Thursday, January 02, 2014

தமிழீழம் சாத்தியமே இல்லாதது - தி இந்து என்.ராம் சிறப்புப் பேட்டி

என்.ராம், மூத்த பத்திரிகையாளர், 'தி இந்து' குழுமத்தின் தலைவர்.இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம். 


எந்த வயதில் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

 
பள்ளிக்கூட நாட்களிலேயே. குடும்பத்திலும் அதை எதிர்பார்த்தார்கள். ஒரு பத்திரிகையை நடத்தும் குடும் பத்தில் இது சகஜம் இல்லையா? 


உங்கள் தந்தை நரசிம்மன் பத்திரிகையாளர் அல்ல; நிர்வாகத்தில்தான் இருந்தார் அல்லவா?

 
ஆமாம். குடும்பத்தில் அப்போதே எங்கள் எல்லோருக்கும் இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பத்திரிகையின் நிர்வாக இலாகா அல்லது ஆசிரியர் இலாகா. அதற்கேற்ற கல்வியும் பயிற்சியும் முக்கியம். எனக்குச் சின்ன வயதிலிருந்தே எழுத்து ஆர்வம் இருந்ததால், ஆசிரியர் இலாகாவையே தேர்ந்தெடுத்தேன். இந்த விஷயத்தில் எனக்கு முன்மாதிரி என்றால், கஸ்தூரி ரங்க ஐயங்கார். நேரில் பார்க்கவில்லை என்றாலும், அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் பத்திரிகையாளர் மட்டும் அல்ல; சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தவர். 



திலகரின் ஆதரவாளர். பூரண சுதந்திரத்துக்காகக் குரல்கொடுத்த காங்கிரஸின் தீவிரமான குரல்களில் ஒன்று அவருடையது. அடுத்து, நீண்ட கால ஆசிரியர்களாக இருந்த கஸ்தூரி ஸ்ரீனிவாசனும் ஜி. கஸ்தூரியும். கஸ்தூரி ஸ்ரீனிவாசனின் கச்சிதத்தை எல்லோருமே குறிப்பிடுவார்கள். அதிகம் எழுத மாட்டார். ஆனால், எல்லாப் பிரதிகளையும் பார்த்துத் திருத்துவார். சின்னத் தவறுகள்கூட அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தும். ஜி. கஸ்தூரி வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் பத்திரிகையை அடுத்த தளத்துக்கு எடுத்துச்சென்றவர். 


இவர்களை எல்லாம் அருகில் இருந்து பார்த்தபோது, எழுத்தார்வம் கொண்ட ஒருவனுக்கு ஆசிரியர் இலாகாதானே ஆசையைத் தூண்டும்? ஆனால், வேலையில் விசேஷ சலுகை எல்லாம் கிடையாது. நிருபராகத்தான் சேர்ந்தேன். அடுத்து உதவி ஆசிரியர் பணி. என். ரவி, கே.வேணுகோபால், மாலினி பார்த்தசாரதி எல்லோருமே இப்படித்தான் உருவானோம். 


பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் உங்களுடையது. ஒரு காலகட்டம் வரை ‘தி இந்து’வும்கூட காங்கிரஸை ஆதரிக்கும் பத்திரிகையாகவே இருந்தது. நீங்கள் இடதுசாரியாக ஆனதையும் தீவிர அரசியலில் பங்கேற்றதையும் குடும்பம் எப்படிப் பார்த்தது?


 
அதிர்ச்சியாகத்தான் பார்த்தார்கள். கொஞ்சம் பேர் எதிர்க்கவும் செய்தார்கள். அதே அளவுக்கு ஆதரவும் இருந்தது. ஆனால், அரசியலில் தீவிரமாக இறங்கியபோது, நானே பத்திரிகையை விட்டு விலகியிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு வருஷம் கட்சி வேலைகளில் தீவிரமாக இருந்தேன். நெருக்கடிநிலைப் பிரகடனத்தின்போதெல்லாம் அதை எதிர்த்து வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு காலகட்டத்தில் ‘தி இந்து’ நிர்வாகத்துக்கு எதிராக நடந்த ஒரு பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது நான் ஊழியர்கள் பக்கம் இருந்தேன். ஆனால், குடும்பத்தினர் யாரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடவில்லை. 


போபர்ஸ் செய்தி ‘தி இந்து’வுக்கே புலனாய்வு இதழியல் மீது ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஆனால், அதற்குப் பின்னர் - நீங்களே தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலகட்டத்திலும்கூட - அப்படிப்பட்ட ஒரு பெரிய ‘ஸ்கூப்’ செய்தி வெளிவரவில்லை. ஏன்?

 
போபர்ஸுக்கு முன்பே 1981-ல் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினோம். இந்தியா நெருக்கடியில் இருந்த காலகட்டம் அது. சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) உதவ முன்வந்தது. அதேசமயம், ஏராளமான நிபந்தனைகளை இந்தியா ஏற்க வேண்டியிருந்தது. அந்த நிபந்தனைகளின் பின்னணியை அம்பலப்படுத்தினோம்.


 அதேபோல, தாராப்பூர் அணு உலைக்கு அமெரிக்கா எரிபொருளைப் படிப்படியாகக் குறைத்தபோது, இந்தியா நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தையை வெளியே கொண்டுவந்தோம். 


இவை எல்லாம் அன்றைக்குப் பெரிய செய்திகள். போபர்ஸ் செய்திக்குப் பிறகும் அவ்வப்போது செய்திருக்கிறோம். சமீபத்திய உதாரணம் ‘விக்கிலீக்ஸ்’. ஆனால், போபர்ஸுடன் இவற்றை ஒப்பிட முடியாது என்பது உண்மைதான். அப்படி ஒரு காலச் சூழல் அமையவில்லை என்றும்கூடச் சொல்லலாம். உண்மையில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவர ஒரு அணியே செயல்பட்டோம். 


