சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருக்கிறார்கள் ஜிவா, வினய், சந்தானம். விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்கள். திருமணமே செய்துக் கொள்ள மாட்டோம் என்ற முடிவில் இருக்கும் இவர்களது வாழ்க்கையில், விளம்பர பட சம்பந்தமாக த்ரிஷா நுழைய, சபதம் என்னவாகிறது என்பதே கதை.
படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிகவும் கலர் ஃபுல்லாக இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவு செய்திருக்கும் மதி. குறிப்பாக, மாடியின் விளிம்பில் ஜிவா அமர்ந்திருக்கும் போது த்ரிஷா பேசும் காட்சி. மதிக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.
ஜிவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆண்ட்ரியா அனைவருமே தங்களது பணியை அருமையாக செய்திருக்கிறார்கள். ஜிவா - த்ரிஷா இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளை இயக்குநர் அஹ்மத் கையாண்டு இருக்கும் விதம் அழகு.
நீண்ட நாட்கள் கழித்து சந்தானத்தின் காமெடிக்கு சிரிக்க முடிகிறது. இடைவேளைக்கு முன் நண்பர்களோடு சேர்ந்து கலாய்ப்பதும், இடைவேளைக்குப் பின் மனைவியிடம் இவர் மாட்டிக் கொள்வதும் என சந்தானம் இஸ் பேக்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. ஓஹோ ப்ரியா.. ப்ரியா பாடலும், அதனை காட்சிப்படுத்திருப்பதும் அழகு.
படத்தின் பலவீனம் என்றால், அம்மா இன்னொருவருடன் ஓடிவிட்டதால் ஜிவா பெண்கள் என்றாலே அலர்ஜி என்பதும், ஜிவா - நாசர் இருவரும் ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என்பதற்கான காரணமும் சரியாக கையாளப்படவில்லை. 2:31 மணி நேரம் படம் என்பதால் இடைவேளைக்குப் பின் படம் எப்போது முடியும் என்று நினைக்க வைக்கிறது.
மொத்தத்தில், படம் முடிவடையும் போது சிறு புன்னகையோடு கடந்து போக வைக்கிறது இந்த ’என்றென்றும் புன்னகை'
நன்றி - த தமிழ் ஹிந்து