Tuesday, January 07, 2014

பாலுறவு - பிரான்ஸில் கருத்துக்கணிப்பு உடைத்த உண்மை

அண்மைக் காலத்தில், ஊடகங்களில் அடிக்கடி நாம் சந்திக்கும் பாலியல்பற்றிய செய்திகள் மூலம் விரும்பத் தகாத ஒரு ‘புகழ்’ இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. 


உலகின் எந்தச் சமூகத்திலும் இது போன்ற வக்கிரங்கள் இருக்கத்தான் செய் கின்றன என்றாலும், இங்கே இந்த நிகழ்வுகள் அத்துமீறி நிகழ்வதாகத் தோன்றுகிறது. உளவியல், சமூகவியல்ரீதியில் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மனிதர்களிடையே பெரும்பாலும் பாலியல், பாலுறவுகுறித்த ஆரோக்கியமான பார்வை கள் வேரூன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


கருத்துக்கணிப்பு உடைத்த உண்மை

 
பிரான்ஸில் அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், ‘உலகின் சிறந்த காதலர்கள்' என்று பெயர்பெற்ற பிரெஞ்சுக்காரர்கள் ‘வாழ்க்கையில் பாலுறவு அளிக்கும் இன்பத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை' என்பது சரியா, தவறா என்ற கேள்விக்கு 70% பேர் தவறு என்று பதிலளித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதை வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகளில் பிரபலமான, சிக்மண்ட் ஃப்ராய்டு முன்வைத்த பாலியல் முக்கியத்துவத்தின் அடிப்படையிலான கோட்பாடு இன்று கேள்விக்குள்ளாக்கப்படுவது தெரியும்


. 1900-ல் சமூகத் தடைகளும் கட்டாய சுயகட்டுப்பாடுகளும் நிறைந்த சமூகப் பின்னணியில் அவர் அறிமுகப்படுத்திய இந்தக் கருத்து, பாலியல் விவகாரங்களில் அதீத சுதந்திரம் பெற்று, பின்னர் சிறிதுசிறிதாக மரபின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற சூழலில் மக்களுக்குப் பெருமளவில் ஏமாற்றத்தையும் அதி ருப்தியையும் அளித்துவிட்டதென்று பல சிந்தனையாளர்களும் உளவியலா ளர்களும் கருதுகின்றனர். 


தெளிவு பிறக்கும் காலம்?

 
பிரெஞ்சில் ‘தத்துவச் சிந்தனை இதழ்' என்ற பெயரில் வெளிவரும் மாத இதழின் ஆசிரியர் அலெக்ஸாந்தர் லாக்ர்வா, “மேலை நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, பின்னர் அதுதான் எல்லாமே என்றாகிவிட்ட பாலியல் பிரச்சினையில் ஒருவேளை இன்று தெளிவு பிறக்கும் நேரம் வந்துவிட்டதா?” என்ற கேள்வியை எழுப்புகிறார். 


மார்ச் 2013 இதழில் பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இந்தப் பிரச்சினைபற்றிய தங்கள் கருத்துகளைஆழமாகவும் வெளிப் படையாகவும் எழுதியிருந்தார்கள். தொழில்ரீதியில் முற்றிலும் வேறுபட்ட தளங்களில் செயல்படுவதாக நினைக்கத் தூண்டும் இரண்டு பிரபலங்களிடையே நிகழ்ந்த அசாதாரணமான நேர்காணல் ஒன்று இந்த இதழில் கவனத்தைக் கவரும் பகுதியாக இருக்கிறது. முதலாமவர், ஆந்த்ரே கோன்த் - ஸ்போன்வில். (பிற‌ப்பு 1952) தத்துவச் சிந்தனையாளர், சோர்போன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் உதவிப் பேராசிரியர். 


பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், 2012-ல் தத்துவ அகராதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். இரண்டாமவர், ஓவிதி. (பிறப்பு 1980): முன்னாள் பாலியல் பட நடிகை, தயாரிப்பாளர், தற்போது பாலியல் கல்வி நிபுணர். இளம் வயதிலேயே போதைப்பொருட்க‌ள், மதுபானம் இவற்றை மறுத்து, தீவிரமாக சைவ உணவு மட்டுமே உண்ணும் வாழ்க்கை முறையை மேற்கொண்ட இவர், பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தில் பட்டம்பெற்று, ‘பாலியலும் தத்துவமும்’ (2012) என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். 


பாலுறவு வெகுளித்தனமானதல்ல

 
‘‘இனப்பெருக்கத்துக்கு அவசியமான உடலுறவு என்ற‌ செயல்பாடு, என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஒருபோதும் முற்றி லும் வெகுளித்தனமானதல்ல. மற்ற உயிர்களிடம் காணப்படும் வெகுளித் தனமான பாலியல்பு மனித குலத்தில் இருப்பதில்லை. எப்போதும் அதன் பின்னால் ஒரு நோக்கம் இருந்து கொண்டே இருக்கிறது; அதைப் பற்றி தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட எண்ணங்களுக்கு அந்த நோக்கமானது ஊட்டமளித்து, சில சமயங்களில் ஆபத்தான பின்விளைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது” என்பது இவருடைய கருத்து. 



இதே கருத்தை இன்னும் ஆழமாக, வரலாற்றுப் பின்னணியில் பார்க்கிறார் கோன்த்-ஸ்போன்வில். கிட்டத்தட்ட 20 நூற்றாண்டுகளாக நிலவிய ஒழுக்க நியதிக் கட்டுப்பாடுகளையும் குறிப்பாக, மதத் தலைவர் தூய அகஸ்டீன் கருத்துப்படி, பாலியல் ஒரு பாவச்செயல் என்றும் இனவிருத்தியைத் தவிர, வேறுவிதமான பாலியல் தொடர்புகள் தகாதவை என்றும் இருந்த நிலையையும் சுட்டிக்காட்டி, அதிலிருந்து சமூகம் விடுபட்டு வெகுதூரம் வந்துவிட்டதை நினைவுபடுத்துகிறார். 



ஆனால், ‘‘சமூகம் ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறுக்குப் போய்விட்டது. அரக்கத்தனம், பாவம் என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாலியல் அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டது. ஒழுக்க நெறிக்கும் பாலியலுக்கும் இடையே எப்போதுமே இறுக்கமான ஓர் உறவு இருந்துவந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பண்டைய கிரேக்க சிந்தனை, ஒருவிதத் தயக்கத்தையும் நிதானத்தையும் மேற் கொண்டிருக்கிறது’’ என்கிறார் இவர். 



சுவாரஸ்யமான ஒரு பார்வை


 
நிர்வாணிகள் சங்கத்தில்கூட அதன் அங்கத்தினர்கள் உடலுறவு கொள்ள வரும்போது, மறைவான இடத்தைத் தேடிப் போகிறார்கள். “இவ்வளவு இயல்பான ஒரு செய‌லுக்கு ஏன் மறைவைத் தேடிப் போக வேண்டும்?” என்ற இக்கட்டான கேள்வியை போன்வில் எழுப்புகிறார். “ஏனென்றால், இந்த அளவுக்கு ஒரு மிருகத்தைப் போலத் தான் ஆகிவிட்டதாக உணரும் மனிதனின் ஆழ்மனதில் ஒருவித சங்கடம் இருக்கிறது. பசி எடுத்து உண்பதும் மிருகத்துக்கு இருப்பதைப் போன்ற ஓர் இச்சைதான்;



 இருந்தாலும், உண்ணும்போது வேறு பலவிஷயங்களைப் பற்றி நினைக்கவோ பேசவோ மனிதனால் முடிகிறது. இந்த இச்சை மனிதனை முழுமையாக விழுங்கிவிடுவதில்லை. மிருக இயல்புக்கும் மனிதத்தன்மைக்கும் இயற்கைக்கும் பண்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் பாலியல்பின் தன்மை, தாக்கம், விளைவு ஆகியவற்றை ஆய்வுசெய்ய வேண்டும்” என்கிறார். 



