Sunday, November 17, 2013

சகுந்தாவின் காதலன் -காதலில் விழுந்தேன்' ,எப்படி மனசுக்குள் வந்தாய்?'- இயக்குநர் பேட்டி

இயக்குவது தவம்! இசையமைப்பது வேள்வி!! இயக்குநர் பி.வி.பிரசாத்









முன்னோட்டம்..காதலில் விழுந்தேன்' "எப்படி மனசுக்குள் வந்தாய்?' ஆகிய படங்களை இயக்கிய பி.வி.பிரசாத் தற்போது இயக்கிவரும் படம் "சகுந்தாவின் காதலன்'. இந்தப் படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.



 டெக்னிஷியனாக இருந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியவர்கள் வரிசையில் நீங்களும் சேர்ந்து விட்டீர்களே?
 என் முந்தைய இரண்டு படங்களில் செய்த தவறுகளை இந்தப் படத்தில் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நானே கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தேன். "காதலில் விழுந்தேன்' படத்தின் கதையைக் கேட்ட பலரும், "காதலியின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு கதாநாயகன் படம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தால் படம் தேறாது. இந்தக் கதையைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் படம் எடுக்கலாம்' என்றுதான் சொன்னார்கள். ஆனால் கதையின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை காரணமாக "காதலில் விழுந்தேன்'கதையைத்தான் முதலில் இயக்குவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால்தான் என் நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தை நானே தயாரித்து இயக்கினேன்.
 முதன் முறையாக நகுலை நாயகனாகப் போட்டு "காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கினேன். படம் வெற்றிகரமாக ஓடியதும், அடுத்த படத்துக்காக நகுலிடம் பேசினால் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். எனவே நாயகன் நாயகி வேடங்களுக்கு புதுமுகங்களைப் போட்டு எனது இரண்டாவது படைப்பான "மனசுக்குள் எப்படி வந்தாய்?' படத்தை இயக்கினேன். முதல் படத்தை இயக்கியதுடன் தயாரிப்பு பொறுப்பையும் சுமந்ததால் மிகவும் டென்ஷனாக படத்தை உருவாக்க வேண்டியிருந்தது.



 எனவே தயாரிப்பு சம்மந்தமான டென்ஷன் வேண்டாம் என்றுதான் வேறு ஒரு தயாரிப்பாளருக்காக "எப்படி மனசுக்குள் வந்தாய்?' படத்தை இயக்கினேன். படத்தைத் தயாரிப்பதைவிடப் பெரிய விஷயம் அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது. மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த படத்தை இரண்டு கோடி ரூபாயாவது செலவு செய்து சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். எனது தயாரிப்பாளரால் அது முடியவில்லை. நல்ல படம் என்று படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டியும் அது வணிக ரீதியான வெற்றிப்படமாக அமையவில்லை. எனவேதான் "சகுந்தலாவின் காதலன்' என்ற மூன்றாவது படத்தை எனது சொந்தப்பட நிறுவனமான பிரசாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் நானே தயாரித்து இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறேன்.



 "சகுந்தலாவின் காதலன்' என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?
 படத்தலைப்பு மட்டுமல்ல படமும் வித்தியாசமாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். படத்தின் தலைப்பில்தான் காதல் இருக்கிறதே தவிர படத்தில் காதலே இல்லை. ஹிட்லரும் காந்தியும் ஒரே வீட்டில் வசித்தால் எப்படி இருக்கும்? யாரை யார் தன் பக்கம் இழுத்துக் கொள்வார்கள்? நான் ஹிட்லர் குணம் கொண்டவன் வேடத்தில் நடிக்க, "தாமிரபரணி' பானு காந்தி குணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பானுவுக்கு இந்தப் படம் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதை இப்போதே நிச்சயாகச் சொல்கிறேன். நடிப்பில் இவர் அடுத்த ரேவதி என்று கண்டிப்பாக பேசப்படுவார்.
 "சகுந்தலாவின் காதலன்' படத்தில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை நகைச்சுவை ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன். நான்தான் படத்தின் கதாநாயகன் என்றாலும் கதையின் நாயகன் பசுபதிதான். அந்த அளவுக்கு ஒரு வலுவான பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார் பசுபதி. "சிவாஜி' படத்தைவிட பிரமாதமான வில்லன் வேடத்தில் அசத்தியிருக்கிறார் சுமன். கருணாஸ், நண்டு ஜெகன், மொட்டை ராஜேந்தரன் ஆகியோர் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கின்றனர். "சக்கரைக்கட்டி', "சிந்து பிளஸ் 2' ஆகிய படங்களுக்கு கேமராமேனாகப் பணியாற்றிய ராசாமதியின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.



 படத்தின் இசையமைப்பிலும் பொறுப்பேற்றிருக்கின்றீர்களே?
 உண்மையில் இயக்குவதைக் காட்டிலும் இசையமைப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். இயக்குநராவதைவிட இசையமைப்பாளராவது இன்னும் கடினம். இயக்குநராவது ஐந்து வருட தவம் என்றால் இசையமைப்பாளராவது பதினைந்து ஆண்டு கால வேள்வி. காதல் கொண்டேன்' படத்தில் விஜய் ஆன்டனி இசையமைப்பில் "நாக்கு மூக்கா' பாடலை எழுதினேன். இந்தப் பாடலின் ட்யூன் என்னுடையது என்றாலும் அதை நான் வெளியே சொல்லவில்லை. ஆனால் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிதான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இதை வெளிப்படையாகக்கூறி என்னைப் பெருமைப்படுத்தினார்.



 நான் இயக்கிய முதல் படத்தில் இடம் பெற்ற எட்டு பாடல்களில் ஐந்தை நான் எழுதியிருந்தேன். எனது இரண்டாவது படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜின் உதவியாளர் ஏ.ஜே.டேனியல் இசையமைத்தார். இதில் இடம் பெற்ற ஒன்பது பாடல்களையும் நான்தான் எழுதினேன். இந்தப் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆயின என்றாலும் "ஊராகாளி' பாடல் நாக்கு மூக்கா' பாடல் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்போது "சகுந்தலாவின் காதலன்' படத்துக்கு ஏ.ஜே.டேனியலும் நானும் இணைந்து இசையமைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் பாடல்களும் எனது முந்தைய படங்களைப் போல கண்டிப்பாக ஹிட் ஆகும்.


thanx = dinamani