Friday, November 29, 2013

மதயானைக்கூட்டம் - விழாவில் பாலுமகேந்திரா உரை

’நல்ல படங்களை எடுக்க கோடிகள் தேவையில்லை’ - பாலுமகேந்திரா

‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இவ்விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், தயாரிப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நாயகன் கதிர், நாயகி ஓவியா, இசையமைப்பாளர் ரகுநந்தன், பாடலாசிரியர் ஏகாதேசி உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்டனர். 

 மதயானைக்கூட்டம் இசை வெளியீட்டு விழா

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதாவது: 



“என்னுடைய குடும்பத்திலிருந்து இன்னுமொரு இளைஞன் இன்று இயக்குநராக பிரவேசிக்கிறான். என் படைப்பு வாழ்க்கையில் 1999, 2000 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமான காலம். நிறைவான, திருப்தியான காலகட்டம் என்றும் சொல்லலாம். ‘கதைநேரம்’ என்ற பெயரில் குறும்படங்களை இயக்கிய போது என் பக்கத்திலேயே இருந்து வெற்றிமாறன்,
விக்ரம் சுகுமாரன், சுரேஷ், கௌரி ஆகியோர் ஒத்துழைத்தார்கள். இவர்களது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் திருப்தியாக அதைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால், அடுத்த நாள் படப்பிடிப்பை, அன்று இரவு 1 மணிக்கு முடிவெடுப்பேன். அப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அப்போது என் அருகிலேயே இருந்த குழந்தைகளில் விக்ரம் சுகுமாரனும் ஒருவன். 



எங்கள் கிராமத்தில் ‘கல்யாணம் முடித்து, பிள்ளைகள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தால், தாய் தகப்பன் குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்வார்கள்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஆனால் இவர்களோடு நானும் இன்று குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறேன். படைப்பு ரீதியான குழந்தை. அதற்கான வீரியம் இருப்பதால் நானும் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதை நிறுத்திவிட்டால் என் மூச்சு நின்றுவிடும் என்று எனக்குத் தெரியும். இவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனது தோட்டத்தில் விழுந்த விதைகள் நல்ல விதைகள். அதனால் கொஞ்சம் நீர் ஊற்றியதாலேயே நன்றாக விளைந்திருக்கிறது. இவர்களை நான் உருவாக்கவில்லை. அவர்களாகவே உருவானார்கள். 



சிலர் சினிமாவை வியாபார நோக்கில் பார்க்கிறார்கள். அவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. சினிமா வியாபார பண்டம் அல்ல. நல்ல படங்கள் பண்ணுவதற்கு சில லட்சங்களே போதும். கோடிகள் தேவையில்லை. அவர்கள் வெறும் வியாபாரிகள். அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம். முழுக்க முழுக்க வியாபார பண்டமாக நினைக்கும் கூட்டத்தோடு நாம் சேர வேண்டாம். நாம் நினைத்த சினிமாவை எடுப்பதுதான் சுதந்திரம். அப்படி ஒரு படத்தை சுகுமாரனும் செய்திருப்பார். 



ஜீ.வி.பிரகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். ஜாக்கிரதையா இரு. உன்னையும் வியாபாரியாக்கி விடப்போகிறார்கள். பாரதிராஜாவும் ‘பாண்டியநாடு’ படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாராட்டுகிறார்கள். உனக்கும்தான் சொல்கிறேன். நீ தொடர்ந்து இயக்குநராகவே இருக்க வேண்டும்’’ என்றார். 



தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் பேசுகையில், “ சமீபத்தில் பல படங்கள் நல்ல படங்களாக வெளிவருகிறது. சந்தோஷமாக இருக்கிறது. சவாலாக எடுத்துக்கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. இப்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் புதிய படங்களை எடுக்கிறார்கள் 



சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை , கிட்டத்தட்ட 66 கோடி போட்டு கார்பரேட் நிறுவனங்கள் எடுத்திருக்கிறார்கள். வெளியே திறமையோடு பல உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம். அதுபோன்ற படங்களை கார்ப்பரேட்டுகள் எடுக்க முன்வரக்கூடாது. அதனை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம். தொடர்ந்து கார்பரேட் கம்பெனிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சங்கங்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என்றார். 



இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ‘‘ஜீ.வி.பிரகாஷ் ஒரு அற்புதமான கலைஞன், அற்புதமான இளைஞன், ஒரு குழந்தை, பாசிடிவ் எண்ணம் கொண்டவன். வயதுக்கு மீறிய திறமை கொண்டவன். இந்தப்படத்தையும் சிறப்பாக எடுத்திருப்பான். புது முகங்களை அறிமுகப்படுத்துவேன் என்று வாக்கு கொடுக்கும் ஜீ.வி.பிரகாஷ் நிச்சயம் பிஸினஸ்மேன் இல்லை. அவனுடன் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே ஓவியா, பக்கத்து வீட்டு பெண்போல அழகாக நடித்திருக்கிறார்.



 பாலுவின் உதவியாளர்கள் ‘கிளாஸ்’ இயக்குநர்கள். அவரும் ‘கிளாஸ்’ இயக்குநர். என் சமகால இயக்குநர் பாலு. அவரது படங்களைப்பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன். 20 லைட்ஸ் வைத்து எடுக்க வேண்டிய சீனை 2 லைட்ஸ் வைத்து எடுப்பார். பாலு ஒரு செல்லுலாய்டு கவிஞன்’’ என்றார்.