செய்தியில் கோணம் கலக்கக் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்துபவர் நீங்கள். ஒரு காலத்தில் பத்திரிகை படித்தால்தான் செய்தியைத் தெரிந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படியல்ல; இணையம் - சமூக ஊடகங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், 24 மணி நேரத் தொலைக்காட்சிகளே திணறுகின்றன. முந்தைய நாளே எல்லாச் செய்திகளும் வாசகர்களை அடைந்துவிடும் நிலையில், மறுநாள் பத்திரிகையிலும் வெறும் தகவல்களே செய்தியாக வந்தால் எடுபடுமா?


 
உண்மைதான். பெரிய சவால்தான் இது. ஆனால், இன்றைக்கும் இணையமோ தொலைக்காட்சிகளோ பத்திரிகைகளைப் போல செய்திகளை ஆழமாகக் கொடுப்பதில்லை. இத்தகைய சூழலில், பத்திரிகைகள் ஒரு நிகழ்வைத் தருகின்றன என்றால், வெறும் சம்பவத்தை மட்டும் செய்தியாகத் தராமல், அதன் பின்னணி, அதையொட்டிய தகவல்கள் என்று ஒரு திரட்டாகவும் சுவையாகவும் செய்தியை அளிப்பதன் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தை நாம் சாக்காக்கிக் கொள்ளலாம். ஆனால், செய்தியில் நம் பார்வைகளையும் முன்முடிவுகளையும் கலந்து கொடுத்தால் என்னவாகும்? ஆளாளுக்குச் செய்தியில் கை வைத்தால், படிக்கும் வாசகருக்குக் குழப்பம்தான் வரும். 


எப்போதுமே மதவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் ‘தி இந்து’ கடுமையாக இருந்திருக்கிறது. ஆனால், மதவாத எதிர்ப்பில் காட்டப்படும் தீவிரம், சாதிய எதிர்ப்பில் இல்லை என்ற விமர்சனம் ‘தி இந்து’ மீது உண்டு…


 
உண்மைதான். இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். சாதி நம் நாட்டின் பெரும் சாபம். அதை ஒழிக்க வேண்டிய கடமை எல்லோருக்குமே இருக்கிறது. முக்கியமாக ஊடகங்களுக்கு. ஒரு காலகட்டம் வரை நாம் போதிய கவனம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது அதன் போதாமை புரிகிறது. அதே சமயம், இதற்கான பின்னணியில் பல காரணிகள் உண்டு. 



சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலும் சரி; சுதந்திரம் அடைந்த சூழலிலும் சரி, மக்களிடம் பிளவை உண்டாக்கும் செய்திகளைத் தவிர்க்க வேண்டும்; ஒற்றுமைதான் முக்கியம் என்ற கொள்கையை அன்றைய பத்திரிகைகள் பலவும் கடைப்பிடித்தோம். அப்புறம், சாதியப் பிரச்சினைகள் பல வெளியே தெரியவராமல் உள்ளூருக்குள்ளேயே அசமடக்கப்பட்டன. அப்புறம், இந்தத் தொழிலில் ஏனையோருக்கு இல்லாமல் இருந்த பிரதிநிதித்துவம். இன்றைக்கும் பத்திரிகைத் துறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இப்படிப் பல காரணிகள். ஆனால், இப்போது சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். 


ஊழியர்கள் நலனுக்குப் பேர்போனது ‘தி இந்து’ குழுமம். ஆனால், 135 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாகக் குடும்ப நிர்வாகத்திலிருந்து தொழில்முறை நிர்வாகத்துக்கு (புரொஃபஷனல் மேனேஜ்மென்ட்) மாற்றப்பட்ட பின் கொண்டுவரப்பட்ட ஆசிரியர், தலைமை நிர்வாக இயக்குநர் இருவரும் ஒரே நாளில் பணியிறக்கம் செய்யப்பட்டபோது, ஊழியர் பணிப் பாதுகாப்பில் நீங்கள் காட்டும் அக்கறை கேள்விக்குள்ளானது…


 
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ‘தி இந்து’ குழுமத்தின் பெறுமானம் என்பது அதன் வியாபாரம், சந்தை மதிப்பை மட்டும் உள்ளடக்கியது இல்லை; அது காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் மதிப்பீடுகள், அறநெறிகளையும் உள்ளடக்கியது. அது கேள்விக்கு உள்ளானபோதுதான் மீண்டும் குடும்ப நிர்வாக முறைக்குத் திரும்பினோம். ஏனென்றால், இந்த மாதிரி அடிப்படை மதிப்பீடுகளைப் பேணுவதில் உரிமையாளர்களும் இயக்குநர்களுமாகிய எங்களுக்குள் என்றைக்குமே இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. 



அதேசமயம், தொழில்முறை நிர்வாகத்தை (புரொபஷனல் மேனேஜ்மென்ட்) குறைத்து மதிப்பிட முடியாது; தொழில்முறை நோக்கு (புரொபஷனலிஸம்) இல்லாத ஓர் ஊடக நிறுவனம் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாது என்பதையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். ஆகையால், இனி தொழில்முறைப் பாதையில்தான் செல்லப்போகிறோம்; ஆனால், வெளியாட்களும் குடும்பத்து ஆட்களும் இணைந்து பங்கேற்பதாக அது இருக்கும். 



தமிழ் அடித்தளத்திலிருந்து எழுந்த ‘தி இந்து’ தமிழ்க் கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் பெரிய கவனம் கொடுத்திருக்கிறது. ஆனால், தமிழ் அடையாளத்தின் மையமான மொழி விஷயத்தில் எப்போதும் விளிம்பு நிலையிலேயே இருந்திருக்கிறது. என்ன காரணம்?


