Tuesday, November 19, 2013

காரைக்குடி-பட்டமங்கலம் - வசந்தம் ஓட்டல். (புரோட்டா கடை)

செந்தூர்வள்ளி
செந்தூர்வள்ளி-

பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்!

புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடியல். அலையடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்க்கை. நம்மில் அநேகம் பேரின் யதார்த்தம் இப்படித்தான் நகர்கிறது. செந்தூர் வள்ளியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. காரைக்குடிக்கு அருகே உள்ள பட்டமங்கலம், பிரபலமான குரு ஸ்தலம் உள்ள ஊர். இங்குள்ள வசந்தம் ஓட்டலுக்கு நாற்பது வருட பாரம்பரியம் உண்டு. பாரம்பரியத்தோடு ஏராளமான வாடிக்கையாளர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறது இந்த ஓட்டல். 



அப்படியென்ன இங்கு என்ன விசேஷம் என்கிறீர்களா.. புரோட்டா அறிமுகமான நாளில் இருந்தே இங்கு பெண்கள்தான் புரோட்டா மாஸ்டர்கள். பெண்களுக்கே உரிய கைபக்குவத்தில் புரோட்டா வீசுவதால், அதை சாப்பிடுவதற்கென்றெ பக்கத்து கிராமங்களில் இருந்து தினமும் பஸ் ஏறி வந்துவிட்டு போகிறார்கள் பலர். 



இந்த ஓட்டலில் இரண்டாம் தலைமுறை புரோட்டா மாஸ்டராக இருப்பவர் செந்தூர்வள்ளி டீச்சர். மாஸ்டர் சரி, அதென்ன டீச்சர்? படித்து வாங்கிய பட்டம்தான். ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தற்போது உள்ளூர் பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் செந்தூர்வள்ளி, வெட்கப்படாமல் தனது பாரம்பரியத் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார். 



‘‘சின்ன வயசுல, அம்மா புரோட்டா வீசுறத பாத்துருக்கோம். நாங்க யாரும் கையில மாவை எடுத்துடக் கூடாதுங்கறது அம்மாவோட பயம். ஆனா, குடும்பச் சூழல் எங்களையும் புரோட்டா வீச வைச்சிருச்சு. இன்னைக்கி நாங்க தலை நிமிர்ந்து நிக்கிறோம்னா அதுக்குக் காரணம் நாங்க பழகி வைச்சிருக்கிற இந்த புரோட்டா மாஸ்டர் தொழில்தான்’’ என்கிறார் 13 வயதில் இருந்து புரோட்டா வீசிக்கொண்டிருக்கும் செந்தூர்வள்ளி டீச்சர். அவரே தொடர்கிறார்..



பொம்பளப் புள்ளைங்க இந்த வேலையச் செய்யக் கூடாதுங்கறது அப்பா, அம்மாவோட எண்ணம். ஆனா, முடியாத வயசுல அம்மா பட்ட கஷ்டத்தைப் பார்த்துட்டு நாங்களே களத்துல இறங்கிட்டோம். கடைக்கு வெளியில புரோட்டா வீசுனாத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. அதனால கடைக்குள்ளேயே புரோட்டா வீசுனோம். கல்யாணம் ஆன பின்னாடித்தான் கடை முகப்புலேயே புரோட்டா வீச ஆரம்பிச்சோம். 



நாங்க அக்கா தங்கச்சிக நாலு பேரு. எங்களுக்கு கல்யாணம் முடிச்சது, எங்க அத்தை பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிச்சது, தம்பியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புனது எல்லாமே நாங்க புரோட்டா வீசி சம்பாதிச்ச பணத்தாலதான் சாதிக்க முடிஞ்சுது. 



இப்போ தற்காலிகமா உள்ளூர் ஸ்கூல்ல வேலை குடுத்துருக்காங்க. காலையில புரோட்டோ வீசிக் குடுத்துட்டு ஸ்கூலுக்குப் போயிருவேன். அதை எல்லாம் கல்லுல போட்டு எடுத்து வியாபாரம் பாத்துருவாங்க அக்கா. சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்ததும் மறுபடியும் கையில மாவை எடுத்துருவேன். எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா அக்காவும் புரோட்டா வீசுவாங்க. 



எங்களால முடிஞ்ச வரைக்கும் நாங்க இந்த வேலையை செஞ்சுட்டே இருப்போம்.. உறுதியாய் சொன்ன செந்தூர்வள்ளியிடம், ‘‘டீச்சருக்கு படிச்சுட்டு ஓட்டல்ல புரோட்டா வீசுறது கஷ்டமா தெரியலையா?’’ என்று கேட்டால் சிரிக்கிறார். 



‘‘இதுல கஷ்டப்பட என்ன இருக்கு? பொய் சொல்லக் கூடாது, களவாடக் கூடாது. நேர்மையா எந்தத் தொழிலைச் செய்தாலும் அது தெய்வத்துக்கு சமம். படிச்சுட்டு புரோட்டா சுத்தலாமான்னு அன்னைக்கி நான் யோசிச்சிருந்தா, இன்னைக்கி எங்க குடும்பம் கஷ்டப்படாம கஞ்சி குடிச்சிருக்க முடியாதே’’.. செந்தூர்வள்ளி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மைதாவை எடுத்து சின்னதாய் ஒரு புரோட்டா வீசிக் கொண்டிருந்தாள் அவரது ஏழு வயது மகள் தர்ஷினி ! 


thanx - the tamil hindu