ஆர்யா - மகிழ் திருமேனி இணையும் படத்திற்கு 'மீகாமன்' என்று தலைப்பிட்டு
இருக்கிறார்கள். டிசம்பர் 5ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
’முன்தினம் பார்த்தேனே’, 'தடையற தாக்க' ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ்
திருமேனி. தனது அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கவிருக்கிறார். ஹிதேஷ் ஜபக்
இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார்.
தலைப்பிடாமல் இருந்த இப்படம் குறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார்
மகிழ் திருமேனி. அப்போது அவர் பேசியது, " முதலில் 'தடையற தாக்க' படம்
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதற்கு நீங்க தான் காரணம். இப்போது எனது
அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கவிருக்கிறேன்.
'மீகாமன்' என்று தலைப்பிட்டு இருக்கிறேன். தமிழில் படம் எடுக்கிறேன்,
அதனால் தான் தூய தமிழில் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறேன். 'தடையற தாக்க'
படத்தலைப்பை பார்க்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
'மீகாமன்' என்றால் மாலுமி (Captain of the Ship) என்று பொருள். தமிழில்
பெயர் வைத்து அதனை புரியவைக்க ஆங்கிலத்தில் TAGLINE போடும் சூழ்நிலை
உருவாகியுள்ளது.
கதாநாயகன் ஒரு காரியத்தை கையில் எடுத்து, அதனை எப்படி வெற்றிகரமாக
முடிக்கிறான் என்பதை ஒரு ஆக்ஷன் த்ரில்லராக கதை அமைத்திருக்கிறேன்.
ஆர்யாவின் கெட்டப்பை இப்படத்தில் மாற்றியிருக்கிறோம்.
முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து
வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 5ம் தேதி முதல் சென்னையில்
துவங்குகிறது. சென்னை, குஜராத், கோவா ஆகிய இடங்களில் கதை நகரும்." என்று
கூறினார்.
'தடையற தாக்க' படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
நன்றி- தி இந்து