 
அக்கறை இல்லாமல் இல்லை. அதைச் செய்யக் கூடிய ஆட்கள் எங்களில் இல்லை என்பதும் செய்யக்கூடியவர்களை எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதும்தான் காரணம். அந்தக் குறையை எல்லாம் போக்கத்தான் இப்போது தமிழில் ‘தி இந்து’வைக் கொண்டுவந்திருக்கிறோம். 



ஆங்கிலத்திலிருந்து பிராந்திய மொழிகளில் அடி எடுத்துவைக்கும் முயற்சியைத் தமிழிலிருந்து தொடங்கியிருக்கிறீர்கள். தமிழ் அனுபவம் என்ன சொல்கிறது?


 
தமிழில் நல்ல விஷயங்களைக் கொடுத்தால் அதை வரவேற்க ஒரு பெரும் வாசகர் கூட்டம் இருக்கிறது என்பதும், ஆங்கிலத்தைவிட தமிழில் நாம் சொல்லும் விஷயம் எல்லாத் தரப்பு மக்களையும் போய்ச் சேர்கிறது என்பதும் தமிழ்ச் சூழல் சார்ந்து புரிந்துகொண்டது. சந்தை சார்ந்து சொல்ல வேண்டும் என்றால், பிராந்திய மொழி இதழியலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பது புரிகிறது. எனினும், ஆங்கிலத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவில் அது ஆழ வேரூன்றி இருக்கிறது. ஆங்கில இதழியல் நாடு முழுவதும் சென்றடைவதோடு, சர்வதேசக் கவனத்தையும் பெறுகிறது. 



அடுத்து என்ன மாதிரியான திட்டங்களில் ‘தி இந்து’ இறங்கும்?


 
பேசிக்கொண்டிருக்கிறோம். தென்னக மொழிகளிலிருந்து வரிசையாகத் தொடரலாம். 



சரி, பத்திரிகையாளர் பார்வையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இந்தியாவைப் பார்த்திருக்கிறீர்கள். இந்தியாவின் பலம், பலவீனம், அது எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?


 
பலம் - சோதனைகளுக்கு நடுவிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நாம் வளர்ந்துகொண்டிருப்பது. பலவீனம் - சமத்துவமின்மை; பாகுபாடு; அதனால் விளைந்திருக்கும் வறுமை. மிக அடிப்படையான தேவைகள் கல்வியும் மருத்துவமும். இங்கு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைக்கும் கல்வி, மருத்துவ வசதிகளை ஒப்பிடுங்கள். எவ்வளவு பெரிய வேறுபாடு? இந்தப் பிளவுதான் நம் முன் இருக்கும் பெரும் சவால் என்று நினைக்கிறேன். 


இந்திய வரலாற்றில் நடந்த மாபெரும் வரலாற்றுத் தவறு என்று எதைச் சொல்வீர்கள்?

 
இந்திரா பிரகடனப்படுத்திய நெருக்கடிநிலை. 



சமகாலத்துக்கு வருவோம். மோடி X ராகுல்: உங்கள் கருத்து என்ன? மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுமா?


 
மோசமான சூழல். தேர்தலில் என்னவாகும் என்று கேட்டால், காங்கிரஸின் ஊழல்கள், மோசமான கொள்கைகளின் விளைவாக, பந்தயத்தில் மோடி முந்தலாம்; ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா என்று கேட்டால், எனக்கு ஆழமான சந்தேகம்தான். 



மோடியின் பேரலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூழும் என்று பலரும் ஆரூடம் கூறும் நிலையில், நீங்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். மோடி ஏன் கூடாது என்று நினைக்கிறீர்கள்?


 
சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது. அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான் ‘விகாஸ் புருஷ்’ அல்லது ‘வளர்ச்சியின் நாயகன்’ படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. 



2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும். 



ஒருபுறம் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது; இன்னொரு பக்கம் பா.ஜ.க-வையும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், இடதுசாரிகள் எப்படி வலுவாக இருக்க வேண்டும்? ஆனால், அவர்களோ காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் இடதுசாரியாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 
இடதுசாரி இயக்கம் என்பது, எந்நேரமும் வேட்டையாடப்படும் அபாயத்தின் நடுவே செயல்படுவதுதான். வெற்றிகள், தோல்விகள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் எல்லாம் இடதுசாரிகளுக்கு சகஜமானவை. அதேசமயம், இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது. ஆனால், இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்றும் இந்தியாவில் ஒருநாள் இடதுசாரிகள் மாபெரும் சக்தியாக உருவெடுப்போம் என்றும் உறுதியாக நம்புகிறேன். 


உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி; ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? 


 
இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஓர் உண்மை தெரியுமா? இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி இந்திய அளவில் வேறு எந்தப் பத்திரிகையைவிடவும் அதிகமாக எழுதியிருப்பது ‘தி இந்து’தான். அதிலும் 1983 இனப்படுகொலைக்குப் பின், தமிழ் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளையும் தமிழர் போராட்டங்களையும்பற்றி விரிவான செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தி இந்து’ வெளியிட்டிருக்கிறது. 


நானும் டி.எஸ். சுப்பிரமணியனும் சேர்ந்து எடுத்த பிரபாகரனின் விரிவான பேட்டி இந்திய அளவில் பேசப்பட்ட ஒன்று. ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது ‘தி இந்து’ செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார். நான் கொழும்பு சென்று ஜெயவர்த்தனேவுடன் பேசினேன்; சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் குரல் எழுப்பினோம்; அவர் விடுவிக்கப்பட்டார். இவை எல்லாம் வரலாறு. 


விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடு தான் அணுகினோம்; அவர்களுடைய நியாயங்களை எழுதினோம். ஆனால், ரொம்ப சீக்கிரமே அவர்கள் மிகக் குரூரமாகத் தங்கள் முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக் குழுக்கள், போராட்டத் தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள். பின், வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்து விட்டன. உண்மையில், பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட். 



