Tuesday, December 10, 2013

விடியும் முன்.-சினிமா விமர்சனம்

 

கதையில் நல்ல கதை நொள்ள கதை என்று எதுவும் கிடையாது. கதை சொல்பவன் சொல்லும் விதத்தில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது - ரேடியோ மிர்ச்சியில் இயக்குனர் பாலாஜி கே.குமார் கூறியது இது. 


பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களில் தோன்றி, அருண் வைத்தியநாதன் அச்சமுண்டு அச்சமுண்டு, நடுநிசி நாய்கள், பொம்மலாட்டம் இப்படி பல படங்களில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றிய கதைக்களம் கையாளப்பட்டுள்ளது. 


விடியும் முன்... தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை என்று இப்படத்தை சித்தரிப்பது தவறு, ஆனால் தமிழ் சினிமாவில் கண்டிராத ஒரு 'விவரிப்பு' இப்படத்தில் அமைந்திருந்தது. 


பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு கதைக்களம் அமைக்கப்படும்போது, இயக்குனர்க்கு பல கடமைகள் எழுகின்றது குறிப்பாக ஒரு சிறுமிக்கு நடந்தவற்றை திரையில் சித்தரிக்கும்போது உணர்ச்சியையும் தெரிவிக்க வேண்டும், அதே சமயம் ஆபாசமாக காட்சியை தோன்ற வைக்கக் கூடாது. இப்படத்தில் அந்த நூல்வெளியை சிதறாமல் அமைத்ததற்கு இயக்குனர் பாராட்டு பெறுகிறார். 


'விடியும் முன்'னை பொறுத்தவரை, அற்புதமாக அமைந்திருந்தது சிவகுமாரின் ஒளிப்பதிவு. க்ளோஸ் அப் லாங் ஷாட் அமைத்திருந்த விதம், காட்சிகளுக்கான கலர் டோன், லொகேஷன் எல்லாம் சபாஷ் போட வைத்தது. 


படத்தின் பெரிய பலமும், பலகீனமும் ஒரே விஷயம்தான் என்றால் நம்ப முடியுமா? காட்சிக்கு கொடுக்கப்பட்ட டீடைலிங் தான் படத்தின் பலம். ஆனால், அதுவே சில இடங்களில் மிகையாக தோன்ற வைத்துள்ளது. 


'நான் மகான் அல்ல' வினோத் முதலில் தோன்றுகையில் silhoutte ஷாட்டில் பில்ட் அப் விடுகின்றனர். முதல் காட்சிக்கு பில்ட்அப் ஒகே அதுக்காக காட்சிக்கு காட்சி பில்ட்அப் விடுவது ஷ்ஷப்பா என்ற சலிப்பை தருகிறது. பூஜா பேசும் வசனங்கள் ஐந்து நிமிட காட்சிக்கு மேலும் ஐந்து நிமிடத்தை கூட்டுகிறது. படத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களும் இழுத்து இழுத்து வசனம் பேசுவதையும், ஜான் விஜய் ஓவராக உடல்மொழி காட்டுவதையும் கொஞ்சம் டிங்கரிங் செய்திருக்கலாம். 


ஆனால், நான் முன்பு கூறியது போல் இதுதான் படத்தின் பலமும் கூட, தேவையற்ற காட்சிகள் என்று கூறும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சரியான முடிவு அமைந்திருந்தது. இன்கம்ப்ளீட் ஷாட் என்று கூறும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. 


மீண்டும் மீண்டும் முன்னுக்கும் பின்னுக்குமாக பயணிக்கும் திரைக்கதையில் எதிர்ப்பார்க்க வைக்கும் தூண்டில்கள் கொஞ்சம் வளைந்தே காணப்பட்டது. பாலியல் தொழிலாளியாக பூஜா, மாடர்ன் புரோக்காராக அமரேந்திரன், சின்னய்யாவாக வினோத், குறிப்பாக ஜான் விஜய் கதாப்பாத்திரங்களின் நடிப்பும் தோற்றமும் படத்திற்கு ஈர்ப்புத் தன்மையை சேர்த்துள்ளது. 


இந்த வருடத்தில் வெளிவந்த படங்கள் பலவற்றில் சாதாரண ரகத்தில் அமைந்த அம்சம் 'பின்னணி' இசை. இப்படத்தை பொறுத்தவரை 'கிரீஷ்' பின்னணியில் ஓர் ஆழம் அமைந்திருந்தது. 


நந்தினியாக நடித்திருக்கும் சிறுமி கொஞ்சம் ஓவர் மெச்சூர் பெண்ணாக நடித்துள்ளது, கிட்டத்தட்ட உலக படங்களில் வரும் சிறுமியை போல் இவர் கதாப்பாத்திர நிறம் அமைந்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் பாட்டி போல் குழைத்து குழைத்து கேள்வி கேட்கும் சிறுமிகளை நாம் பார்ப்பத்தில்லையா என்ன? முகபாவங்களிலும், டயலாக் டெலிவரியிலும் பட்டையை கிளப்புகிறார். 
 

படத்தை த்ரில்லர் என்று கூறுவதை விட 'டார்க் டிராமா' என்று கூறுவது சரியாக இருக்கும். த்ரில்லர் படத்திற்கு தேவைப்படுகிற எங்கேஜிங் திரைக்கதை இல்லை, ஆனால் டிராமாவிற்கு தேவைப்படுகிற டீட்டெய்லிங் அமைந்திருந்தது. வசனங்களில் கொஞ்சம் செல்வராகவனின் கேங்ஸ்டர் பட சாயல்கள் வீசியது. 


படம் பார்க்கையில் சினிமாவை நன்கு தெரிந்த இயக்குனர் இயக்கிய படம் போலத்தான் தோன்றியது. இந்த வருடத்தின் முக்கிய அறிமுகத்தில் இயக்குனராக பாலாஜி குமார் அடையாளப்படுத்தப்படுவார். 


'விடியும்முன்' சில சில இடங்களில் சலிப்பை தருகிறது, சில இடங்களில் சிலிர்க்கவும் வைக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் நாம் எதிர்ப்பார்த்த ஒரு விஷயமும் நடக்கிறது, எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டும் அமைகிறது, கடைசியில் வருகின்ற பின்னணியுடன் கிளைமாக்ஸ் மனதில் ஒட்டிக் கொள்கிறது. படம் முடிக்கையில் ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம் தான் மனதில் பதிகிறது. 



16 வயதினிலே, ஆரண்ய காண்டத்தை போல் path breaking சினிமா, மைல் கல், தமிழ் சினிமாவின் விடியல் என்று இப்படத்தை கூறுவது டூ மச், ஆனால் கண்டிப்பாக ஒரு நல்ல சினிமாவை பார்த்த அனுபவம். 


a


thanx -the hindu