தி பண்ணியிருந்தாலும் நாயகி மிருதுளாவுக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கேன். நல்லா பண்ணியிருக்காங்க.



முதல் இரண்டு படங்களின் கதைக்களமும் பேய், விளையாட்டு... உங்க அடுத்த படத்தோட கதைக்களம்?



‘ஈரம்’ படத்தை ஏத்துக்கிட்டாங்க. ‘வல்லினம்’ வெளியான உடனேயும் எல்லாரும் பாத்து நல்லாயிருக்குனு சொல்லுவாங்கனு நம்பறேன். அதுக்கு அப்புறம் அப்படினு கேட்டா, இயக்குநர் அறிவழகனை வச்சு படம் பண்ணினா எல்லா விதத்துலயும் நல்லாப் போகும்னு என்னை நம்புற தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை வைச்சுதான் பண்ணுவேன். அதே நேரத்துல, நான் எழுதுற கதைக்கு இந்த நடிகர் சரியா இருப்பார்னு தோணினாதான் அப்ரோச் பண்ணுவேன்.



இயக்குநர் அறிவழகனை நம்பி படத்துக்கு வர்றவங்க எந்த விதத்துலயும் ஏமாறக்கூடாது அப்படிங்கிற விஷயத்துல நான் தெளிவாக இருக்கேன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா இல்லயான்னு எனக்கு தெரியல. எனக்கு பிடிச்ச கதையை எடுத்துருக்கேன் அப்படினு சொல்லவே மாட்டேன். நான் கதை எழுதுற அப்பவே எனக்கும் பிடித்து, ரசிகர்களுக்கும் பிடிக்கும் அப்படினு உறுதியா நம்பினாதான் திரைக்கதை எழுதவே ஆரம்பிப்பேன். இப்போ காமெடி டிரெண்ட், லவ் டிரெண்ட் அப்படினு எந்த ஒரு டிரெண்ட் பின்னாடியும் ஓடுற ஆள் நான் இல்லை!


thanx - the hindu