துப்பாக்கிகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்திலோ இல்லை. ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது. தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை… புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள். புலிகள் எதிர்ப்பு என்பது எப்படி இலங்கைத் தமிழர்கள் அல்லது தமிழ் விரோதப் போக்காகும்?
இலங்கைப் பிரச்சினை மட்டும் அல்ல; காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் பெரிய அளவிலான கவனம் கொடுக்கவே செய்திருக்கிறோம். ஆனால், எது உண்மையில் சாத்தியமோ, எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம். போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை. 



புலிகள் எதிர்ப்புதான் தமிழீழ எதிர்ப்பாகவும் உருவெடுத்ததா? 

 
இல்லை. தொடக்கம் முதலே ‘தி இந்து’ தனித் தமிழீழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.



தமிழீழம் சாத்தியம் இல்லை; நல்லது இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? 



அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை. 



அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல. 



உங்கள் நண்பர் ராஜபக்‌ஷ முன்னெடுத்த இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் போர்க் குற்றங்கள் நடந்ததும் இப்போது அம்பலமாகிவிட்டது. என்ன சொல்கிறீர்கள்? 


 
போர்களை ஆதரிப்பவன் அல்ல நான். முன்னரே சொன்னேன் – பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன் என்று. இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க ராஜபக்‌ஷ தயக்கமின்றிச் செயல்பட வேண்டும். அதேசமயம், இந்த விவகாரம் மட்டும் பிரதானம் இல்லை; மீள்கட்டமைப்பும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வும் வேண்டும். அவைதான் தமிழர்களின் எதிர்கால நலனை நிர்ணயிக்கும். 



ஒரு காலத்தில் திராவிட நாடு கோரிக்கை இங்கு இருந்தது; அந்த அளவில் இல்லாவிட்டாலும், தனித் தமிழ்நாடு கோரிக்கை இன்றும் உயிரோடு இருக்கிறது. பிராந்திய உணர்வுகள் மேலெழும் சூழலில், இன்னும் நூறாண்டுகளுக்குப் பின் தமிழகம் எப்படி இருக்கும்; இந்தியா எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

 
கற்பனைக்கு அப்பாற்பட்ட கேள்வி இது. எப்படி இருக்கும் என்பதைவிட, எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லலாம். ஏழை - பணக்காரர் பிளவுகள் அற்ற மக்கள் நலன் பேணும் நாடாக இந்தியாவும் அதன் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 


- தொடர்புக்கு: [email protected] 

