Saturday, January 04, 2014

நம்ம கிராமம் - சினிமா விமர்சனம்



இந்தியா வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலகட்டத்திலும், அதற்கு முன்பும், நம் சமூகத்தில் இருந்த பெண் அடிமைத்தனத்தையும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விளக்கும் அழகிய பீரியட்பிலிம் தான் "நம்ம கிராமம்! நடிகர் மோகன் சர்மாவின் இயக்கத்தில், மலையாளத்திலும், தமிழிலும் வெளிவந்திருக்கும் முத்தாய்ப்பான படமும் கூட!


பாலக்காடு பகுதியை சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பெரும் பணத்துடனும், பேரும் புகழுடனும் வாழும் ராவ் பகதூர் சுப்பிரமணிய சர்மா எனும் மோகன் சர்மாவுக்கு அன்பான குடும்பமும் உண்டு, ஆசை நாயகியும் உண்டு! அவரது கூட்டு குடும்பத்தில் அவரது தங்கை ரேணுகாவின் மகள் துளசி எனும் சும்விருத்தா சுனிலுக்கு பார்த்து பார்த்து அவர் சிறுமியாக இருக்கும் போதே குழந்தை விவாகம் செய்து வைக்கிறார் ராவ் பகதூர்.


திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பாம்பு கடித்து மணமகன் இறந்து போக மொத்த குடும்பமும் துக்கத்தில் திளைக்கிறது. ஆனால் மோகன் சர்மாவின் விதவை தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க மொட்டை அடிக்கும் வைபவம் மட்டும் தள்ளி வைக்கப்பட்டு, மற்றபடி வீட்டின் இரண்டாங்கட்டில் விதவை பாட்டியுடன் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளில் வைக்கப்படுகிறார் துளசி! இதைக்கண்டு சர்மாவின் மகனும், துளசியின் மாமன் மகனுமான கண்ணன் கொதிக்கிறான்.


ஒருகட்டத்தில் துளசிக்கும் மொட்டை என குடும்பம் மொத்தமும் களம் இறங்கும்போது சுகுமாரி பாட்டி தீக்குளிக்கிறார். அதையே காரணமாக வைத்து கண்ணன், துளசி கழுத்தில் மறுதாலிகட்டி புரட்சி படைப்பதோடு அந்த வீட்டையும், கிராமத்தையும் ஒதுக்கி வைத்து மனைவியுடன் பட்டணம் புறப்படுகிறான். இது தான் "நம்ம கிராமம்! இது எல்லாம் சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதும், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் நாளில் துளசிக்கும் சுதந்திரம் கிடைப்பதில் தான் டைரக்டர் மோகன் சர்மாவின் டச் ஜொலிக்கிறது.



மோகன் சர்மா, மறைந்த சுகுமாரி, பாத்திமா பாபு, பேபி சம்ஜா, சம்விருத்தா சுனில், மாஸ்டர் சச்சின், கண்ணன், டாக்டர் ராதிகா, ரேணுகா உள்ளிட்ட எல்லோரும் பாலக்காட்டு பிராமணர்களாகவே நடித்து சுதந்திர போராட்ட காலத்திற்கு நம்மை அழைத்து செல்வது "நம்ம கிராமம் படத்தின் பெரிய பலம்! அதிலும் அந்த பைத்தியகார கிழவியாக வரும் பாட்டியாகட்டும், மாஸ்டர் நெடுமுடி வேணுவாகட்டும் எல்லோரும் நம்ம கிராமத்தில் நம்மை லயிக்க வைப்பது சூப்பர்ப்!


மது அம்பாட்டின் அழகிய ஓவிய ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் மோகன் சர்மாவின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு எல்லாம் மெய்சிலிர்ப்பு!


மொத்தத்தில், ""நம்ம கிராமம் - நல்ல ப(பா)டமாகும்!


Thanks - Dinamalar