ஆண் - பெண் இருபாலரிடையேயும் இருக்க வேண்டிய பரஸ்பர மதிப்பையும் மரியாதையையும் இவர்கள் இருவருமே பரிந்துரைக்கிறார்கள். இது ஓர் லட்சியக் கனவுபோலத் தோன்றினாலும் இளைஞர்களின் கல்வித் திட்டத்தில் இந்த அம்சத்தை வலியுறுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் பாலியல் பலாத் காரங்கள் குறைய வாய்ப்பிருக்கும். பலாத் காரத்தின் மூல காரணங்களை அறிய முடியும். 


தத்துவ சிந்தனையாளர் ஆந்த்ரே கோன்த் -ஸ்போன்வில்லின் கருத்துப்படி, மூன்று விதிகளுக்கும் உட்பட்ட பாலியல் உறவுதான் ஒழுக்கரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதி பெறுகிறது. 


சுதந்திரம், சமத்துவம், பரஸ்பர மரியாதை. இந்த மூன்று நிபந்தனைகளையும் வலியுறுத்து வதென்பது, பாலியல் பலாத்காரம் கொடுமையான ஒரு செயல் என்பதையும், பாலியல் தொழில் ஒருபோதும் திருப்தி அளிக்காது என்பதையும், பல திருமணங்கள் செய்துகொள்வது எப் போதும் பிரச்சினையைத்தான் வளர்க்கும் என்பதையும் நன்றாக உணரச் செய்யும். 


எங்கே மனிதத்தன்மை?


 
நேர்மையான அரசியல், சீரிய ஒழுக்க நெறி, கலை, ஆன்மிகம் போன் றவை தங்களுக்குண்டான முக்கி யத்துவத்தையும் செயல்பாடுகளின் சுய அதிகாரத்தையும் இழக்காமல் முறையாகப் பேணிவந்தால், மனித சிந்தனையைப் பாலியல் முற்றிலுமாக ஆக்கிரமிக்காது. பாலுறவைத் தவிர, மற்ற பல விஷயங்களில் மனிதன் தன் னுடைய சிந்தனையைச் செலுத்துவது மிக அவசியம். “பாலுறவுக்கு நியாயமான இடம் கிடைக்க வேண்டுமானால், முழு இடத்தையும் அதுவே எடுத்துக்கொள்ளக் கூடாது” என்கிறார் அவர். 



ஆஸ்திரியக் கவிஞர் ரெய்னர் மாரியா ரில்கே ( 1875- 1926) ‘இளம் கவிஞருக்குக் கடிதங்கள்' என்ற புத்தகத்தில் “ஆணைவிட மனிதத் தன்மைக்கு மிகவும் நெருங்கியிருப்பவள் பெண்...” என்று சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டும் கோன்த்-ஸ்போன்வில், “இங்கே மனிதத் தன்மை என்று ரில்கே குறிப்பிடுவது, மற்றவர்களிடம் கனிவாகவும் பரிவுடனும் இருத்தல்” என்கிறார். 



இந்தக் கோணத்தில் அது வன்முறை, காட்டுமிராண்டித்தனம், மனிதாபிமானமற்ற செயல்கள் இவற்றுக்கு எதிரானது. பாலுறவை மனிதாபிமானமுள்ளதாக ஆக்குவதில் ஆணைவிடப் பெண்ணின் பங்கே அதிகம். ‘காதலும் பாலியலும்’ என்ற அவருடைய புத்தகத்தில் சொல்கிறார்: “முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இருக்கும் ஒரு மனிதச் சமூகம், ஒருபோதும் காதலை அறிந்திருக்க முடியாது; பாலியலும் போரும் மட்டுமே அதற்குப் போதுமானதாக இருந்திருக்கும்!” 