படம்: ம.பிரபு 

 
thanx - thamil hindu,

readers views


  • மாமல்லன்
    உங்கள் நண்பன் ராஜபட்ஷே, எனில்,பகைவர் தமிழராகத்தான் இருக்கமுடியும், உங்களிடம் தமிழர்கள் எதிர்பார்க்க எதுவும் இல்லை. தமிழர்களுக்கு நீங்கள் செய்ய எதுவும் இல்லை.
    about 10 hours ago ·   (42) ·   (9) ·  reply (0)
    Ilangumaran  · Anandg  · selvasundaram Balasubramanian · nsathasivan   Up Voted மாமல்லன் 's comment
    R.Subramanian  · மட்டை ஊறுகாய்  Down Voted மாமல்லன் 's comment
  • perumal M
    தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கு உருப்படியான பதில் இல்லை! 2G ஊழலை நியாப்படுத்தும் ராமிற்கு, தனித் தமிழ் ஈழம் பற்றிப் பேச தார்மிகத் தகுதி இல்லை!
    about 10 hours ago ·   (4) ·   (1) ·  reply (0)
    கொற்றவன் Kotravan  Up Voted perumal M's comment
  • A.SESHAGIRI
    அருமையான இருபது கேள்விகள் அதற்கு ஒரு பிரதான பத்திரிகையை சேர்ந்த ஒரு திறமையான ஆசிரியரின் கூடுமானவரை நியாயமான பதில்கள்.கீழே குறிபிட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை த்தவிர கேள்வி 14 க்கான பதில் : மோதியை பற்றிய ஒரு மிகவும் பாரபட்சமான ஒரு இடது சாரிக்கட்சி பிரதிநிதியின் அவலக்குரல். கேள்வி 15 க்கான பதில் : ஒரு அவலமான இடது சாரிக்கட்சி பிரதிநிதியின் "பகல் கனவு" (ஒரு நாளும் பலிக்க போவதில்லை)
    about 10 hours ago ·   (3) ·   (5) ·  reply (0)
    Anandg   Up Voted A.SESHAGIRI 's comment
  • Ruknudeen
    திரு ராம் அவர்களின் எண்ணம் போல் மதவாதமற்ற ஏழை - பணக்காரர் பிளவுகள் அற்ற மக்கள் நலன் பேணும் நாடாக இந்தியாவும் அதன் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்க வேண்டும் என எல்லோரும் பாடுபடுவோம்.
    about 10 hours ago ·   (6) ·   (1) ·  reply (0)
    Siva Krish  Up Voted Ruknudeen 's comment
    கொற்றவன் Kotravan  Down Voted Ruknudeen 's comment
  • Siva Krish
    கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. துல்லியமாகவும் இருக்கின்றன.
    about 10 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
  • கொள்ளுமேடுசிராஜ்
    நன்றிராம் சார்! மிக அழகான நேர்த்தியான பேட்டி. தி இந்து தமிழ் மிகவும் தாமதமாக வெளிவந்துள்ளதாக நினைக்கிறேன், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்பதிப்பை வெளியாக்கி இருக்கும். தாமதமான முயற்சி என்றாலும் நல்ல முயற்சி! தி இந்து தமிழ் தொடர்ந்து நடுநிலையான செய்திகளைத்தரவேண்டும் என்ற பேராவலோடு, கொள்ளுமேடுசிராஜ். சவுதிஅரேபியா!
    about 9 hours ago ·   (3) ·   (1) ·  reply (0)
  • RRavi Ravi Poet at Poetry
    இந்து என் . இராம் நேர்முகமும் ! எனது கருத்தும் ! கவிஞர் இரா .இரவி ! பத்திரிக்கை கையில் உள்ளது என்ற எண்ணத்தில் எதுவேண்டுமானாலும் எழுதலாம் .பேசலாம் என்று துணிந்து விட்டார் .இனி தனி ஈழத்திற்கு எதிராக யார் பேசினாலும், எழுதினாலும் தமிழக மக்கள் அவர்களை மனங்களில் இருந்து தூக்கி எறிவார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் . தமிழக மக்கள் மட்டுமல்ல உலகம் எங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களும் யார் தனி ஈழத்திற்கு எதிராக பேசினாலும் ,எழுதினாலும் அவர்களை மனங்களில் இருந்து தூக்கி எறிவார்கள் எனது உறுதி .உறங்கிய தமிழர்கள் அனைவரும் விழித்து விட்டனர் .இனி உங்கள் நாடகம் எடுபடாது .திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள் !
    about 9 hours ago ·   (13) ·   (3) ·  reply (0)
    samsudeen   Down Voted RRavi Ravi's comment
  • Sahabudeen Abdul Samad Distribution at Canadian University of Dubai
    உண்மையை உண்மையாக எழுதுங்கள், அதில்தான் தி ஹிந்துவின் தனித்தன்மை இருக்கிறது, சாதாரண மக்கள் நீதிமன்ற தீர்ப்புகளைவிட, தி ஹிந்துவில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்துதான் ஒவ்வொரு நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்கிறார்கள், உங்களது பேட்டி நிதர்சனமான உண்மையை தெளிவுபடுத்துகிறது, உங்களது இந்த வெற்றி பயணம் தொடர என் மனதார வாழ்த்துக்கள்.
    about 9 hours ago ·   (1) ·   (1) ·  reply (1)
    Siva Krish  Up Voted Sahabudeen Abdul Samad's comment
    samsudeen   Down Voted Sahabudeen Abdul Samad's comment
    • BHARATH
      தங்கள் கருத்தை இப்படி கூறலாம் என்று கருதுகிறேன். நீதி மன்ற தீர்ப்பை தி ஹிந்துவில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்துதான் தெரிந்து கொள்கிறார்கள், ஏனென்றல் நீதிமன்ற தீர்ப்பை வீட என்றல் ஹிந்து நீதிமன்றத்தை வீட பெரிய இடமாக வருகிறது.
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • kkrishnaswamy
    இதை பற்றி எல்லாம் சாதாரண மக்களுக்கு என்ன கவலை.ஆ.cc . ரூமில் உட்கார்ந்து கொண்டு இதை பற்றி பேசலாம்.அனால்,ஆம் ஆத்மி கட்சி போல் உடனடி நடவடிக்கை தேவை.அதைசெய்யும் கட்சிக்கு மக்கள் வோட்டு போடா தயாரகி விட்டார்கள்.அதை பற்றி பேசுவோம் ராமு சார். மின்சாரம்.தண்ணீர்,சாப்பாடு கல்வி சாராயம்,பஸ்,ரயில்டிச்கேட்கள்,இதெல்லாம் விலை குறையனும்.இது தான் சாதாரன் மக்கள் வேண்டுவது. மேல் தட்டு மக்கள் வோட்டு போடவருவதில்லை.அவர்களை பற்றியே பேசுகிறீர்கள். காலம் மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது..இனி வோட்டு போடுபவனை ஏமாற்ற முடியாது.
