Wednesday, January 08, 2014

புறம்போக்கு - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி,

இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் 

நான் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் இல்லை- இயக்குநர் ஜனநாதன்

 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நவீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரலாற்று பெட்டகம். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும், பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சினிமா கலைஞர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த சிந்தனைவாதியான இவர் இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி, ஷ்யாம், கார்த்திகா கூட்டணியின் நடிப்பில் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.



#அது என்ன உங்கள் படத்துக்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்துள்ளீர்கள்?

 
குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியதாக டார்வின் சொல்கிறார். இதையே ஏங்கல்ஸ் ஒரு இடத்தில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்துகொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இன்னும் அந்த பரிணாமம் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தானே அந்த இடத்தில் குறிப்பிடுவதாக அர்த்தம். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட தேசப்பிரிவினையில் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஏன் அண்மையில் இலங்கையில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே. அப்படியென்றால் நமக்குள் குரங்கின் குணம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே. அதைத்தான் இந்தப் படத்தில் கொண்டுவந்திருக்கிறேன். 



அதேபோல மனித நாகரீகம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து வருவதற்கு நிறைய சிறைச்சாலைகள் வழியாக கடந்து வரவேண்டி யிருப்பதை நம் வரலாறு சொல்கிறது. யார் ஒருவன் இந்த சமூகத்திற்காக போராடுகிறானோ, அவன் அடக்கு முறைக்கு உள்ளாகியிருக்கிறான், கைது செய்யப்பட்டிருக்கிறான், கொலை செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் அவன் தியாகி ஆக்கப்பட்டிருக்கிறான். ஸ்பார்டகஸ், சாக்ரடீஸ் போன்ற நிறைய பேரை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான தியாகத்தை முன்வைத்துதான் சிறைச் 

சாலை வழியே நாகரீகம் வளர்ந்தி ருக்கிறது என்பதற்கு வரலாறு இருக்கிறது. அதை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு சில இளைஞர்கள் போராட முன் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் இந்த படைப்பில் படைத்திருக்கிறேன்

.
#இந்தச் சமூகத்திற்காக வித்தியாசமான ஏதாவது விஷயங்களை அழுத்தமாக கொடுக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

 
நான் பிறப்பால் தமிழன் என்கிற அடையாளத்தைப் பெற்றவன். ஒரு ஓவியனாகவோ, ஒரு கவிஞனாகவோ இருந்திருந்தால் அந்த வழியே என்னோட ஆர்ட் ஃபார்ம் பிரதிபலித்திருக்கும். நான் சினிமாக்காரனாக இருக்கிறேன். என்னுடைய அடையாளத்தை இந்த வழியில் சொல்லித்தானே ஆக வேண்டும். நீங்க பணம் கொடுக்கிறீர்கள் என்பதற்காக வெறும் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் நான் இல்லை. 


அதற்கு பதில் வேறு வேலையை செய்வேன். இந்த சமூகத்திலிருந்து நான் ஒன்றை கற்றேன். அதை மீண்டும் என் பாதிப்பாக முன் வைக்கிறேன். இதில் விமர்சனம் இருந்தால் தாராளமாக முன் வைக்கலாம். நல்ல விஷயம் என்றால் ஆதரிக்கலாமே. என்னை இங்கே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வெற்றியாளனாகவே இருக்கிறேன். அப்படியென்றால் இப்படியான படங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான தேவையும் இங்கே இருக்கிறது. 



#நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான படங்களை இயக்காததற்கு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்புதான் காரணமா?

 
பல்வேறு வேலைகள். அதில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக வகித்த பதவி. இதில் முழு திருப்தியா எல்லோரும் சேர்ந்து இயக்குநர் சங்கக் கட்டிட வேலைகளை முடித்திருக்கிறோம். ஒரு படத்தை எடுப்பதைப் போலத்தான் அந்த வேலையையும் நான் நினைத்தேன். இடையிடையே சின்னச் சின்ன சங்கப்பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பதவிக் காலம் முடிந்தது. அடுத்த கணமே படவேலையை கையில் எடுத்துக்கொண்டேன். 



#இந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பற்றி?

 
அடிப்படையாக இரண்டு நாயகர்கள் படம் இது. மீண்டும் சிறந்த இயக்குநர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள இங்கே வேலை இல்லை. இங்கே எல்லாவகையிலும் அதிகமான வீச்சு அவசியமாக இருக்கிறது இவர்கள் இருவரும் மக்கள் விரும்பும் நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் உடனே தியேட்டருக்கு போகிறார்கள். இதில் யாரையும் எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. சின்ன படம், நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து போவதற்குள் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. 



என்னு டைய படத்தை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்யாவும் விஜய் சேதுபதியும் தேவைப் படுகிறார்கள். அவர்களை வைத்து ஒரு ஜனநாதனின் படத்தைத்தான் நான் இயக்கப்போகிறேன். நாயகி கார்த்திகாவின் தேர்வும் அப்படித்தான். எனக்கு தமிழ் நன்றாக பேசும் நாயகியாக இருக்க வேண்டும். அவரால்தான் என் கதையை முழுக்க உணர்ந்து பிரதிபலிக்க முடியும் என்று தோணும். கதைக்குத்தேவையான தென்னிந்திய லுக், கலர், உயரம், உடல்மொழி எல்லாமும் அந்தப் பெண்ணிடம் இருந்தது. நம்ம ஆனந்த் இயக்கிய ’கோ’ வெற்றிப்படத்தின் நாயகி. இதெல்லாம் போதாதா. அப்படியும் ஒவ்வொரு முறையும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளன். 


#இவ்வளவு வேலைகளுக்கு இடையே தயாரிப்பாளர் பொறுப்பு உங்களுக்கு அவசியம்தானா?


 
எல்லாத்துக்கும் ஒரு சுதந்திரம் இருந்தால் சிறப்பாக அமையும் இல்லையா. என்னுடைய கிரியேட்டி விட்டி சுதந்திரத்திற்காக இந்த தயாரிப்பாளர் அணிகலனை எடுத்து அணிந்திருக்கிறேன். முதல் காப்பி மட்டும் நான் ஷூட் செய்கிறேன். அதுவும் நான் நினைக்க விரும்பிய விதத்தில் படைப்பு அமைய வேண்டும் என்பதற்காக. அவ்வளவுதான். மற்றபடி எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இங்கே இடம் தேவையில்லை. இயக்குநர் மணிரத்னம் இன்றைக்கும் இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறாரே. அவரும் இந்திய அளவில் பேசப்படுகிறாரே. ஆகவே, படைப்பு சுந்தந்திரத்திற்காக தாரளமாக ஒரு இயக்குநர் அந்த வேலையை தொடரலாம். 


#ஷூட்டிங் எப்போது?


 
தை 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம். இவ்வளவு நாட்களாக குலுமணாலியில் பனிப்பொழிவுக்காக காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம். சென்னையை களமாகக்கொண்டு ஏறக்குறைய இந்தியா முழுக்க ஷூட் செய்யவிருக்கிறோம். குலுமணாலியில் ஷூட்டிங் முடித்து பொக்ரான் வழியே ஜெய்ப்பூர், பின் அங்கே இருந்து ஜெய்ஷால்மர் பாலைவனம் வரைக்கும் பயணம் தொடர்கிறது. 


thanx - tamil hindu