- by வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், சமூக விமர்சகர், இருமுறை செவாலியெ விருதுபெற்றவர். தொடர்புக்கு: [email protected] 


thanx  - the hindu


readers view 

1. stanislas Perianayagam at Government

 
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- சொல்லி சொல்லியே மறைவில் தேடக் கற்பிக்கப்பட்டவர்கள் நாம்!இன்றோ கனிவும் பரிவும் இன்றி மனிததன்மையைக் கைவிட்ட அதீத பாலுறவுச் சிக்கல்கள் தலை விரித்தாடுகின்றன.இள வட்டங்கள்தாம் இப்படி என்றால் நம்ப முடியா அரசியல் கிழடுகளின் கொட்டம் -நீதிபதியின் கயமை-ஊடகவியலாளரின் திரை மறைவு-அரசியல் நாற்காலியின் பின்தொடரல் -ஆசிரியர்களின் அடாத ஒழுக்கமின்மை வெளிச்சத்திற்கு வருகின்றன. பிரான்சின் தெளிவு நமக்கில்லை...? எல்லாமே ரகசியம் என்பதன் பேரால் அசிங்கங்களே ஆட்சி செலுத்தி வருகின்றன.



பாலுறவு தான் இன்பத்தின் உச்சம் என்பது அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது.நமக்கோ அதுதான் உயர்வாகப் புரிகிறது.சுதந்திரம்,சமத்துவம் ,பரஸ்பர மரியாதை என்பதன் மேல் கட்டமைக்கப் படும் பாலுறவுதான் தாம்பத்தியத்துக்கும் பெருமை சேர்க்கிறது.திருமணம் ஆயிரம் காலத்துப் பயிராக காட்டப்படும் சித்திரம் இங்கேதான்!வேலி தாண்டிய பாலுறவு வெள்ளாமையை விளைவிக்காது.பாலியல்,பாலுறவு பற்றிய ஆரோக்கியமான பார்வைகள் இங்கே பகிரப்பட-விவாதிக்கப்பட வேண்டும்!...




2  ஒரு அருமையான கட்டுரை .ஸ்ரீராமிற்கு நன்றி. இந்தியாவில் பாலியல் பலாத்காரம் என்பது பெரும்பாலும் ஒரு ஆண் தன் தாழ்வுமனப்பான்மையையும், இந்த சமூகத்தின் மேல் தனக்கு இருக்கும் வெறுப்பையும் வடிக்க பயன் படுத்திக்கொள்ளும் ஒரு வடிகாலாகவே உள்ளது.இது நாட்டில் பெருகிவிட்ட வர்க்க பேதத்தின் குறியீடு.மொத்தத்தில் இது ஒரு நோய்.ஆனால் குற்றமாக சித்தரிக்கப்படுகிறது.



3   பாலுறவு என்பது மனித இயல்பு,இயற்கை.இயற்கை சீரழிவு,பேரிடர் எல்லாம் இயற்கைக்கு எதிரானா முரண்களில்,வரையறை மீறல்களில் உண்டாவதே!சிம்மன் ப்ராஇட் போன்றவர்கள் மனித இயல்பையும்,இயற்கையும் அறியாத வீணர்கள்.தங்களின் யூத சமுக சிந்தனையில்,இன வெறியில் மனித குலத்தை நாசமாக்கியவர்கள்.இவரை போன்ற தத்துவவாதிகளும் மனித குலத்தை தங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கற்பனையால் உலகை நாசப்படுத்தி விட்டார்கள்


.அதை மேற்க்கத்திய உலகம் மெல்ல மெல்ல உணர்ந்து வெளியேறி வருகிறது.பாலுணர்வின் அடிப்படை இனப்பெருக்கமும்,உள அமைதியும்.இனப்பெருக்கம் மனித வளத்தின் ஆதாரம்;மனிதனுக்குரிய கடமையை,பொறுப்பை,இலக்கை கற்ப்பிக்கும்.இது மனிதனின் அறிவை முதிர்ச்சியடைய செய்யும் அனுபவங்களை பெற்று தரும்,வளர்ச்சியை நோக்கி உந்தி தள்ளும்.இதை முடக்க நினைக்கும் எல்லா தீர்மானங்களும்....அது துறவாயினும்,குடும்ப கட்டுப்பாடாயினும் இயற்கைக்கு எதிரான வீண் விரயம்.அதன் விபரீதத்தை தான் உலகம் இன்று அனுபவிக்கிறது