    about 9 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
    கொற்றவன் Kotravan  Down Voted kkrishnaswamy 's comment
  • arul
    from today .i never read hindu
    about 9 hours ago ·   (2) ·   (0) ·  reply (1)
    BHARATH   Up Voted arul 's comment
    • Sahabudeen Abdul Samad Distribution at Canadian University of Dubai
      எப்படிங்க படிக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள், அதாவது கண்ணை மூடாமல் தூங்குவது போல்.
      about 9 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Sarav
    "இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம்." Does this guy still has heart !!! Ohhh God.. thank you...
    about 9 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • கொற்றவன் Kotravan
    சிறிலங்க இரத்தின நாளேடு இப்படி சொல்லாவிடில் தான் அது வியப்பிற்கு உரியது.சரி இன்றைய இந்தியாவில் கையூட்டும் சுரண்டலும் ஊழலும் இருக்கிறதுஅது போல பிரித்தானிய இந்தியாவில் சுரண்டல் இருந்தது.இன்றைய இந்தியாவில் இருப்பது போல வடகிழக்கில் AFSPA சட்டத்தின் ஊடாக தரை படை ஆட்சி,காசுமீரில் அதே சட்டத்தின் ஊடக தரைப்படை ஆட்சி, நில நீர் வளங்களை அரசே பன்னாட்டு நிறுவன்ங்களுக்கு தந்து பாழ்படுத்தல்,அணு உலைகளை மக்கள் மீது திணித்தல், மைய இந்தாவில் பன்னாட்டு நிறுவனங்களில் சுரண்டல் நலனுக்காக இந்திய அரசே பழங்குடி மக்களை தன் படைகளை கொண்டு அழித்தல் போன்றவை எல்லாம் பிரித்தானிய இந்தியாவில் இல்லை.ஆக இந்தியர்கள் வெறும் பிரித்தானிய சுரண்டலை சுட்டிக்காட்டி பிரித்திசு பேரரசிடம் இருந்து பிரிவினையை கோரியதும் 'இனயியமா'[RACISM] என்று தீ இந்து விளக்குமா!? என் கருத்தை தீ இந்து பதிவிடும் என்று எனக்கு தோன்றவில்லை.மீறி பதிவிட்டால் நன்னை நடுநிலையாராக காட்டிக்கொள்ளவே அது பதிவிடப்படும்.
    about 9 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • ravi,n
    அய்யா இந்து ராம் இந்தியாவின் வெளியுறவுத்துறையின் முகமாக பேசுகிறார். ஈழத்தமிழர் கிழக்கு மாகணத்தில் இவர் கூறுவதுபோல் மூன்றில் ஒருபங்கினராக குறைந்து போனதற்கு காரணம் யார் ? புலிகளா? இலங்கையின் இன ஒழிப்பும் இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு தமிழர்களை பலி தரும் காட்டுமிராண்டித்தனமும் தமிழ் நாட்டு தமிழர்களின் பினத்தன்மையும் தானே காரணம். இவரும் ஒரு தமிழ் நாட்டு தமிழர் தானே ?
    about 9 hours ago ·   (4) ·   (2) ·  reply (1)
    ஜெகன்   Up Voted ravi,n 's comment
    Sahabudeen Abdul Samad  Down Voted ravi,n 's comment
    • ஜெகன்
      கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்ததற்கு இலங்கை அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களே காரணம். இந்த நிலை தொடர்ந்தால் வடக்கிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாவார்கள் இன்னும் 5௦ ஆண்டுகளில்.
      about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • baskaran Ram
    தி இந்துவின் கொள்கை : 1) இந்துமத எதிர்ப்பு 2) மோடி எதிர்ப்பு 3) இஸ்லாமிய சார்பு !வேடிக்கை என்னவென்றால் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஆதரிப்பார். அவரை ஆந்திர எல்லையில் சென்று வரவேற்பார். இடதுசாரி என்று தோள்தட்டிக் கொள்வார் !காங்கிரசும் , கம்யூனிஸ்ட்களும் ,திராவிடக் கட்சிகளும் முஸ்லிம் தீவிரவாதக் கட்சிகளோடு கூட்டு சேர்வார்கள். அது மதவாதம் இல்லை.மோடியும் பி.ஜே.பி யும் தான் மதவாதக் கட்சிகள் 1
    about 9 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • baskaran Ram
    டிராபிக் ராமசாமி தனியாளாகச் செயல்பட இயலாது. ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து திராவிடக் கட்சிகளை ஒழிக்கலாம் !
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Ilangumaran
    பிரபாகரன் ஒரு போராளி ... அரசியல்வாதி அல்ல..... ஈழ விடுதலை இயக்கங்கள் ஏன் ஆயுத போராட்டத்தில் இறங்கியது, எவ்வளவு இன்னல்களுக்கு பின்னர் இந்த பாதைக்கு திரும்பியது, என்ற போராட்ட வரலாறு தெரிந்த ஆசிரியர் ராம் அவர்கள் பேட்டி நெருடலாக இல்லையா ... புலிகளை ஏன் ஆதரிக்கவில்லை என்பதற்கு ராம் அவர்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல ....... சகோதர இயக்கங்களை அழித்ததற்கும், ஏன் ராஜீவ் அவர்கள் கொலைக்கும் கூட போராளிகளுக்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது அல்லவா ..... இன விடுதலை என்பது பிச்சையாக பெறுவது அல்ல ... அதனை புலிகள் விரும்பியதும் இல்லை .... என்பது தான் அவர்கள் போரிட்ட / அழிந்த முறை நமக்கு உணர்த்தும் செய்தி. இது ராம் அவர்களுக்கு ஏற்புடையதா இல்லையா என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் பத்திரிகை என்கிற ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் மூலம் அது பரப்பப்படும் போது அது விமர்சனத்திற்கு உட்பட்டது.
    about 8 hours ago ·   (3) ·   (1) ·  reply (1)
    selvasundaram Balasubramanian  Up Voted Ilangumaran 's comment
    மட்டை ஊறுகாய்  Down Voted Ilangumaran 's comment
    • A.SESHAGIRI
      'போராளி' என்றால் தன்னை சார்ந்தவரையும் இழக்க செய்து,தன்னையும் இழந்தால் அதனால் யாருக்கு என்ன பயன்? இதற்கு பெயர் நிச்சயமாக 'போராளி' என்று இருக்க முடியாது.
      about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Devabalan
    ராம் அவர்களின் பேட்டி அவரின் பக்குவம் அற்ற சிந்தனையும் மிகை படுத்தப்பட அவரது ஞானமும் வெளிப்பட்டு விட்டது, அவர் பேட்டி அவரது முரணான சிந்தனையை வெளிபடுத்தும் வண்ணம் உள்ளது, மோடியை பிரிவினை சக்தி என்று கருதும் அவர் ராஜபக்ஷே அவர்களை ஜனநாயக காவலன் மற்றும் அகிம்சையின் தூதுவன் ஏன கருதி அவருடன் நட்பு பாராட்டுகின்றரோ? தமிழர்கள் இன வாதிகள் என்றால் போர் முடிந்த உடன் அரசியல் தீர்வு என்று எழுதிய ராம் அவர்கள் இன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் தேவை இல்லை இன்று கூறும் அவரது நண்பர் ராஜபகஷே கருத்து பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே ? இந்து பத்திரிகையின் உதவியோ அல்லது ராம் அவர்களின் ஆதரவை எதிர் பார்த்தோ ஈழ விடுதலை துவங்க பட்டது அல்ல ஆதலால் அவரது இடது சாரி கனவை போலவே ஈழம் சாத்யம் அல்ல என்பதும் பகல் கனவாகவே போகும். ராம் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டிலாவது அவரது தமிழ் இன எதிர்ப்புணர்வு குறையட்டும் ஆனால் நல்ல வேலையாக தன்னை இடதுசாரி இன்று கூறிகொண்டவர் நானும் ஒரு தமிழன் தான் என்று சொல்லவில்லையே ! தமிழர்களை கொஞ்சமாது வாழ விடுங்கப்பா !
    about 8 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • Ilangumaran
    பிரபாகரன் ஒரு போராளி ... அரசியல்வாதி அல்ல..... ஈழ விடுதலை இயக்கங்கள் ஏன் ஆயுத போராட்டத்தில் இறங்கியது, எவ்வளவு இன்னல்களுக்கு பின்னர் இந்த பாதைக்கு திரும்பியது, என்ற போராட்ட வரலாறு தெரிந்த ஆசிரியர் ராம் அவர்கள் பேட்டி நெருடலாக இல்லையா ... புலிகளை ஏன் ஆதரிக்கவில்லை என்பதற்கு ராம் அவர்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல சகோதர இயக்கங்களை அழித்ததற்கும், ஏன் ராஜீவ் அவர்கள் கொலைக்கும் கூட போராளிகளுக்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது அல்லவா ..... இன விடுதலை என்பது பிச்சையாக பெறுவது அல்ல ... அதனை புலிகள் விரும்பியதும் இல்லை .... என்பது தான் அவர்கள் போரிட்ட / அழிந்த முறை நமக்கு உணர்த்தும் செய்தி ... இது ராம் அவர்களுக்கு இந்த முறை ஏற்புடையதா இல்லையா என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் சக்தி வாய்ந்த ஊடகம் மூலம் பரப்புதல் செய்யப்படும் போது உண்மை நிலையை மறைத்து அது உண்டாக்கும் பாதங்கள் பல ... இதுவும் ஒரு வகையான தமிழின எதிர்ப்பு நிலைப்பாடே ......
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • தமிழ்நுட்பத் தம்பி கார்த்திக் Co-Founder/CEO at Blaze Web Services
    இந்தியாவில் தமிழ் ஈழத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் ஊடகத்தில் செய்த இவருக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது கொடுத்துள்ளது . விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் (2013 ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் தீவிரவாதி எனும் சொல் அரசுகளின் பிராந்திய நலன் சார்ந்து சூட்டப்படும் ஒரு சொல். ஆயுதம் ஏந்தி விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் நெல்சன் மண்டேலாவின் விடுதலை அமைப்பும் தீவிரவாதி தான் என சொல்லியுள்ளது. ஒரு அமைப்பின் ஒரு சில நிகழ்வுகள் மட்டும் வைத்து அதை தீவிரவாத அமைப்பு .என சொல்ல முடியாது.) அதே வேளையில், பொது மக்களிடம் இராஜீவ் காந்தியை கொன்றதால் தமிழர்கள் சாவது தப்பில்லை என நினைக்கும் வண்ணம் ராம் எழுதி வருகிறார். அதே வேளையில் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு இந்து RSS என்பதால் அணைத்து இந்துக்களையும் கொல்லலாமா??? சொல்லுங்கள் ராம் அவர்களே! ஐரோப்பாவில் எந்த அடிபடையில் அத்தனை நாடுகள் உள்ளன? கொரியா, ஜப்பான் போன்ற மிகச் சிறிய நாடுகள் தங்கள் தாய்மொழியை மட்டும் வைத்தே உலகை தங்களின் வளத்தை பெருக்கியுள்ளன.
    about 8 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • R.Subramanian
    பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட் இதை சொல்ல ஒரு நேர்மையான துணிச்சல் வேண்டும் அது ராம் அவர்களிடம் உள்ளது. சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்திற்காக தான் பல ஆயிரம் பேர் பிரபாகரன் என்ற தனி மனிதனின் அதிகார பசிக்காக பலியிடபட்டார்கள் ஆனால் ஏற்கும் மனநிலை பலரிடம் இல்லை.
    about 8 hours ago ·   (5) ·   (1) ·  reply (0)
    மட்டை ஊறுகாய்  Up Voted R.Subramanian 's comment
    Sivasankaran   Down Voted R.Subramanian 's comment
  • BHARATH
    நன்றி சார் ரொம்ப அருமையான உங்கள் வார்த்தைகள். ஒரு சில பொது ஜனமாகிய(அரசியல் சார்பற்ற) எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நீங்கள் அகில உலகமும் சென்று வந்தவர். உண்மையில் உங்கள மனம் திறந்து கூறுங்கள் இங்கே சிறுபான்மையினர் பெரும் சுதந்திரம் வேறு எங்காவது அவர்கள் இதுபோல் சுதந்திரமாக இருக்க முடியும் என்று. அதே போல் மோடியை பற்றி தவறான கருத்தை கூறுகிறீர்கள். உண்மையில் கூறுங்கள் நீங்கள் அவருடைய நிர்வாக திறமையையும் பார்கிறீர்கள். அவருடைய நிர்வாகம் சிறந்த நிர்வாகமா இல்லையா. இங்கே மோடி பெயரை கேட்டாலே குதிக்கும் ஒரு சில நபர்கள். குஜராத்தில் இருக்கும் அவர்கள் மக்களை கேட்டு பார்க்க சொல்லுங்கள். இன்று மோடி குஜராத்தில் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றல் அங்குள்ள சிறுபான்மையின மக்களும் வோட்டு போட்டு தான் தேர்டுதிருக்கப்பட்டிருக்கிறார். அங்கெ கிராம டவுன் பஞ்சாயத்தில் சிறுபான்மையினர் மிக அருமையாக நிர்வாகம் நடத்துகிறார்கள்.
    about 7 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • BHARATH
    மோடி பீஎமாக வர முடியாது என்று கூறுகிறீர்கள். அப்படியே ஒருக்கால் (சந்திரன் தெற்கே தோன்றினால்) மோடி வரவில்லை என்றல் வேறு யார் வர முடியும் ஒரு ஐந்து வருடம் நிலைத்து நிர்க முடியும் என்று கூறுங்கள். ஐந்து வருடம் காங்கிரஸ் பிஜேபி யை தவிர யாரும் பீஎமாக தொடர்ந்து இருந்ததாக தெரியவில்லை. ஒருக்கால் வேறு யாரவது பீஎமாக வந்தால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திலேயே மீண்டும் தேர்தல். வளரும் இந்தியாவுக்கு இது ஒரு பெரும் சுமை மற்றும் செலவு. உங்களுகென்ன உங்கள் பத்திரிக்கைக்கு 50பைச அல்லது 1ருபை கூடிவிடுவீர்கள். பாதிக்கப்படுவது நாங்கள் தானே ஏனென்றல் உங்கள் பத்திரிக்கையை படிக்காமல் இருக்கமுடியாதே. எனவே சூல் நிலைக்கேற்ப நாம் மாறுவதில் தவறு இல்லை. கட்சி, மதம் சார்பற்று பொது மக்கள் என்ற முறையில் கூறுகிறோம் இப்போது உள்ள சூல்நியைல் திரு மோடியே சரியான தேர்வாக இருக்கும்.
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • ப. சுகுமார்
    "இறுதிககட்ட போரில் மனித உரிமை மீறல் பெரும் துயரம்..." என்று சொல்லும் ராம் அவர்கள் - உலக நாடுகளே ராஜபக்ஷே வின் இனப் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வேலையில் - அதற்கு ராஜபக்ஷே வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கை. சர்வதேச நியாயமான நீதி விசாரணைக்கு ராஜபக்ஷே உட்படுவதே நியாயமானது. ராம் போன்றவர்கள் தயவு செய்து ராஜபக்ஷே வுக்கு பல்லக்கு தூக்க வேண்டாம். வரலாறு மன்னிக்காது.
    about 7 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • கொள்ளுமேடு ரிஃபாயி
    ஈழத்தமிழர் விவகாரத்தில் ராஜபக்ஷே நடத்திய அக்கிரமங்களை ஏன் ராம் கண்டிக்க மறுக்கிறார்...? மோடியை விமர்சிக்கும் அவர் ராஜபக்ஷேவை நண்பராக நினைப்பது வினோதம்.ராஜபக்ஷேவும் மோடியும் ஒன்னு தான் என்று சொல்ல முடியாதவர்கள் தம்மை நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது.
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • jayenness
    பிரபாகரனின் அணுகுமுறை தவறாய் இருக்கலாம். தவறுதான். ஆனால் அப்பாவித்தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்கள் bait ஆக உபயோகப்படுத்தபட்டார்கள். அதற்காக அவர்களை கொன்றுகுவித்தது என்ன நியாயம். ஒரு தவறு, மற்றொரு தவறை நியாயப்படுத்தாது. உயர்பதவியில் உள்ள ராஜபக்சே மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டாமா? அப்புறம் பிரபாகரனுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம். பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட் என்றால், ராஜபக்சே ஒரு ஹிட்லர். ராமின் பதில் இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமானது. அதைப்போலத்தான் மோடியைப்பற்றியும் அவர் சொல்லியிருப்பது. ஜனநாயகத்தில் ஒருவரை இப்படித்தான் என்று முத்திரை குத்தமுடியாது. இந்திரா காந்தி, எமெர்ஜென்சி கொண்டுவந்தது அராஜகம். ஆனால் அவர் மறுமுறை தேர்ந்து எடுக்கப்படவில்லையா? ராம், மோடியின் தேர்வு அபாயகரமாநா தையிருக்கும் என்று சொல்ல்வாதேல்லாம் ரொம்ப ஓவர்.
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • R
    "ஏழை - பணக்காரர் பிளவுகள் அற்ற மக்கள் நலன் பேணும் நாடாக இந்தியாவும் அதன் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." - ஆசிரியரின் இந்த பதிலை படித்தவுடன் என் கண்ணில் நீர் வந்துவிட்டது. அந்த ஒரு நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிறேன். இரண்டாவதாக, மோடி பற்றிய கருத்து ஏற்புடையதல்ல. எனினும், என்றாவது ஒரு நாள் புலிகளை காலம் தாழ்ந்து கொண்டாற்போல், மோடி அவர்களையும் புரிந்து கொள்வார் என நம்புகிறோம்.
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • முருகன் தில்லைநாயகம்
    கருத்து விறுவிறுப்பாக இருந்தது.தெளிவான கண்ணோட்டம்.
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • padmanaban
    சமுதாயத்தில் பத்ரிகையின் கடமை என்பது செய்திகளை தெரிவிப்பது மட்டும் தான், தனி மனிதர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப செய்திகளை வெளிடுவது பத்ரிகை தர்மம் ஆகாது. ஹிந்து, திபெத் மற்றும் இலங்கை விசயத்தில் தனிப்பட்ட கொள்கை கொண்டதாகவே என்றும் உள்ளது. செய்திகளை வெளியிடுங்கள் ,உங்கள் கொள்கை ஒத்தவர்களின் கருத்துக்களை வெளியிடுங்கள், திணிக்காதீர்கள். பின்னர் அரசியல் சார்பு ஊடகங்குளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • அபுபஹீம்
    சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் /////////அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது. அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான் ‘விகாஸ் புருஷ்’ அல்லது ‘வளர்ச்சியின் நாயகன்’ படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.///// கார்பொரேட் மீடியாக்களின் மோடி மையை யை உடைத்து தெளிவான சிந்தனையோடு அருமையான கருத்தை திரு.ஏன்.ராம் அவர்கள் முன்வைத்திருக்கிறார் வாழ்த்துக்கள்!!!!